ஒருவருக்கு அறிவிக்கப்பட்ட விருதை அந்த தளத்தில் நின்றே விவாதிக்க வேண்டும். தனிப்பட்ட அபிப்பிராய பேதங்கள், கருத்தியல் மோதல்கள், முரண்பாடுகள், தனிப்பட்ட முறையில் பேசப்படும் புகார்கள் ஆகியவை இங்கு விவாதப் பொருள் அல்ல. நவீன இலக்கியம், பின் நவீனத்துவ இலக்கியம் ஆகியவை தமிழ் இலக்கியப் பரப்பின் ஒரு தரப்பு மட்டுமே. அவை மட்டும் தான் இலக்கியங்களா என்றால் இல்லை.தமிழின் மரபிலக்கியம் முழு வல்லமையுடன் இன்றும் உருவாகி வருகிறது. மரபு வடிவத்தில் மட்டுமின்றி புதுக்கவிதையில் கூட மரபார்ந்த கருதுகோள்களுடன் வெளிப்படைத் தன்மை, நேர்மறை எண்ணங்கள் அழகியல் அம்சங்கள் கொண்ட படைப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

அவற்றிலும் தனித்தன்மை கொண்ட படைப்பாளர்களை காலம் அடையாளம் கண்டு கொண்டாடவே செய்கிறது.

ஒருவர் எழுதும் எழுத்துகளை வாசகர்கள் மதிப்பதற்கு சில காத்திரமான காரணங்கள் உண்டு. ஒரு வாசகர் கொண்டிருக்கும் ரசனை நீங்கள் முன்னிறுத்த விரும்பும் ரசனை தளத்திலிருந்து மாறுபட்டு இருப்பதாலேயே அந்த வாசகர்களை தரம் குறைந்த வாசகர்கள் என அழைப்பது மிக மிகத் தவறு. அது வெறும் ஆணவம் மட்டுமே,

இந்த கணக்கில் ஒரு வாசகர் இன்னும் திறந்த மனதுடன் இருக்கிறார். தன்னுடைய பணத்தையும் நேரத்தையும் செலவழித்து நூல்களை தேர்ந்தெடுத்து வாசிக்கிறார். பிடித்திருந்தால் அந்த எழுத்தாளரை தொடர்கிறார் தனிப்பட்ட முறையில் அந்த எழுத்தாளருக்கும் அந்த வாசகருக்கும் நடுவே சில பார்வைகளில் தீவிர முரண்பாடு இருக்கலாம். உதாரணமாக இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நான் சிந்தனைப் போக்கில் வலதுசாரி தரப்பைச் சேர்ந்தவன். அது ஒரு வாசகனாக என் நிலைப்பாட்டை பாதிப்பதில்லை.

கவிஞர் சிற்பி அவர்கள் சமீபத்தில் ஒரு செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதாக கேள்விப்பட்டேன்.ஞானபீடம் விருது தேர்வுக் குழுவில் அறிஞர் தெ.பொ.மீ. அவர்கள் இடம்பெற்றிருந்தாராம். அந்த ஆண்டு பாவேந்தர் அவர்களுக்கு ஞானபீடம் விருது தருவதாக பரிசீலனை எழுந்ததாம். தெ.பொ.மீ அவர்கள் கருத்தியல் ரீதியாக பாவேந்தருடன் முரண்பட்டிருந்தாலும் அந்த விருது பாவேந்தருக்கு தரப்பட்டாக வேண்டும் என்பதற்கான காரணங்களை அந்த கூட்டத்தில் அடுக்கினாராம். ஆனால் பாவேந்தர் சில நாட்களிலேயே மறைந்து விட்ட காரணத்தால் தேர்வு நிலையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த கேரள கவிஞர் ஒருவருக்கு விருது வழங்கப்பட்டன.

அறிஞர் தெ.பொ.மீ. அவர்களின் இந்த அணுகுமுறை தான் தமிழ்த்தன்மைக்கே உரிய சான்றாண்மை.

கவிஞர் வைரமுத்து அவர்களைப் பற்றி இதுவரை நான் எழுதிய நூல்கள் 3.
1. என் மேல் விழுந்த மழைத்துளிகள்
2. ஒரு தோப்புக்குயிலாக
3. ஒளியை செதுக்கும் உளி

இவை நீங்கலாக “வைரமுத்தியம்” சர்வதேசக் கருத்தரங்கில் நான் வாசித்த கட்டுரையின் சில பகுதிகள் இந்த இடத்திற்கு பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

கவிதையை வாசனைத் திரவியத்திற்கு ஒபபிட்டார் மேல்நாட்டு அறிஞர்..பால் ரிட்ச்சர்.
“பூசிக்கொண்ட வாசனை திரவியம் ஆவியான பிறகும் அதன் மணம் ஆடையில் தங்குவது போல் வாசித்து முடித்த பிறகும் கவிதையின் நறுமணம் நம் ஆன்மாவில் தங்கியிருக்கும்” என்றார் அவர். (Poetry is a perfume, which on evaporation leaves the essence of beauty in our soul)
அந்த மகத்தான அனுபவத்தை நமக்குத் தர கவிதையின் எத்தனையோ அம்சங்கள் காரணிகள் ஆகின்றன ‌
வடிவச் செம்மை ,வசப்படுத்தும் வார்த்தைகள், உலுக்கும் உள்ளடக்கம், உள்ளீட்டுக்கு ஏற்ற ஓசை நயம், என பற்பல காரணிகளின் கூட்டுக் கலவை பாட்டு வடிவம் பெறும் போது பூரணமான வாசிப்பு அனுபவம் பொலிகிறது..
தமிழ் மரபில் ஆழங்கால் பட்ட புலமையும் எதையும் புதிதாய் சொல்லும் வளமையும் அறிவையும் உணர்வையும் சரிவிகிதத்தில் சங்கமிக்க செய்யும் நேர்த்தியும் படைப்புலகில் கவிப்பேரரசு வைரமுத்துவின் தனித்தன்மைகளுக்கான தளங்கள்.
” புதுக்கவிதை என்றும் புகழ் மரபு என்றும்
குதிக்கிறதே இங்கிரண்டு கூட்டம்
எது கவிதை?
வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா
சூழும் பகைவருக்கு சொல்
என்று மரபுக்கும் புதுமைக்கும் வெண்பாப் பாலம் அமைத்தவர் அவர்.
 கவிதை வெளிப்பாட்டுக்கு மரபு வடிவத்தை தேர்ந்தெடுக்கும் போதெல்லாம் அதன் இலக்கணச் செம்மை இம்மியும் பிசகாமல் புதுமையின் வீச்சு துளியும் குலையாமல் எழுதிக் காட்டும் வல்லமை வாய்க்கப் பெற்றவர்.
“மரபுக் கவிதை என்பது ஆளத் தெரிந்தவன் கைகளில்
 அற்புதமான ஆயுதம்”என்று இயல் வரையறை செய்த அவரின் கவிதைகளே இந்த வரையறைக்கான இலக்கணங்களாகவும் இலக்கியங்களாகவும் திகழ்கின்றன.
 இனிமேல் வரக்கூடிய நாட்களுக்கும் சில அடிப்படைகள் மாறப்போவதில்லை.
சூரியன்- நிலவு- வானம்- மழை- வெய்யில் -பனி என எத்தனையோ அம்சங்கள் ஒரே தாளகதியில் தங்கள் ஓயா நடனத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்க அவற்றை சத்திய சாட்சியாக வைத்து சமுதாயம் உருவாகி எத்தனையோ மாற்றங்களைக் கண்டு வருகிறது.
மதுரையின் பல்லாயிரம் ஆண்டு கால பெருமையை கவிஞர் வைரமுத்து பேச முற்படுகிறார்.
வானமும் பூமியும் மாறாதது போல அந்த கவிதையின் வடிவம் மாறவில்லை. ஆனால் ஒவ்வொரு பகுதியிலும்
 யுகங்கள் சுழன்று சுழன்று மாறி வருவதை அந்தக் கவிதை காட்டுகிறது
வாசித்துக்கொண்டே வருகிற போது வரலாற்றின் வளர்ச்சியும்  மாற்றமும் தளர்ச்சியும் நம் அகக்கண்களில் காட்சிகளாய் விரிகின்றன.
“பாண்டியர் குதிரைக் குளம்படியும்- தூள்
பறக்கும் இளைஞர் சிலம்படியும் -மதி
தோண்டிய புலவர்தம் சொல்லடியும்- இளம்
தோகைமார்தம் மெல்லடியும்
மயங்கி ஒலிக்கிற மாமதுரை இது
மாலையில் மல்லிகைப் பூ மதுரை
தொன்மை மிக்க மதுரை மண்டலத்தை இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் ஆள வந்தவர்களின் பட்டியல் இங்கு பாட்டாகிறது
“மீசை வளர்த்த பாண்டியரும் பின்
 களப்பிரர் பல்லவர் சோழர்களும் மண்
ஆசை வளர்த்த அந்நியரும் அந்த
 அன்னியரில் சில கண்ணியரும்
 ஆட்சி புரிந்த தென்மதுரை-
 மீனாட்சியினால் இது பெண் மதுரை”
 மதுரையைப் பாட மேற்கொள்ளும் போது கண்ணகியைக் கடந்து போக முடியுமா என்ன ?
சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தை சில வரிகளிலேயே தீட்டிக் காட்டுகிறார் கவிஞர்
“தென்னவன் நீதி பிழைத்ததனால் அது
தெரிந்து மரணம் அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால் அவள்
 கந்தக முலையில் எரிந்ததனால்
நீதிக்கஞ்சிய தொன்மதுரை இன்று
சாதிக்கஞ்சும் தென்மதுரை “
தாமரை மலரின் அடுக்குகள் போல் மதுரை நகரை கற்பனை செய்து பரிபாடல் பாடிய ஒரு பழஞ்செய்திக்கு தன் பாட்டு வரிகளால் புத்துணர்வு மிக்க புத்துரை தீட்டுகிறார் கவிஞர்
“மதுரை தாமரைப் பூ என்றும்
 அதன்
 மலர்ந்த இதழே தெரு என்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள்
அவை
எம் குடிமக்கள் திரளென்றும்
 பரி
பாடல் பாடிய பால் மதுரை
 வட
மதுராபுரியினும் மேல்மதுரை “
 என்கிறார்
வைகை நதி கடலோடு கலப்பதில்லை என்பதற்கு பழம் பாடல்  ஒன்று ஒரு காரணம் சொல்கிறது.
கடலைக் கடைந்த போது தான் அமுதமும் நஞ்சம் வந்தன. நஞ்சை சிவபெருமான் உண்டார்.
சிவபெருமானுக்கே நஞ்சு கொடுத்த காரணத்தால் அந்த கடலில் போய் நான் கலக்க மாட்டேன் என்று வைகை விலகி ஓடியதாக  புகழேந்தியின் ஒரு வெண்பா சொல்கிறது.
“நாரியிடப்பாகருக்கு நஞ்சு தந்த பாவி என்று
வாரியிடம் போகாத வைகையே– மாறி

இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்துதமிழ்ப் பாண்டிய நாடு.”

ஆனால் இன்னொரு பொருளை இங்கே கவிஞர் கொண்டு வந்து சேர்க்கிறார்.
ஆயிரம் ஆயிரம் ஏட்டுச்சுவடிகளை ஆழி கொண்டு சென்றது என்பதால் தமிழ் வளர்த்த மதுரை மண்ணுக்கே உரிய வைகை நதி கடல் மேல் கோபம் கொண்டு விலகி நடக்கிறது என்கிறார்.
“தமிழைக் குடித்த கடலோடு நான்
  தழுவேன் என்ற சபதம் இட்டே
அமிர்தம் பரப்பும் வைகை நதி நீர்
 ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
மானம் எழுதிய மாமதுரை இது
மரபுகள் மாறா வேல் மதுரை”
வைராக்கியம் மிகுந்த வைகை நதியின் வளங்களையும் பாடி காட்டுகிறார் கவிஞர்
“மல்லிகை மௌவ்வல் அரவிந்தம்
வாய்
மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம் குருக்கத்தி
இவை
கொள்ளை அடித்த வைகை நதி
நாளும் ஓடிய நதி மதுரை -நீர்
நாட்டியம் ஆடிய பதி மதுரை “
பாண்டியர் காலம் தொடங்கி பற்பல படிநிலைகள் கடந்து மன்னர் திருமலை காலத்தில் மதுரை புதுப்பொலிவு பெற்றதையும் இவர் பதிவு செய்ய மறக்கவில்லை.
“அரபு நாட்டுச் சுண்ணாம்பில் கரும்பு
அரைத்துப் பிழிந்த சாறூற்றி
மரபுக் கவிதை வடித்தல் போல்- ஒரு
மண்டபம் திருமலை கட்டியதால்
 கண்கள் மயங்கும் கலைமதுரை இது
 கவிதைத் தமிழின் தலைமதுரை “
என்கிறார்
மனதை மயக்கும் ஒரு மாளிகையின் கட்டுமானம் என்பது ஒரு மரபுக் கவிதை உருவாவது போல்மாட்சி மிக்கது என்று சொல்லிக் காட்டும் திறம் நம்மை சொக்க வைக்கிறது.
எல்லாம் சரிதான்
இந்த 21ம் நூற்றாண்டில் இந்த பழம்பெரும் நகராகிய மதுரை எப்படி இருக்கிறது
“நெஞ்சு வறண்டு போனதனால் வைகை
 நீர்க் கோடாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர் நதியை
 பட்டா போட்டுக் கொண்டதனால்
முகத்தை இழந்த முதுமதுரை பழைய
மூச்சில் வாழும் தென்மதுரை
ஆலைகள் தொழில்கள் புதுக்காமல் வெறும்
 அரசியல் திரைப்படம்  புதுக்கியதில்
வேலைகள் இல்லா திருக்கூட்டம் வெறும்
வெட்டிப் பேச்சு வளர்ப்பதனால்
பட்டாகத்திகள் சூழ் மதுரை இன்று
பட்டப் பகலில் பாழ் மதுரை “
என்று முடிக்கும் போது மதுரையை பல்லாயிரம் ஆண்டுகள் சுற்றிப் பார்த்த அனுபவமும் சொல்லாயிரம் கொண்டும் சொல்ல முடியாத கலவை உணர்வுகளும் கைகோர்த்து வருவதை உணர்கிறோம்.
களையும் அழுக்குகளையும் சுட்டுவதாக கவிதை அமைந்திருப்பதைக்

