நிறைவாக…..

சற்று ஏறக்குறைய 25 ஆண்டுகள் முன் கவிஞர் வைரமுத்து கவிதைகள் மொத்த தொகுப்பாக வெளிவந்தது. அவருடைய பல்வேறு தொகுப்புகளில் இருந்து இந்த மொத்த தொகுதிக்கான கவிதைகளை தேர்வு செய்யும் குழுவில் இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்  திரு அசோகமித்திரன் திரு இந்திரா பார்த்தசாரதி திரு சுஜாதா திரு மாலன் முனைவர் ஔவை நடராசன் திரு காவியா சண்முகசுந்தரம் உள்ளிட்டவர்கள். இந்தக் குழு பலமுறை கூடி கவிதைகளை தேர்வு செய்தது உண்டு

இதில் ஒரு பார்வையாளனாக நான் சிலமுறை கலந்து கொண்டிருக்கிறேன். அந்த சந்திப்புகளில் சில கவிதைகளை சேர்க்க வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து கருத்து சொன்ன போது திரு அசோகமித்திரன்” இல்லை இல்லை அது நன்னாருக்கு. அவசியம் சேர்க்கலாம்” என்று சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்.

 

எதிர்ப்புக் குரல் எழுப்பும் திரு ஜெயமோகன் போன்றவர்கள் உச்சி மேல் வைத்துக் கொண்டாடும் மூத்த நவீன எழுத்தாளர்கள் முன்மொழிந்த கவிதைகள் கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் என்பதை உரியவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்

இந்த சர்ச்சை பற்றிய என்னுடைய பார்வையை இந்த கட்டுரையில் நிறைவு செய்ய விரும்புகிறேன். அதற்கு முன்னால் கவிஞர் வைரமுத்து கவிதைகள் பற்றி.

சங்க காலம் தொடங்கி பற்பல இலக்கியங்களும் திருக்குறளை மையப்படுத்தியும் அங்கீகரித்தும் போற்றியும் தங்கள் படைப்புகளை முன்னிறுத்துகின்றன.

கவிஞர் வைரமுத்து தன்னுடைய புகழ்பெற்ற கவிதை ஒன்றில் முதல் வரியிலேயே திருவள்ளுவரை வம்புக்கு இழுக்கிறார்.

” பிறவி என்பது பெருங்கடல் அன்று

  எண்ணிப் பார்த்தால் சின்ன வாய்க்கால்

 அறுபதிலிருந்து நூறடி வரை தான்

 அதனின் நீளம்; ஆனால் ஆழம்”

என்பவை அந்தக் கவிதையின் தொடக்க வரிகள்.

திருவள்ளுவர் மறு பிறப்பில் நம்பிக்கை உள்ளவர். எனவே வாழ்க்கையை ஒரு பெருங்கடலாகப் பார்க்கிறார்.

கவிஞர் வைரமுத்து மறுபிறப்புக் கொள்கையில் நம்பிக்கை இல்லாததால் வாழ்க்கையை 60 லிருந்து 100 அடி அகலம் உள்ள ஒரு வாய்க்காலாக அதாவது 60 முதல் 100 வயது வரை வாழக்கூடிய வாழ்க்கையாக மட்டுமே பார்க்கிறார்.

இந்த கவிதையின் ஒவ்வொரு பத்தியும் வாழ்வின் நிலையாமை பற்றி பேசுகிறது. குழந்தை பருவம் பயிலும் பருவம் காதல் பருவம் நடுத்தர வயது முதுமை என ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு அவற்றின் நிலையற்ற தன்மையை இந்த கவிதை உணர்த்துகிறது.

நிலையாமை பற்றி இரு தரப்பினர் இதுவரை பேசி வந்துள்ளனர். ஒரு தரப்பு வாழ்க்கை  நிலையற்றது. ஆதலால் மனிதா போகங்களை அனுபவிப்போம் என்றது. இன்னொரு தரப்பு வாழ்க்கை நிலையற்றது ஆதலால் மனிதா நிலையான பரம்பொருளை நாடுவோம் என்றது.

இந்த இரண்டு தரப்புகளுக்கும் இடையில் நுழைந்து கவிஞர் வைரமுத்து புதியதொரு தரப்பை முன் வைக்கிறார்.

நிலையற்ற வாழ்வில் நிலைபெற்று நிற்கும் செயல்களை செய்வதே மரணத்தை வெல்லும் வழி என்கிறார்.

