என் பள்ளிப் பருவத்தில் என்னினும் சற்றே மூத்த சிலர் கல்லூரி மாணவர்களாக இருந்த வண்ணம் தமிழ் மேடைகளில் புதியன பலவும் செய்தார்கள். அத்தகைய குழுக்கள் கோவையில் வளர்ந்தன. அரசு பரமேசுவரன் தென்றல்ராஜேந்திரன், உமா மகேசுவரி, போன்றோர் உருவாக்கிய கலைத்தேர் இலக்கிய இயக்கத்தில் நான் இணைந்தேன். அதே காலகட்டத்தில் கோவை என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியில் உருவான அமைப்பு இளமை இலக்கியக் கழகம்.

அவைநாயகன் காளிதாஸ் பி.பி. ஆனந்த் போன்றோர் அதன் பிரதானிகள். இவர்களில் ஆவேசமானவர் காளிதாஸ். அமைதியானவர் அவைநாயகன். ஆரவாரமும் கலகலப்பும் மிகுந்தவர் பி.பி.ஆனந்த். மேடைகளில் ஜாடை வழியே சொல்லைக் கண்டறியும் போட்டிகள் ஆனந்த் மேடையேறினால் களைகட்டும் . விளையாட்டுத்தனமும் நடன அசைவுகளுமாய் அரங்கை கலகலப்பாக்கி விடுவார்.

தமிழகத்தில் முதன் முதலில் உதயமான அப்போதைய ஒரே தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் வார்த்தை விளையாட்டு நிகழ்வை நடத்தி இலட்சக்கணக்கான ரசிகர்களின் அபிமானம் பெற்றார். குறிப்பிட்ட காலம் வரை நட்சத்திர அந்தஸ்துடன் உலா வந்தார்.

காளிதாஸ் ஓசை என்னும் சுற்றுச்சூழலமைப்பைத் தொடங்கி ஓசை காளிதாசனாக பெயர்பெற்றுவிளங்குகிறார். அவைநாயகன்படைப்பாளராகவும் திறனாய்வாளராகவும் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் திகழ்கிறார்.

இன்று காலை இந்த இருவரின் முகநூல் குறிப்புகள் வழியே பி.பி. ஆனந்த் என்னும் ஆனந்தகீதன் மறைவுச் செய்தியை அறிந்து கொண்டேன். சின்னத்திரையில் குறுகிய காலத்தில் கொடிகட்டி பின்னர் அதிகம் அறியப்படாத நிலையிலேயே இதுவரை இருந்த அவரின் ஆரம்பகால வசீகரச் சிரிப்பும் விளையாட்டுத் தனமும் நினைவில் நிற்கும் என்றென்றும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *