
இயற்கையை ரசிப்பவர்கள் மனிதர்கள். இயற்கையாகவே இருப்பவர்கள் கலைஞர்கள்.
சங்க இலக்கியம் தொடங்கி இந்த ஒத்திசைவின் சுவடுகளைக் கண்டறிந்து கொண்டே வரலாம்.
எந்த ஓர் அம்சத்தை கவிஞர்கள் ஆராதனை செய்கிறார்களோ அது
அவர்களுக்குள் ஆவாஹனம் ஆகி விடுகிறது. எனவே அதுவாகவே ஆதல் சாத்தியமாகிறது.
நுண்ணுணர்வு மிக்க இத்தகைய கவிஞர்களின் வரிசையில் சமீபத்திய சாட்சி புனிதஜோதி. “மோனத்திரளின் பெருமழை” என்னும் அவருடைய சமீபத்திய தொகுப்பை வாசித்தேன்.
பூமி சுற்றுகிறது என்பது நிறுவப்பட்ட உண்மை.. ஆனால் மொத்த பிரபஞ்சமும் நகர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை தன்னுடைய கவிதை கண்களால் கண்டறிந்து சொல்கிறார் புனித ஜோதி.
” பறவைகளின் குரலின் மேலேறி
பயணிக்கிறது பிரபஞ்சம்.
என்று தொடங்கும் கவிதையில்
அதன் மென்பொருள்களில் கசிகின்றன
ஐம்பெரும் பூதங்கள்.
இப்போது
நான் ஒரு பிரபஞ்சம்
நான் ஒரு பறவை” (36)
என்கிறார்.
பிரபஞ்சத்தோடும் பறவையோடும் தன்னை தொடர்பு படுத்தி தானே அதுவாக உணரும்போது சிக்கல்கள் எதுவும் இல்லை.
ஆனால் அதே ஏற்புத்தன்மை மனிதர்களிடமும் நீள்கிற போது மனிதர்களின் நிலையற்ற உணர்வுகள் தன் அலைக்கழிப்புகளை கவி மனதுக்கும் கடத்தி விடுகின்றன.
” யாரோ ஒருவரின் புன்னகைக்கும்
தன்னை அறியாமல் புன்னகைக்கிறது
யாரோ ஒருவரின் அழுகைக்கும் அழுகிறது
உணர்வுகளின் ரசவாதம் பூசிய கண்ணாடி போல் மின்னுகிறது
புன்னகைக்கும் அழுகைக்கும் இடையில் ஒரு எட்டு நடந்து பார்க்கும் மனம்” (42)
ஞான மரபில் தன்னை நாடிவரும் அடியவர்களின் வேதனைகளை ஞானிகள் தங்கள் உடலில் வாங்கிக் கொண்டு அந்த வலியை சிறிது நேரம் தாங்கி பின்னர் கழித்து விடுவார்கள் என்கிற தாத்பரியம் உண்டு.
கவிஞர்களும் அப்படி மற்றவர்களின் வழிகளை வாங்கிக் கொள்கிறார்கள். தாங்கிக் கொள்கிறார்கள். கவிதையின் ஊடாக கழிக்கவும் செய்கிறார்கள்.
” காற்றில் அசைந்தாடும்
சிறு மலரின் கழுத்தின்
காயத்தில் கூட உறைகிறது மனம்.
மேகத்தை உறிஞ்சும்
சக்கரவாகப் பறவையென
ஒரு துயரத்தை அருந்தும்
பறவை நான்”(94)
இன்று பாடுகிற பக்குவம் இதனாலேயே வாய்த்திருக்கிறது போலும்.
தனக்கு நேரம் சிரமங்களை சராசரி மனிதர்கள் புறவயமாக மட்டுமே பார்ப்பார்கள். ஆனால் அப்போது நடக்கும் அகவயமான போராட்டத்தை உன்னிப்பாக கவனிக்க நுட்பமான கவி மனம் தேவைப்படுகிறது.
” காலங்களின் கடினங்களுக்குத்
தள்ளப்பட்ட
ஒரு பருவத்தில் இருக்கிறேன்.
என் வேர்கள்
வசந்தத்தை துறக்கும் படிமத்தை
இரக்கமின்றி வரைகின்றன.
முட்களின் மீது நடைபயிலும்
சின்னஞ்சிறு மணிப்புறாவின்
சிவந்த கால்களை
இன்னும் சிவப்பாக்கும் இரணத்தை
என் கிளைகளுக்குப்
பரிசளிக்கிறது காலம்”(22)
இந்த கவிதை அந்த அகவலியின் மௌனத்தை அழுத்தமாய் பேசுகிறது.
” உண்மை என்பது
அப்பழுக்கற்ற
ஒற்றை கண்ணீர்த் துளி” (25)
என்கிற புரிதலும் இத்தகைய வலிகள் வழியாக வருபவைதான்.
ஆனால் இந்த வாழ்க்கை என்பது தன்னையும் கடந்தது என்கிற ஞானத்தை அடையும் போது ஏற்படும் தளர்வு நிலை பல நேரங்களில் தளர்ச்சி என்று தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.
கவிதையின் ஆரம்பத்தில் அதை தளர்ச்சி என்று புரிந்து கொள்கிற கவிஞர் கவிதையின் நிறைவில் அது தளர்வு நிலை என்கிற புரிதலுக்கு வருகிறார்.
” முன்பெல்லாம் சரியான அளவில்
இறுக்கமான ஆடையைப் போல்
“நான்” என்னும் இறுக்கத்தை அணிந்திருந்தேன்
வீரியமிக்க எனது குருதியோட்டம்
அனுபவத்தின் நாற்காலியில் சுழல
இறுக்கத்தின் இழைகள்
ஒவ்வொன்றாக அறுபடத் தொடங்கின”
என்று தொடங்கும் கவிதை, இப்படி நிறைவடைகிறது
” தளர்வின் கரங்களில்
வந்து சேர்ந்திருப்பது
ஞானத்தின் ஆடை”. (49)
இப்படி ஒரு ஞானம் வந்த பிறகு அந்த மனம் என்ன செய்யும்?
அதற்கு விடை சொல்வது போல் சில பக்கங்கள் தாண்டி அமைந்திருக்கிறது இந்த கவிதை.
” சருகுகள் விழுதலையும்
இயல்பாய்
ஏற்றுக்கொள்ளும்
நிலமாய் இருக்கும் அவள்
காலம் முழுதும் தன் மீது
விழும் வெப்பக் கதிர்களைப் பார்த்தும்
ஒரு முறை கூட
சலித்துக் கொள்ளவில்லை
இவ்வாழ்வை” (67)
வாழ்வில் பிறர் ஏற்படுத்தும் நிர்பந்தங்களையும் நிபந்தனைகளையும் மௌனத்தால் கடந்து செல்லும் பக்குவம் வாழ்க்கை தருகிற தாமதமான வரங்களில் ஒன்று.
வெற்றிடம் என்ற தலைப்பில் ஆன கவிதை அந்த உணர்வை நுட்பமாக பேசுகிறது(77) மேற்கோளுக்காக சில வரிகள் என இல்லாமல் முழுமையாக வாசிக்கப்பட வேண்டிய இந்த தொகுப்பின் பல கவிதைகளில் அதுவும் ஒன்று.
முழுமையான வாசிப்பு அனுபவத்தை தரும் மௌனத் திரளின் பெருமழை என்னும் தொகுப்பை தந்திருக்கும் கவிஞர் புனித ஜோதிக்கு வாழ்த்துகள்.
வேரல் வெளியீடு
விலை ரூ.160/
– மரபின் மைந்தன் முத்தையா