ஆதலால் மனிதா…

இருக்கும் நாட்களை இரட்டிப்பாக்கு

சூரியன் நிலவு இரண்டிலும் விழித்திரு

படுக்கை போட்டுத் துயில் கொள்ளாதே

துயில் வரும்போது படுக்கை போடு

காலையில் பூமியில் உட்துளையிட்டு

மாலையில் பூமியின் மறுபுறம் வெளிப்படு

மனித உள்ளம் காலிக் கிண்ணம்

இலட்சியங்களை ஊற்றி நிரப்பு

விண்ணும் மண்ணும் வெற்றியின் இலக்கு

செவ்வாய்க் கிரகம் சீக்கிரம் உனக்கு

இதில் இன்னொரு சிறப்பம்சம் உண்டு. புறவயமாகப் பார்க்கையில் வாழ்வின் லட்சியங்களை முன்னெடுக்க வேண்டும் என்று இந்த கவிதையின் பற்றி வலியுறுத்துகிறது.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் இது ஆழமான ஆன்மீகத்தை முன்வைக்கிறது

” இருக்கும் நாட்களை இரட்டிப்பாக்கு”

சுவாசப் பயிற்சி பிராணாயாமம் போன்றவற்றின் வழியாக மனிதன் தன் சுவாச வேகத்தை மட்டுப்படுத்துகிறான். ஆயுள் என்பது சுவாச கணக்கு என்கிற யோக மரப்பின்படி சுவாசத்தின் எண்ணிக்கையை குறைக்கும் போது ஆயுள் கூடுகிறது.

” சூரியன் நிலவு இரண்டிலும் விழித்திரு”

சூரியன் உதயமாகும் நேரம் தோராயமாக காலை 5.45 முக்கால் முதல் 6:15 மணி வரை. நிலவு உதயமாகும் நேரம் தோராயமாக மாலை 5:45 மணி முதல் மாலை 6:15 மணி வரை. இது சந்தியா காலம் எனப்படும். இந்த காலகட்டம் தியானத்தில் ஈடுபடுவதற்கு மிகவும் சிறந்த நேரம் என்று சொல்லப்படுகிறது.

” படுக்கை போட்டுத் துயில் கொள்ளாதே

  துயில் வரும்போது படுக்கை போடு”

இது யோகிகளின் இயல்பு. ரமண மகரிஷி படுக்கையில் சாய்ந்த வண்ணம் பேசிக்கொண்டே இருந்து பேச்சின் ஊடாகவே உறங்கி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

மனித உள்ளம் காலிக் கிண்ணம்

இலட்சியங்களை ஊற்றி நிரப்பு

சராசரி மனிதர்களுடைய உள்ளங்கள் எப்போதும் காலியாக இருப்பதில்லை. யோகிகளும் ஞானிகளும் தங்கள் உள்ளத்தை வெற்றிடமாக வைத்திருப்பார்கள்.

ஆனால் இந்த பூமியில் தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளை ஒரு சங்கல்பம் ஆக மேற்கொண்டு பூமிக்கு வந்து செயல்படுவார்கள்.

மனம் வேறு எண்ணம் வேறு என்கிற தெளிவை இந்த வரிகள் உணர்த்துகின்றன.

விண்ணும் மண்ணும் வெற்றியின் இலக்கு

செவ்வாய் கிரகம் சீக்கிரம் உனக்கு

ஆன்மீகம் மண்ணளவிலான வெற்றியை மட்டும் இன்றி விண்முகமான வெற்றியையும் வலியுறுத்துகிறது.

ஜாதக நிலையில் பார்த்தால் செவ்வாய் உச்சம் பெற்று இருப்பது அகங்காரத்தை குறிக்கும் என்றும் சொல்வார்கள். எனவே மாணவர்களை வெற்றி கொள் என்று சொல்கிற விதமாகவும் இந்த நிறைவுப் பத்திக்குப் பொருள் கொள்ளலாம்.

வழக்கமான கவிதைச் சட்டகத்திலிருந்து உந்தி மேலெழுதல் என்பது இதுதான். கவிதை ஒன்றைச் சுட்டினாலும் அங்கிருந்து வேறொரு தளத்திற்குச் செல்ல வாசகனுக்கு வாய்ப்பளிக்கிறது.

                             தமிழ் இலக்கியத்தில் தனக்கென்று தனி மரபைக் கொண்டது சித்தர் இலக்கிய மரபு. வாழ்க்கையின் நிலையாமை பற்றி முகத்தில் அறைந்தாற் போல் பேசுவது இந்த மரபின் அம்சங்களில் ஒன்று. அதே நேரம் வாழ்கிற காலத்தில் தன்னை தனக்குள் ஒடுக்கி தன் சக்தி நிலைகளை உள்முகமாகத் திருப்பி தனக்குள் இருக்கும் இறைவனை தேடும் வழிவகைகளை சித்தர்கள் சொன்னார்கள்.

” உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை

  கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்

  விருத்தரும் பாலராகி மேனியும் சிவந்திடும்

  அருள் தரித்த நாதர் பாதம் அம்மைபாதம் உண்மையே

 செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்

  அய்யன் வந்து என்னுளம் அமர்ந்து கோயில் கொண்டனன்

அய்யன் வந்து என்னுளம் அமர்ந்து கோயில் கொண்ட பின்

வையகத்து மாந்தர் முன் வாய் திறப்பதில்லையே”

என்

கிறார் சிவவாக்கியர்.

 ஒரு திரைப்படத்திற்காக சித்தர் பாடல் வானில் ஒரு பாடலை எழுதும்போது கவிஞர் வைரமுத்து உள்முகமாக சக்தி நிலைகளை திருப்பும் சித்தர் மரபுக்கு மாறாக செயல்கள் செய்து அதன் வழி மனிதன் நிலை பெற வேண்டும் என்று வலியுறுத்தும் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.

ரத்தம் இல்லை என்றபோதும்

          கல்லிருந்து வாழுமே

          சத்தம் இல்லை என்றபோதும்

          சொல்லிருந்து வாழுமே

          வித்துமில்லை என்றபோதும்

          விண்ணிருந்து வாழுமே

          செத்த பின்னும் செத்த பின்னும்

          செயல் இருந்து வாழுமே

                             மண்புகுந்து போனதாலே

                             மழையும் சாவதில்லையே

                             விண்கடந்து போவதாலே

                             மேகம் சாவதில்லையே

                             கண்கடந்து போவதாலே

                             காற்றும் சாவதில்லையே

                             உன் உடம்பு போவதாலே

                             உயிரிலாமல்  போகுமா?

                             வீழ்வதற்கு முன்புகூடக்

                             கனிகொடுக்கும் மாமரம்

                             போவதற்கு முன்புகூட

                             இசைகொடுக்கும் பூங்குயில்

                             ஓய்வதற்கு முன்புகூட

                             ஓசைகாட்டும் பேரலை

                             சாவதற்கு முன்பு நீயும்

                             சாவை வென்று நில்லடா

கவிதைகள், திரைப்பாடல், கட்டுரை நாவல் சிறுகதைகள் என்று பற்பல தளங்களில் தனிமுத்திரை  பதித்தாலும் தன்னை தமிழ்ஞான மரபின் நீட்சியாகவும் சாட்சியாகவுமே உணர்கிறார் கவிஞர் வைரமுத்து.

அவர் கேட்பவற்றின் பட்டியலைப் பார்த்தாலே இந்த  உண்மையை நாம் உணர  முடியும்.

” வானளந்த தமிழ்த்தாயின் பாலைக் கேட்பேன்

வைகைநதிப் புலவர்களின் மூளை கேட்பேன்

தேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்

தென்னாழி தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்

மானமகன் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்

மாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்

ஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்

ராஜராஜன் வைத்திருந்த  வாளைக் கேட்பேன்

ஆம்! விஞ்ஞான யுகத்தின் வேகமான வாழ்விலும் கவித்துவம் ஒளிவீசச் செய்யும் ஆற்றல் பெற்றவர் என்றாலும் பண்டைய தமிழ் மரபை அழுத்தமாகப் பேசும் யாப்புச் செப்பமும் கவிதை நுட்பமும் மிக்க மரபுக்கவிதை வேந்தராக  தன்முகம் காட்டுகிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

இதேபோல் அவருடைய புதினங்கள் இலக்கியத் திறனாய்வு கட்டுரைகள் புதுக்கவிதைகள் போன்றவற்றில் இருந்து மேற்கோள் காட்டிக் கொண்டே செல்லலாம். விரிப்பின் பெருகும்.

இன்றைய நவீன கவிதைக்கும் பின் நவீனத்துவ கவிதைக்கும் அந்த துறை சார்ந்தவர்கள் வைத்திருக்கும் இலக்கணம் என்று திரு ஜெயமோகன் சுட்டுகிற அம்சங்கள் ஆகிய இருண்மை நம்பிக்கையின்மை போன்றவை அற்றவையாய் இந்தப் படைப்புகள் திகழ்கின்றன. தமிழ் இலக்கியத்தின் இன்றைய முகம் நவீன இலக்கியம்தான் என்பது சிலர் உருவாக்கும் பிரமை. தமிழ் மரபில், தமிழ்த் தன்மையுடன் தமிழ்ர்களுக்கு நெருக்கமான வடிவங்களே என்றும் ஒளிவீசுகின்றன,

 

The cat is out என ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஞானபீட விருதுக்கான எதிர்ப்புக் குரல் பற்றியும் அப்படித்தான் சொல்ல வேண்டும்.

எங்கள் மரபு புதுமைப்பித்தன் தொடங்கி க.நா.சு வரையில் என்கிறார் ஜெயமோகன். அவர் சொல்லும் நவீன இலக்கியம் மிகச் சமீபத்தில் இலக்கிய வகைமை. தமிழில் அதுவும் ஒரு தரப்பு. ஆனால் தமிழின் அசலான மரபின் நீட்சியாகவும் சாட்சியாகவும் விளங்குபவை கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள். நவீன இலக்கியம் ஒன்றையே தமிழ் இலக்கியத்தின் முகமாக காட்ட விரும்பும் இவர்களுடைய முயற்சிகள் முனை முறிந்த அதிர்ச்சியில் தான் இத்தனை கூக்கூரலும் கூப்பாடும்.

தமிழ் செம்படைப்பின் அசலான தொனியுடன் உருவாகும் கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் ஆயிரமாயிரம் ஆண்டுகாலத்  தமிழ் மரபிலக்கியத்தின் நீட்சி. இவை ஏற்படுத்தும் தாக்கம் நிலையானது என்பது இந்த விருதின் வழி மீண்டும் நிரூபணமாகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *