காஞ்சி மகா பெரியவர் பற்றி சமீபத்தில் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். அவர் சென்னையில் நகர்வலம் வந்தபோது பாதயாத்திரையாக பலருடைய இல்லங்களுக்கும் சென்று பூர்ணகும்ப மரியாதையை ஏற்று வெளியே வந்து கொண்டிருந்தாராம்.
எல்லோரும் ஊர்வலமாக போவதை பார்த்து சின்னஞ்சிறுவன் ஒருவன் அவர்களுடன் சேர்ந்து கொண்டானாம். அவனுக்கு மகா பெரியவர் யார் என்றெல்லாம் தெரியாது.
அவரை பலரும் ஆர்வமாக வீட்டுக்குள் அழைத்து வணங்குவதை பார்த்து அவனுக்கும் ஆசை வந்துவிட்டது.
நடந்து கொண்டிருந்த மகா பெரியவரிடம் சென்று” சார் சார்! எங்க ஆத்துக்கும் வாங்க சார்” என்று பலமுறை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தானாம்.
பக்தர்கள் சிலர் அவனை மெல்ல விலக்க முற்பட்ட போது அவர்களைத் தடுத்த மகா பெரியவர், தன் உதவியாளரிடம்” இந்த சாரோட அகம் எங்கேன்னு விசாரி! போயிட்டு வருவோம்” என்று சொல்ல சிறுவனுக்கு குஷி பிறந்து விட்டது.
சின்னஞ்சிறிய சந்துக்குள் அவரை அழைத்துச் சென்று தன் சிறிய வீட்டுக்குள் ஓடி” அம்மா யார் வந்திருக்கா பாரேன்” என தன் தாயாரை அழைத்து வந்தானாம்.
இந்த சம்பவத்தை யூடியூபில் கேட்டு சில நாட்களில் போகன் சங்கரின்” சங்கிலி பூதம்” கவிதைத் தொகுப்பில்
இந்தக் கவிதையை வாசிக்க நேர்ந்தது.
கடவுளை “சா”ர் என்று அழைக்கும்
நபர் ஒருவரை
வாழ்வில் முதல்முறையாக
ஒரு கோவிலில் பார்த்தேன்
*சார் முடியும்னா முடியும்னு சொல்லுங்க
முடியலேன்னாலும் முடியலைன்னு சொல்லுங்க
நான் பாட்டுக்கு தினம் வந்து முட்டிக்கிட்டு இருக்கேன்
ஏன் வரேன்னே தெரியலை சார்”
என்றவர் என் பார்வையை உணர்ந்து
சற்றே கம்மிய குரலில்
கடவுளுக்கும் எனக்கும் பொதுவாகச் சொன்னார்
” முடியலை சார்”
நம்மைச் சுற்றி நடக்கும் சாதாரண விஷயங்களில் இருந்தும் அசாதாரண விஷயங்களில் இருந்தும் கவித்துவத்தின் நுட்பமான தருணங்களை கூர்மையாக பதிவு செய்யும் எழுத்து போகன் சங்கரின் எழுத்து.
எது கவிதையாகும் என்றும், அதை எப்படி கவிதை ஆக்குவது என்றும் கூர்மையான கண்களால் போகன் சங்கர் இந்த உலகை பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
தன்னை பிடிப்பதற்காக வைத்திருக்கும் எலிப்பொறியை
அடையாளம் கண்டு கொண்டு அதை குறும்பாக உற்றுப் பார்க்கும் கண்கள் அவருடையவை.
தனக்கு வேண்டியவர்களை சித்தரவதை படுத்துவதும் தன் எதிரிகளின் துரோகங்களை நிபந்தனை இல்லாமல் மன்னிப்பதும்
கவிஞர்களுக்கே உரிய விசித்திரமான குணங்கள்.
இந்த குணாதிசயம் இந்த கவிதையில் வெளிப்படுகிறது.
நான் ஏன்
கொஞ்ச காலமாக பேசவில்லை என்று
நேற்று நீங்கள் கேட்ட கேள்வியை
மீண்டும் யோசித்துப் பார்த்தேன்.
அதைக் கேட்கும் போது
உங்கள் கண்களைப் பார்த்தேன்.
கொன்றவன் தின்றதை மறந்து விடுவது போல்
உங்கள் கண்கள் களங்கமற்று இருந்தன.
அந்த மினுக்கம்
எனக்குக் குமட்டியது.
ஆனாலும் என்னிடம்
இன்னும் கொஞ்சம் அன்புண்டு
உங்கள் குற்றத்தை
உங்களிடமிருந்து இன்னும் ஒரு முறை
ஒளித்துப் பரணில் வைத்தேன்
மனித மனம் நினைவுகளை நிரந்தர வைப்பு திட்டத்தில் சேமித்து வைத்திருக்கிறது. அவ்வப்போது அதன் வட்டி கணக்கு கனவுகளில் தலை காட்டும். கண் விழித்து எழும்போது கடந்து போன கனவு மட்டும் இன்றி அந்த கனவில் சம்பந்தப்பட்டவர் தொடர்பான நினைவுகளும் நெடுநேரம் நெஞ்சை உறுத்திக் கொண்டிருக்கும்.
அந்த வலி இந்த வரிகளில் வெளிப்படக் காண்கிறோம்.
பிரிந்த ஒருவர்
வேகமாக நம்
கனவுகளுக்குள் சென்று விடுகிறார்.
அது
நெடுங்காலம் பூஜிக்கப்பட்ட ஒரு விக்கிரகம்
நீருக்குள் மூழ்கி விடுவது போன்றது.
போகன் சங்கர் கவிதைகள் இலையோடும் எள்ளல் எதிர்பாராத திருப்பங்களை கொண்டிருக்கும். அவை வெறும் அதிர்ச்சி மதிப்புக்காக எழுதப்படுபவை அல்ல. Sensibility என்னும்
நுட்பமான அம்சத்தின் அடையாளங்களாக அவை வெளிப்படுகின்றன.
விவசாயிகளுக்கு
நான் எதுவும் செய்யவில்லை
என்பது பொய்.
நான் வாரம் தோறும்
ஒரு முறையாவது
ராட்சத மால்களில்
விலை அதிகம் இருந்தாலும்
ஆர்கானிக் ஆப்பிள்களையே வாங்குகிறேன்.
பெண்களை நான் மதிக்கவில்லை
என்பது இன்னொரு பொய்.
விலை உயர்ந்த ஆர்கானிக் ஆப்பிள்களை மட்டுமே சாப்பிடும் என்னைத்தான்
நான் அவர்களுக்கு வழங்குகிறேன்.
கவிஞர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சங்கடம் கவிதை பற்றி எதுவுமே தெரியாத பலரும் இது பற்றி எழுத வேண்டும் ஒரு கவிஞன் வாழ்வில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று உற்சாகமாக உபதேசம் செய்வதுதான்.
சாமானியமானது அல்ல கவிதை. சாமானியமாக கருதக் கூடியவன் அல்லன் கவிஞன். இந்த நுண்ணுணர்வு இல்லாமலேயே மனிதர்கள் கவிதைகளையும் கவிஞர்களையும் கையாள முயற்சிக்கிறார்கள். அத்தகைய மனிதர்களுக்கான கவிதை இது.
ஒரு சிலந்தியின் வலை என்பது
அது செல்லும் சாலை.
அல்லது ஒரு வெளியைக் கடந்து செல்ல
அது உருவாக்கும் பாலம்.
தான் உருவாக்கும் பாலம் வழியாக
அது தொங்கிக் கொண்டே வந்து
இரவு விழும் போது தனக்குள் அதைச் சுருட்டி கொண்டே போய்விடவும் செய்கிறது.
———————————————-
———————————————
எதற்கு இந்த வேண்டாத வேலை
சாகசம்
சாதாரணமாகத் தரையில் நடந்து செல்லலாமே
என்று ஒருவர் சிலந்தியிடம் கேட்கலாம்
ஏன் கவிதை எழுதுகிறீர்கள் என்று
ஒரு கவிஞரிடம் கேட்பது போல….
தங்களை அறிவாளிகளாக நினைத்துக் கொண்டிருப்பவர்களின் அறியாமையைப் பார்த்து அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றுகிற கவிதை இது.
சரி. அப்படியானால் கவிதை என்பது என்ன? கவிதையின் இடம் தான் என்ன? இந்த கேள்விக்கும் போகன் சங்கரின் சங்கிலி பூதம் தொகுப்பில் பதில் இருக்கிறது.
“கவிதை என்பது
மறைந்து இருப்பதை
வெளியே எடுத்துக்காட்டுவது.
பெயர் இல்லாததற்கு பெயரளிப்பது.
வானத்தில் பறப்பதை பூமிக்கு கொண்டு வருவது.
மண்புழுவுக்கு சொர்க்கத்தை சுற்றிக் காண்பிப்பது.
கவிதை கதவு இல்லாத வீட்டு சாவி.
அவ் வீட்டில் ஆள் இல்லாதபோது
திரைச்சீலைகளோடு விளையாடும் காற்று.
யாரும் பார்க்காத போது
உதிர்ந்து போகும் நட்சத்திரங்களை
பதிவு செய்து கொள்ளும் ஏடு.”
“கவிதை என்பது மண்புழுவுக்கு சொர்க்கத்தை சுற்றி காண்பிப்பது” என்கிற வரி பல மண்புழுக்களுக்கு தெரிவதில்லை. அதனால் தான் அவர்கள் வெளிறிப் போன வாழ்க்கையை வெயில் காய வெயில் காய வாழ்ந்து முடிக்கிறார்கள்.
சில உணவகங்கள் பல வாடிக்கையான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும். மாதக்கணக்கிலும் வருட கணக்கிலும் ஒரே இடத்தில் சாப்பிடுபவர்களை நான் பார்த்திருக்கிறேன்.
அந்த உணவகத்தில் அவர்களுக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்டும் விதமே தனி.
அதுவும் நண்பர்களோடு வந்துவிட்டால் வழக்கமான மேசையில் அமர்ந்து கண்களை காட்டினாலேயே தனக்கு வேண்டிய உணவு தங்கள் முன்பு கொண்டு வந்து வைக்கப்படும் என்பதை நிரூபிக்கப்படாத பாடுபடுவார்கள்.
அத்தகைய வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான குணாதிசயத்தில் இருப்பார்கள்.
அப்படி ஒரு காட்சியை இந்தக் கவிதை காட்டுகிறது.
வழக்கமான ஒரு வாடிக்கையாளரின் மாறுபட்ட செயல்பாடு குழப்பத்தை கொடுக்கிறது. கவிதையின் கடைசி வரி வாசிப்பவர்களுக்கும் கலக்கத்தை கொடுக்கிறது.
வருடக் கணக்கில்
காலையில் ஒரே நேரத்தில் வந்து
ஒரே உணவை மௌனமாக
சாப்பிட்டு போய்க் கொண்டிருந்த வாடிக்கையாளர்
திடீரென்று பேசத் தொடங்கும் போது
பரிசாரகன் சற்றே குழம்பிப் போகிறான்.
தெருவெங்கும் ஒட்டப்பட்டு இருக்கும்
ஒரு அஞ்சலி போஸ்டரில்
சிறிதாய் அவர் முகம் தெரியும்போது இன்னும்.
இவையெல்லாம் போகன் சங்கருக்கே உரிய பிரத்தியேக முத்திரைகள் .
அன்றாட வாழ்வில் அடிக்கடி நடக்கக்கூடிய மாயங்கள் தான் வாழ்வின் சுவாரசியம். விளக்கிச் சொல்ல முடியாத அதிசயங்களால் ஆனது மனித வாழ்க்கை.
இது எப்படி நேர்ந்தது என எண்ணிப் பார்த்தால் எந்த விடயமும் கிடைக்காத புதிர்கள் பல நேரம் நம்மை புரட்டிப் போடும்.
அத்தகைய அனுபவம் வாழ்வில் இருந்து எப்போதாவது விலகி விடும் என்றால் அந்த வெறுமை மிகப்பெரிய வலியை ஏற்படுத்தும்.
ஒன்றை மற்றொன்றாய் காட்டும்
ஒன்றுமில்லாததிலிருந்து
எல்லாவற்றையும் தருவித்துக் காட்டும்
மந்திரவாதி எப்படியோ
என் வாழ்வில் இருந்து மறைந்து விட்டான்
எளிதில் கணிக்கும் விதமாக அமைந்து விட்டால் அப்புறம் அது என்ன வாழ்க்கை? ஒரு வகையில் பார்த்தால் அனைவரும் வாழ்விலும் இந்த மாயத்தை சாத்தியமாக்கும் இடத்தில் கவிதை இருக்கிறது.
வாழ்க்கை எனும் தொப்பியிலிருந்து புறாக்களையும் பூக்களையும் மிட்டாய்களையும் சில நேரம் பாம்புகளையும் வெளியே எடுத்து நீட்டுகிறது.
அந்த மாயத்தை நிகழ்த்துபவன் ஒரு மாயாவியாக இருக்கலாம். அல்லது ஏதேனும் ஒரு சந்தில் இருந்து எதிர்பாராமல் வெளிப்படும் சங்கிலி பூதத்தானாக இருக்கலாம்.
“என்னுடைய ஒன்பதாவது கவிதை நூல் இது. அதே நேரம் மிகச் சரியாக கவிதை நூல்களுக்கே உரிய முறையான அழகியலோடு வடிவமைக்கப்பட்ட முதல் கவிதை நூல் என்று இதைத்தான் சொல்ல வேண்டும். தமிழ்ச் சூழலில் கவிதை நூல்கள் மீதான அலட்சியம் பதிப்பகத்திடமிருந்தே தொடங்கி விடுகிறது. அதுவே பின்னர் பொதுச் சமூகத்திடமும் பரவுகிறது. இன்றும் கூட தமிழில் வந்துள்ள மிக முக்கியமான கவிதை நூல்களை நீங்கள் எடுத்துப் பார்த்தால் அவை மிக அலட்சியத்துடன் அவசரத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். கைவிட்டு எண்ணக்கூடிய சில பதிப்பகங்களே கவிதைக்குரிய மரியாதையை அளிக்கின்றன.
புதிதாக தொடங்கப்பட்டிருக்கிற வான்கோ பதிப்பகம் இந்த தீப்போக்கை முறிக்கும் என்று நம்புகிறேன் . இந்த நூலில் ஆங்காங்கே அவையே தனியாக கவிதைகள் என்று சொல்லும்படியான உணர்வுடன் திரேகா அவர்கள் வரைந்த ஓவியங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அவருக்கு எனது அன்பு.”
என்று இந்த நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் போகன் சங்கர்
சங்கிலி பூதம் நிறைவான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.
வெளியீடு வான்கோ பதிப்பகம்