“சுபரமண்யா சுப்ரமண்யா சற்றே பாரப்பா
ஒப்பில்லாத தவசீலா நடந்ததைக் கேளப்பா”

உற்றவர் அழுததில் மெல்ல விழித்ததும்
ஊரார் கதைசொன்னார்
கொற்றவன் வந்ததை கேள்வியும் கேட்டதை
ஒவ்வொன்றாய் சொன்னார்
முற்றிய தவத்தில் கனிந்தவர் மெதுவாய்
முறுவல் செய்தாராம்
சக்தியின் லீலை நடப்பதை உணர்ந்தவர்
திருமுகம் மலர்ந்தாராம்

“ஆவது ஆகட்டும் அன்னையின் ஆணை
ஏதென நானறியேன்
வாழ்வின் பொருளை விளங்கிடச் செய்யும்
வித்தகம் நானறியேன்
பவுர்ணமி போலப் பொன்முகம் காட்டிய
காரணம் நானறியேன்
கணமும் கணமும் அவளது திருமுகம்
வேறொன்றும் நானறியேன்”

(பாடல்)
அதே முகம் ..அதே சுகம்..
அதே முகம்… அதேசுகம்
அண்டங்கள் எங்கும் அதேமுகம்
நெஞ்சில் நிறைந்ததும் அதேமுகம்..

பிறவி பலவாகப் பார்த்தமுகம்-என்
கனவில் பலநேரம் பூத்தமுகம்
மறந்து கிடந்தாலும் தேடும்முகம்-ஒரு
மறுமை இல்லாமல் சாடும் முகம்

தீப ஒளியோடு தெரிந்தமுகம்-அட
திசைகள் எல்லாமே நிறைந்தமுகம்
நாபிக் கமலத்தில் எழுந்த முகம்-என்
நாடி நரம்பெங்கும் நிறைந்தமுகம்

அமிர்த லிங்கத்தில் லயித்த முகம் -அவன்
அருந்தும் நஞ்சோடித் தடுத்த கரம்
குமுத மலர்போலக் குளிர்ந்தமுகம்-திருக்
கடவூர் தலம்காக்கக் கனிந்தமுகம்

திறந்தும் திறவாத விழியழகும்-அருள்
துலங்கும் இதழோடு நகையழகும்
நிறைந்த ஒளியாகும் வடிவழகும்-நின்று
நாலும்கதைபேசும் தேவிமுகம்”

அம்பிகை முகமும் அம்பிகை பதமும்
ஆயிரம் கதைகூற
அண்ணல் எழுந்தார் அபிராமியின் மேல்
ஆசையில் கவிபாட
ஆதியும் அந்தமும் இல்லாதவள்மேல்
பாடும் அந்தாதி
ஜோதியின் ஒளிபோல் வானில் வருவாள்
இதுதான் அவள்நீதி

நீண்ட கயிறொரு நூறையும் கட்டி
நிறுத்திய பெரும்பலகை
கீழே நெருப்பும் கனல்விட அதன்மேல்
நின்றே அருட்கவிகவிதை
செவ்விய தமிழில் சுப்ரமணியன்
சொல்லிச் சுடர்வளர்த்தார்
ஒவ்வொரு கவிதை முடியும் பொழுதும்
ஒவ்வொரு கயிறறுத்தார்

அரிகண்டம் பாடுவார் சுப்பிரமணியன்
அறிந்தனர் யாவருமே
அம்பிகை சந்நிதி அதன்முன் வந்தே
திரண்டார் யாவருமே
எரிகிற நெருப்போ பலகைக்குக் கீழே
நெகிழ்ந்தார் அனைவருமே
அபிராமி பட்டர் அபிராமி பட்டர்
என்றார் பரிவுடனே

பட்டர் பாடினார் அந்தாதி
விநாயக்ர் காப்பை எடுத்தோதி

“தாரமர்க் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே உலகேழும் பெற்ற
சீரபிராமி அந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே”

எடுத்த பாடலின் அந்தம் தான்
அடுத்த பாடலுக்கு ஆதியுமாம்
தொடுத்தார் பட்டர் அந்தாதி
அதுதான் அபிராமி அந்தாதி

“உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உண்ர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே”

“துணையும் தொழும்தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையும் மென்பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே”

“சென்னியது உன்பொன் திருவடித் தாமரை-சிந்தையுள்ளே
மன்னியது உன்திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய உன்னடியாருடன் கூடி முறைமுறையே
மன்னியது என்றும் உன்பரஆகம பத்ததியே”

“ததியுறு மத்தில் சுழலும் என்னாவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வந்து சென்னி
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே”

“தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே”

பட்டர் கவிதை பாடப் பாட
பரவசம் சூழ்ந்தது ஊரெங்கும்
கெட்டி இருட்டாய் அமாவாசை
இரவு படர்ந்தது வானெங்கும்

வாஞ்சைப் புதல்வன் வாக்கு பலித்திட
வானில் நிலவும் வாராதோ
தீஞ்சுவைக் கவிகள் பட்டர் பாட
தேவியின் திருச்செவி கேளாதோ
அழுதார் தொழுதார் அனைவரும் அங்கே
அரண்டார் வெருண்டார் அச்சத்திலே
எழுபத்தொன்பதாம் பாடலைஅங்கே
பட்டர் இசைத்தார் உச்சத்திலே

“விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம்மோடு என்ன கூட்டினியே”

பாடிய கணமே பட்டரின் பார்வையில்
பளீரென எழுந்தாள் அபிராமி
மூடிய இருளைக் கிழிக்கும் நெருப்பாய்
மோகனச் சிரிப்புடன் அபிராமி
தேடிய பிள்ளையின் விழிகளில் தெளிவாய்
தெரிந்தாள் தேவி அபிராமி
தாடங்கத்தை மெல்லக் கழற்றி
வானில் எரிந்தாள் அபிராமி

வீசிய தாடங்கம் ஒளியாய் எழுந்தது
பேசித் திரண்டவர் பார்வையில் தெரிந்தது
கூசுது கண்கள் கூட்டம் சிலிர்த்திட
தேசுறு நிலவாய் திரண்டே எழுந்தது

கண்களில் தெரிந்தது வெண்ணிலவு
அமாவாசையில் அருள்நிலவு
நிறைவாய் எழுந்தது ஒளிநிலவு
கறையே இல்லா முழுநிலவு

தக்கத் தகதிமி தோம்திமிதிமியென
தாளம் எழுந்தது எங்கெங்கும்
பக்தனுக்காக பரிவுடம் எழுந்த
சக்தியின் புகழ்தான் எங்கெங்கும்
வெட்கத்தாலே நடுங்கிய அரசன்
பட்டரின் பாதங்கள் பணிந்தானே
பக்தரின் சந்ததி நெல்பெறும் விதமாய்
செப்புப் பட்டயம் தந்தானே

“திருக்கடவூர் வட்டம் ஆக்கூர் வட்டம்
திருவிடைக்கழி வட்டம்,நல்லாடை வட்டம்
செம்பொன்பள்ளி வட்டம் ஆகியவற்றில் உள்ளோர்
சந்திரசூரியர் உளநாள் மட்டும்
அபிராமி பட்டர் வழித்தோன்றல்களுக்கு
நெல்லளக்க வேண்டுமென்னும் அரச பட்டயம்”

நூறு பாடல்கள் பாடிய பட்டர்
நூல்பயன் பாடி நிறைவுசெய்தார்
ஆறுபோலவே பதிகமும் பாடி
அம்பிகை அருளில் லயித்துவிட்டார்-பதி
னாறு செல்வங்கள் என்னென்ன
பட்டியல் அதிலே கொடுத்துவிட்டார்

“கலையாத கல்வியும் குறையாத வயதும் ஒரு
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும்
ஒரு துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவி, பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே”

திருக்கடவூரில் அமுதகடேசன்
திருவடி மங்கலமே
திருக்கடைக்கண் அபிராமவல்லி
மலரடி மங்கலமே
அருள்நெறி நின்ற அபிராமி பட்டர்
திருநெறி மங்கலமே
விரும்பி இக்கதையைப் பார்த்தவர் கேட்டவர்
வாழ்வினில் மங்கலமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *