அறிமுகமாய் சில வார்த்தைகள்

1968 ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி கோவையில் பிறந்தார். கோவை ஏ.எல்.ஜி மெட்ரிகுலேஷன் பள்ளி, மணி மேல்நிலைப் பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்களில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியற் கல்லூரியில் சமூகவியல் இளங்கலை மற்றும் தகவல் தொடர்பியல் முதுகலை பயின்றார்.

சசி விளம்பர நிறுவனம், சென்னை பிஃப்த் எஸ்டேட் கம்யூனிகேஷன்ஸ் போன்ற முன்ணணி விளம்பர நிறுவனங்களின் படைப்பாக்கப் பிரிவில் பணிபுரிந்த இவர் 1994ல், COPY CATS CREATIVE CONSULTANCY என்கிற பெயரில் படைப்பாக்க ஆலோசனை மையம் ஒன்றைத் துவங்கினார்.

இவரது கருத்துருவாக்கத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகை – வானொலி விளம்பரங்களும், பல தொலைக்காட்சி விளம்பரங்களும் உருவாகியுள்ளன.

1995ல், இவரது கருத்துருவாக்கத்தில் மாபோஸேல் நிறுவனம் தயாரித்த எய்ட்ஸ் தடுப்பு விளம்பரம், தேசிய அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, வெள்ளிப் பதக்கம் பெற்றது. கல்லூரிகள், பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் தலைமைப் பண்பு மேம்பட பல பயிலரங்குகளைத் தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்.

பல நிறுவனங்களுக்கான ஊழியர்கள் தன்னொழுக்கம், செயல்திறன் பயிற்சிகளையும் நடத்தி வருகிறார்.

இதழியலில்

“நமது நம்பிக்கை” என்ற தலைப்பில் தமிழ் கூறு நல்லுலகெங்கும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்டிருக்கும் சுயமுன்னேற்ற மாத இதழ் ஒன்றைத் தொடங்கி, ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.

பொதுவாழ்வில்

தென்னகத்தின் பல பகுதிகளிலும் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், குவைத், அபுதாபி, பாரீஸ், மொரீஷியஸ், சுவிட்சர்லாந்து போன்ற அயல்நாடுகளிலும் ஆயிரக்கணக்கான இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்

இவரது கவிதைகள் பல கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

இவரது நிகழ்ச்சிகள், பொதிகைத் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி, ஸ்டார் விஜய் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி போன்றவற்றில் ஒளிபரப்பாகி வருகின்றன.

இவர் தமிழில் வெளியான “கஸ்தூரி மான்” திரைப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறார்.

வகித்து வரும் பொறுப்புகள்

  • மத்திய அரசின் முன்னாள் நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களால் தொடங்கப்பட்டுள்ள எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் அறங்காவலர்.
  • கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நிறுவனத் தலைவராகக் கொண்டு இயங்கிவரும் வெற்றித்தமிழர் பேரவையின் மாநிலப் பொதுச் செயலாளர்.
  • சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களால் உருவாக்கப்பட்ட கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் திட்டக் குழு உறுப்பினர்.
  • சிகரம் உங்கள் உயரம் மனிதவள மேம்பாட்டு இயக்கத்தின் இயக்குனர்.

படைப்புகள்

இதுவரை 65நூல்களை படைத்துள்ளார் இவற்றில்

  • கவிதை நூல்கள் 10
  • சுயமுன்னேற்ற நூல்கள் 21
  • மொழிபெயர்ப்பு நூல்கள் 13
  • வாழ்க்கை வரலாற்று நூல்கள் 6
  • இலக்கிய நூல்கள் 9
  • ஆன்மீக நூல்கள் 6
  • இவை தவிர 9 நூல்கள் பதிப்பித்துள்ளளார் 9 நூல்கள் தொகுத்துள்ளார்

பெற்ற விருதுகள்

  • 2018இல் கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதன் அறக்கட்டளை வழங்கிய    கவியரசர் விருது
  • 2017ல் சென்னை பொற்றாமரை கலை இலக்கிய அரங்கம் வழங்கிய “பொற்றாமரை “விருது
  • 2015ல் சென்னை சோமசுந்தரர் ஆகமத் தமிழ்ப்பண்பாட்டு ஆராய்ச்சி
    மன்றம் வழங்கிய, “திருமந்திரத் தமிழ்மாமணி” விருது.
  • 2015ல் நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை வழங்கிய “நாமக்கல் கவிஞர் நற்றமிழ் “விருது.
  • 2015ல் பொள்ளாச்சி ராயல்ஸ் சுழற்சங்கம் வழங்கிய “வாழ்நாள் சாதனையாளர்” விருது.
  • 2015ல் – சென்னை கம்பன் கழகம் வழங்கிய, கம்பன் அடிப்பொடி நினைவுப்பரிசில் (பாரத ரத்னா MS.சுப்புலட்சுமி – திரு.சதாசிவம் தம்பதியர் நிறுவியது).
  • 2014ல் அம்பத்தூர் கம்பன் கழகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கிய” தமிழ்ச்சுடர்” விருது.
  • 2012ல் ஜே.ஜி.கண்ணப்பன் வாசுகி அறக்கட்டளை வழங்கிய “நற்றமிழ் நல்லறிஞர்” விருது.
  • 2008ல் ரோட்டரி கேலக்ஸி சங்கம் வழங்கிய ரோட்டரி சங்கங்களின் உயரிய விருதான FOR THE SAKE OF HONOUR விருது.
  • 2008ல் இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றமும் தமிழ்ப்பண்பாட்டு நிறுவனமும் வழங்கிய “தமிழ்ச் சான்றோர்” விருது.
  • 2008ல் அனைத்திந்திய வ.உ.சி.பேரவை வழங்கிய “தன்னம்பிக்கை நாயகன்” விருது.
  • 2007ல் தமிழ்நாடு அரசு வழங்கிய 2006ம் ஆண்டுக்கான “கலைமாமணி” விருது.
  • 2006ல் ‘ரசனை’ மாத இதழுக்கு சிறந்த இலக்கிய இதழுக்காக எழுத்தாளர் திரு. கி.ராஜநாராயணன் வழங்கிய “கரிசல் கட்டளை” விருது.
  • 2006ல் திருவாரூரில் ஜேசீஸ் மண்டல மாநாட்டில் வழங்கப்பட்ட “இளம் சாதனையாளர்” விருது.
  • 2003ல் திருப்பணித்திலகம். த. நாகராசனார் அறக்கட்டளை வழங்கிய “நற்கவித்திலகம்” விருது.
  • 2003ல் தஞ்சாவூர் ஜேசீஸ் வழங்கிய “தன்னிகரற்ற இளைஞர்” விருது.
  • 1998ல் கவிஞர் வைரமுத்து வழங்கிய “கவிஞர்கள் திருநாள்” விருது.

இசைத் தமிழில்…

பல இசைத் தகடுகளுக்கும், சில திரைப்படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். இவரது பாடல்களை டாக்டர். கே.ஜே. யேசுதாஸ், திரு. ஏஸ். பி. பாலசுப்ரமணியம், திரு. சீர்காழி சிவ சிதம்பரம், திரு. பரத்வாஜ், திரு. புஷ்பவனம் குப்புசாமி, திருமதி. வாணி ஜெயராம், திருமதி. சுதா ரகுநாதன், செல்வி. சுவர்ணலதா, செல்வி. சின்மயி, திருமதி. கோவை கமலா, திரு. வி.வி. பிரசன்னா, திருமதி. ஹரிணி, திருமதி சுஜாதா, திருமதி. ஆனுராதா ஸ்ரீராம், செல்வி தீபா மிரியம், திருமதி.ஸ்ரீலேகா பார்த்தசாரதி, திரு. மனோ, திரு. உன்னிகிருஷ்ணன், திரு. உண்ணி மேனன், திரு.ஹரீஷ் ராகவேந்திரா, திரு. கிருஷ்ணராஜ் ஊள்ளிட்ட பிரபல பாடகர்கள் பாடியுள்ளனர்.

‘காதல் உறவினில் கலைகளில் உணவினில்
ஈதல், புரத்தல், இயற்கையை ரசித்தல்
வாழ்தல் பற்றுவை வாழ்க்கையைக் கற்றுவை’

என்கிற கவியரசு கண்ணதாசன் வரிகளே தன் வாழ்க்கை வாசகம் என்கிறார்.