ஆசிரியர் ஒருவர் தன் பணியை ஆழமாக நேசித்து மாணவர்கள் மேல் நிபந்தனையில்லாத நம்பிக்கையும் கொண்டிருந்தால் அவர் காலங் காலமும் நினைக்கப்படுவார் என்பதற்கு நிகரற்ற உதாரணம் எங்கள் தலைமை ஆசிரியர் திரு பிவி பத்மநாபன் அவர்கள் நான் மணி மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோது அவர் உதவித் தலைமை ஆசிரியர். இரண்டு ஆண்டுகளில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்
அவர் என் வாழ்வில் பல திருப்புமுனைகளுக்குக் காரணமாக போகிறார் என்பது எனக்கு அப்போது தெரியாது

நான் பத்தாவது படிக்கும்போது எங்கள் பள்ளியில் தாளாளர் திரு சின்னசாமி நாயுடு மறைந்தார் கோவை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற கல்வியாளராக அறியப்பட்டவர் அவர்

அவருக்கு நான் ஓர் இரங்கல் கவிதை எழுதினேன் .
விடிவெள்ளி விடை பெற்றுச் சென்றதோ இனி
வாழுங்கள் என் வழியில் என்றதோ
அடிவேரும் அடியோடு சரிந்ததோ
அரியதொரு சரித்திரமே முடிந்ததோ
என்று தொடங்கும் அந்த கவிதை இப்போது முழுமையாக என் நினைவில் இல்லை
அந்த கவிதையை எங்கள் தமிழாசிரியர் புலவர் க.மீ வெங்கடேசன் தலைமையாசிரியரிடம் கொண்டு போய் காண்பித்தார் அன்று முதல் தலைமையாசிரியரின் பிரியத்திற்குரிய மாணவனாய் ஆனேன்

பள்ளியின் சார்பில் தாளாளருக்கு இரங்கல் கூட்டம் நடந்தது பள்ளியின் நிர்வாக தலைவரும் பெரும் தொழில் அதிபரும் ஆன கம்பன் அறநெறிச் செல்வர் ஜி கே சுந்தரம் அவர்கள் நிர்வாகத்தின் சார்பில் இரங்கல் உரை நிகழ்த்தினார் ஆசிரியர்கள் சார்பில் தலைமையாசிரியர் அஞ்சலி உரை நிகழ்த்தினார் மாணவ மாணவிகள் சார்பில் இரங்கல் கவிதை வாசிக்கும் வாய்ப்பு எனக்குத் தரப்பட்டது

அதன் பிறகு சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் என்னை மேடையேற்றி அழகு பார்ப்பதில் அவருக்கு தனி மகிழ்ச்சி
நான் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி விடுமுறையில் வீட்டில் இருந்த போது தலைமை ஆசிரியர்கள் மாநாடு நடந்தது வீட்டுக்கு ஆள் அனுப்பி என்னை அந்த மாநாட்டில் ஆசிரியர்கள் பற்றி கவிதை வாசிக்கச் செய்தார்
படிப்பில் நான் அவ்வளவு சூட்டிகை அல்ல அதுபற்றி ஆசிரியர்கள் யாராவது புகார் சொன்னால் கூட “விடுங்க சார் 100 மார்க் எல்லாரும்தான் வாங்கறான். இவனுக்கு தான் மரத்தைப் பார்த்தா வித்தியாசமாக தோணுது மேகத்தைப் பார்த்து கவிதை எழுத தோணுது” என்பார்.

பள்ளி விடுமுறை நாட்களில் நான் பள்ளியைக் கடந்து பாப்பநாயக்கன் பாளையத்தில் என் நண்பர்கள் வீட்டுக்கு விளையாட செல்லும் போதெல்லாம் அவருடைய வாகனம் பள்ளியில் நிற்பதைப் பார்த்து இருக்கிறேன்
ஒரு முறை என்னை அழைத்து” உனக்கு என்ன பத்தி என்ன தோணுதோ அதை கவிதையா எழுதிக் கொடு. என்னை திட்டி எழுதினாலும் பரவாயில்லை” என்றார்
அவரைப் பற்றி எண்சீர் விருத்தம் ஒன்று எழுதிக் கொடுத்தேன்
அந்தக் கவிதையில் எனக்கு நினைவில் இருக்கிற வரிகள் இவை
விட்டுவிட்ட விடுமுறை நாள் தன்னில் கூட
வந்தமர்ந்து பார்த்திருப்பார் பள்ளி தன்னில்
கட்டிடத்தில் சிறு கீறல் விழுந்தால்கூட
கண்களிலே குருதியினை வடிப்பார் அன்றோ

பள்ளிக்கு அருகே செந்தில் உணவு விடுதி என்றொரு உணவகம் இருந்தது. திரைப்பட தயாரிப்பாளர் நஞ்சப்பன் அவர்களுடைய உணவகம். ஒரு ஞாயிறு முன்னிரவில் நண்பர்கள் வீட்டுக்கு எல்லாம் போய்விட்டு அந்த உணவகத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பக்கத்தில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர்

“தெரியுமா மணி ஹை ஸ்கூல் பஸ் ஏதோ பிக்னிக் போய்விட்டு வந்து வழியில ஆக்சிடன்ட் ஆயிடுச்சாம். பசங்களுக்கெல்லாம் நல்ல அடியாம்”
சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் பதறிப் போனேன் அப்படியே கை கழுவிவிட்டு சிலர் தெருக்கள் தள்ளி இருந்த தலைமையாசிரியர் வீட்டுக்கு விரைந்தேன் .கதவைத் தட்டி விவரம் சொன்னேன்.

அவர் பதிலுக்கு காத்திருக்காமல் விபத்து நடந்ததாக சொன்ன இடத்தை நோக்கி என் சைக்கிளில் சென்றேன் திரும்பிப் பார்த்தால் தலைமையாசிரியர் இருசக்கர வாகனம் ஒன்றிலும் பேருந்துகளுக்கு பொறுப்பான ஆசிரியர் வெங்கடபதி இன்னொரு வாகனத்திலும் வந்து கொண்டிருந்தார்கள்.” பள்ளியிலிருந்து சுற்றுலா செல்ல நாம் எந்த பேருந்துக்கும் அனுமதி தரவில்லையே! எப்படி போனார்கள்?” என்று இருவரும் பதட்டத்தோடு பேசிக்கொண்டிருந்தார்கள்
பத்து நிமிடங்களுக்குப் பிறகுதான் விபத்து ஏதும் நடக்கவில்லை என்றும் நான் கேள்விப்பட்டது வெறும் வதந்தி என்றும் தெரியவந்தது

தலைமையாசிரியர் என்ன சொல்வாரோ என்று அச்சத்துடன் அருகே சென்றேன் என்னைத் தட்டிக் கொடுத்து “கேள்விப்பட்டதும் வந்து சொன்ன பார்த்தியா! இந்த பொறுப்புணர்ச்சி எப்போதும் வேணும்” என்று பாராட்டி விட்டு கொஞ்சம் கூட சலிப்பையோ கோபத்தையோ காட்டாமல் திரும்பிப் போனார்

நான்கு வாக்கியங்களுக்கு இடையே கட்டாயம் ஒரு பழமொழியை யாவது சொல்லிவிடுவார் பிவி பத்மநாபன் என்றால் பழமொழி பத்மநாபன் என்று மாணவர்கள் பேசிக்கொள்வோம் அவர் பணி ஓய்வு பெறுகிற போது முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. நான் அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். முன்னாள் மாணவர் சங்கத்தில் நான் உறுப்பினர் கூட இல்லை எனக்கு சொல்லி அனுப்பி விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கச் செய்தார்.

முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலாளராக இருந்த சசி விளம்பர நிறுவன உரிமையாளர் திரு சாமிநாதன் அந்த மேடையிலேயே என்னை அழைத்து ‘நாளை வந்து எங்கள் நிறுவனத்தில் சேர்ந்து கொள்ளுங்கள் “என்றார்.
“நான் படித்துக் கொண்டிருக்கிறேன் வேலைக்கு இப்போது வருவதாக இல்லை” என்றதும் மாலை 4 முதல் 6 மணி வரை வந்தால் போதும் என்ற வற்புறுத்தி வரச்செய்து 1991ல் தினம் இரண்டு மணி நேரம் வேலைக்கு 750 ரூபாய் சம்பளம் கொடுத்தார் சாமிநாதன். ஆறே மாதங்களில் அதை 1250 ரூபாய் ஆகவும் உயர்த்திக் கொடுத்தாள்

பள்ளி முழுமைக்கும் நான் ஒரு கவிஞனாக அறிமுகமாகவும் கல்லூரியில் படிக்கும்போதே எல்லாத் சுதந்திரங்களும் கொண்ட ஒரு வேலையில் சேரவும் தன்னையும் அறியாமல் காரணமாயிருந்தவர் பத்மநாபன் அவர்கள்

பேச்சு துறையில் நான் மெல்ல வளர்ந்து கொண்டிருந்த போது என்னை மணி மேல்நிலைப் பள்ளிக்கு அழைத்து பேசச் சொன்னார். அப்போது அவர் பள்ளியின் தாளாளர் பொறுப்புக்கு வந்து இருந்தார். நான் குழந்தைகளுக்கு நிறைய கதைகள் சொல்லி ஒரு மணி நேரம் பேசிவிட்டு இருக்கைக்கு வந்ததும் என் தோளில் கை வைத்து “யூ ஆர் எ டீச்சர்” என்றார்

தேர்ந்த நிர்வாகி ஆகும் சிறந்த ஆசிரியராகவும் விளங்கியவர் தன் மனைவியின் மரணத்திற்கு பிறகு மெல்ல மெல்ல முதுமையின் சில நோய்க்கூறுகளுக்கு ஆளானார். தன் பெயரை கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு போய்விட்டது.

ஆனாலும் எங்கள் நண்பர்கள் அவரை முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு அழைத்து வந்து கௌரவப்படுத்தினார்கள்.
மணி மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே ஆசிரியராக பணிக்குச் சேர்ந்தவர் அவர்.
பாரம்பரியச் சிறப்பு மிக்க மணி மேல்நிலைப்பள்ளியில் அவருக்கு முன்னதாக தலைமைப் பொறுப்பில் இருந்த இருபெரும் கல்வியாளர்கள் திரு.சின்னசாமி நாயுடு திரு.ஏகாம்பரம் ஆகியோர் மகத்தான முத்திரை பதித்திருந்தார்கள்.அவர்களுக்குப் பின்னர் பொறுப்பேற்று புகழ்வாய்ந்த பள்ளியைத் திறம்படநிர்வகித்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகச்சிறந்த வழிகாட்டியாய் விளங்கினார்.

சென்னையில் தன் புதல்வர் வீட்டில் 25.06.2019 அன்று அவர் மறைந்தார். என்னைப்போல் நூற்றுக்கணக்கான மாணவர்களிடம் அவரைப் பற்றி நல்ல விதமாகச் சொல்ல இப்படி நூற்றுக்கணக்கான கதைகள் இருக்கும்

மணி மேல்நிலைப் பள்ளியின் மைதானத்தில் எப்போதும்உலவிக்கொண்டிருக்கும் அவருடைய மூச்சுக்காற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *