தொண்டு என்கிற போர்வையில் சுயநலமான போக்குகள் அரங்கேறிக் கொண்டு இருக்கிற சூழல் எந்தக் காலத்திற்கும் தேவையான அர்ப்பணிப்பு உணர்வை அழகாக பேசுகிற திருத்தொண்டர் புராணம் தன்னலம் இல்லாத தொண்டர்களை வளர்த்தெடுப்பதற்கான வழிகாட்டி நூல்.
அடிப்படையில் திருத்தொண்டர் புராணம் ஆன்மீக நூலாக இருந்தாலும் அது பேசப்படுகிற நாயன்மார்கள் இறைவனின் பெயரால் சமூகத் தொண்டை மேற்கொண்டவர்கள். ஆடைகள் வழங்குதல், திருவோடு வழங்குதல், அன்னமிடுதல் போன்றவற்றை தங்கள் லட்சியங்களாக வகுத்துக் கொண்டு அன்றாடம் செய்து வந்தனர்.
ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் பெரும்பஞ்சம் நேர்ந்தபோது திருவீழிமிழலையில் திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் தனித்தனி மடம் அமைத்து தங்கியிருந்தனர். பஞ்சம் போக்குவதற்காக பஞ்சத்தில் நிவாரணம் வழங்குவதற்காக இருவருக்கும் தினம் தினமும் ஒரு பொன்னை இறைவன் அருளியிருக்கிறார்.
திருஞானசம்பந்தருக்கு அருளிய பொன் விரைவில் விலை போயிற்று. ஆனால் திருநாவுக்கரசருக்கு வழங்கிய பொன் விலைபோக சற்று காலமாயிற்று. திருநாவுக்கரசர் உழவாரப் பணி செய்பவர். அது உழைப்பினால் வந்த ஊதியம். திருஞான சம்பந்தர் பதிகங்கள் மட்டுமே பாடுபவர். ஆனாலும் தன்னை தொண்டிலே ஈடுபடுத்திக் கொண்டவர் அல்ல. இதுகூட மையக் கருத்தல்ல. கிடைக்கிற பணத்தைக் கொண்டு வருகிறவர்களின் பசியை ஆற்றுதல் அதிலும் பஞ்ச காலத்தில் அப்படி பணிபுரிதல் என்பது ‘மக்கள் தொண்டுதான் மகேசன் தொண்டு’ என்கிற கொள்கைக்கான மூல சாட்சியாக திருத் தொண்டர் புராணம் விளங்குவதை உணர்த்துகிறது.
“அல்லார் கண்டத்து அண்டர்பிரான்
அருளால் பெற்ற படிக்காசு
பல்லாறு இயன்ற வளம் பெருக
பரமன் அடியார் ஆனார்கள்
எல்லாம் எய்தி உண்க என
இரண்டு பொழுதும் பறை நிகழ்த்தி
சொல்லி சாற்றிச் சோறிட்டார்
துயர்கூர் வறுமை தொலைத்திட்டார்”
பஞ்ச காலத்தில் பறை அறிவித்து அனைவருக்கும் பசியாற்றிய பணியை இந்தத் திருமடங்கள் செய்ததை சேக்கிழார் சொல்கிறார். பரமன் அடியார் ஆனவர்களுக்கு மட்டும்தான் பசியாற்றப் பட்டதா என்றால் இல்லை. ‘நேர வருபவர் யாவராயினும்’ என்று சொல்லுகிறார். யார் வந்தாலும் பசியென்று வந்தவர்களுக்கு பசி தவிர்க்கிற பணியை அந்தத் திருமடங்கள் மேற்கொண்டன.
இறைவனுடைய திருப்பெயரால் இயங்குகின்ற எந்த ஓர் இயக்கமும் மக்களுடைய பசியையும் வருத்தத்தையும் துடைக்கின்ற பணியைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது திருத் தொண்டர் புராணம் தருகிற செய்தி.
மரபின் மைந்தன் ம.முத்தையா