காண்கிறோம்.

சங்க காலம் காவிய காலம் ஆகியவற்றைக் கடந்து சற்றேறக்குறைய 15 ஆம் நூற்றாண்டில் இருந்து
வண்ணப் பாடல்கள் அதிகம் செல்வாக்கு பெற்றன. தொல்காப்பியர் வண்ணம் குறித்து சுட்டியிருந்தாலும் அந்தப் பாவகை செல்வாக்கு பெற்ற காலம் 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே ஆகும்.

வண்ணப் பாடல்கள் வெற்றி பெறும் விதத்தை சுட்ட வந்த அறிஞர் ச.வே. சுப்ரமணியம்
” ஓரெழுத்தின் பயிற்சி மிகுதி, ஒரு குறிப்பிட்ட ஓசையின் பெருக்கம், ஒரு சொல்/ எண்/ சீர்/ தொடை ஒரு பொருண்மையின் முடிவு/ முடியாமை ஆகிய அம்சங்களை வண்ணப் பாடல்களின் அங்கங்களாக குறிப்பிடுகிறார்.

கவிஞர் வைரமுத்துவின் தனி கவிதைகளில் முதலில் இடம் பெற்று பின்னர் திரைப்பாடல் வடிவம் கொண்ட கவிதைகள் பல.
அவற்றில் ஒன்று
” மனிதா மனிதா இனியுன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வடியும் உதிரம் முழுதும் இனியுன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்”

இந்த கவிதை முழுவதும் விரவி வரும் ஒலிநயம் நினைந்து இன்புறுத்தக்க ஒன்று.

இந்தப் பாடல் கவிதையாக உருவாகி பா வகையாக வடிவம் பெற்றதை

 நினைத்துப் பார்க்கையில் இதில் இரு வேறு இலக்கண வரையறைகள் ஒரே இடத்தில் பொருந்தி போகிற புதுமையும் நிகழ்ந்திருக்கிறது.

பாவகை செய்யுள் வகை ஆகியவற்றுக்கான வேறுபாடு என்ன?

” பாவிற்கும் செய்யுளுக்கும் உரிய வேறுபாட்டினை இளம்பூரணர் வேறுபடுத்தி காட்டுகிறார். செய்யுள்களுள் ஒரு பொருளைப் புலப்படுத்தி இசையொழுங்கோடு முற்றிலும் ஒன்றிய நிலையில் அமைவது பாட்டு என்றும் ஓசை ஒழுங்கு மாறுபடாத இயற்றப்படுவது செய்யுள் என்றும் அவர் குறிப்பிட்டு இருப்பது அவ்விரண்டுக்குமான நுட்பமான வேறுபாட்டினை உணர்த்துகிறது” என்கிறார் பேராசிரியர் இராம குருநாதன்.

இங்கு ஒரே கவிதை செய்யுள் வடிவமும் எடுத்து பா வடிவமும் எடுக்கிற சிறப்பைக் கண்டு வியக்கிறோம். படைப்புச் செழுமை பிறக்கும் பொழுதே சிறகு முளைத்து பிறக்கும் போது இத்தகைய அழகுகள் சாத்தியம்.

( இன்னும் சொல்வேன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *