கல்வித்துறைக்கு மிகவும் சவாலான சூழல் இது. தொடக்கப்பள்ளி ஆசிரியர் தொடங்கி, துணை வேந்தர் பொறுப்பு வரை விசித்திரமான சூழல்கள் விளைந்திருக்கின்றன.

ஏற்படும் நிகழ்ச்சிகள் எதைக் காட்டுகின்றன?

எங்கேயோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதைத்தான். ஆனால், இந்த சூழலின் பாதிப்பு, எங்கேயோ தவறு என எண்ணத் தூண்டாமல் எல்லாமே தவறு என்பதுபோன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது.

சமூகப் பார்வையும் பொறுப்பும்மிக்க ஆசிரியச் சமூகம் தன் அத்தனை மன உறுதியையும் மலைபோல் திரட்டி நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரமிது.

இந்த இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ள சம்பவங்கள் நாம் நன்கறிந்தவை.
1. ஆசிரியரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம்
2. மாணவரை ஆசிரியர் கத்தியால் குத்திய சம்பவம்
3. ஏற்கனவே சிறையிலிருக்கும் முன்னாள் துணைவேந்தரின் தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்க, இன்னொரு துணைவேந்தர் கையூட்டு புகாரில் பிடிபட்ட சம்பவம்

இவற்றை நீங்கள் ஒரு சமூக மருத்துவரின் கண்கொண்டு காண வேண்டும். இந்த மூன்று சம்பவங்களுமே தோலில் தென்படும் கட்டிகள். இதன் வேர் எங்கேயோ இருக்கிறது. கட்டியை அகற்றக் கத்தி வைக்கும்போதே அதன் வேரைக் கண்டறிந்து வேரறுக்க முற்படுவதே அறிவர் தொழில்.

உதாரணமாக, தலைமை ஆசிரியர் ஒருவர் குத்துப்பட்ட சம்பவத்தை சந்றே சிந்திப்போம். கைப்பேசியில் மாணவர்கள் ஆபாசப்படமொன்றைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கண்டித்த ஆசிரியருக்கு கத்திக்குத்து விழுந்திருக்கிறது.

இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். அந்த மாணவர் அவமானத்தால் ஒருநாள் முழுக்க யோசித்து மறுநாள் கத்திகொண்டு வந்து குத்தவில்லை. உடனடியாக உள்ளே இருந்த கத்தி வெளியே வந்திருக்கிறது.

தலைமையாசிரியர் குத்தப்பட்டார் என்பதைப் போலவே கவலையளிக்கிற விஷயம், மாணவர் தன் புத்தகங்களுடன் கத்தியையும் கொண்டு வந்திருந்தார் என்பதுதான்.

கத்திக்குத்து என்பது அகற்றப்பட வேண்டிய கட்டி. மாணவரிடம் தயார்நிலையில் கத்தி இருந்தது என்பதுதான் அந்தக்கொடிய நோயின் வேர்.

மெய்ப்பொருள் நாயனாரைக் கொல்ல நினைத்து சிவனடியார் வேடம் தரித்து வந்த முத்தநாதன், சுவடிகளுக்கு நடுவே, வாளை ஒளித்துவைத்துக்கொண்டு வந்ததுபோல், புத்தகங்கள் நடுவே கொலைக்கருவிகளைக் கொண்டு வரச் செய்யததன் மூலத்தை ஆராய வேண்டும்.

இதுவேதான், மாணவரைக் கத்தியால் குத்திய ஆசிரியருக்கும்.
1. பிறந்து வளர்ந்த சூழல், 2. பழகி வளரும் சூழல், 3. பார்க்கின்ற ஊடகங்கள் / படங்கள்.

இவை ஏற்படுத்திய பாதிப்பு என்று பொதுவாகச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவது நல்லதல்ல.

ஏனெனில், பிறந்து வளர்ந்த சூழல் மிகவும் நாகரீகமானதாய் இருந்தாலும்கூட, குழந்தைப் பருவம் தொடங்கி, தான் கைவிடப்பட்டதாய் உணரக்கூடிய குழந்தைகள் சமூகத்தின் தீய அம்சங்களால் தத்தெடுக்கப்படுகிறார்கள்.

பள்ளிக்கு வருகிற எல்லாக் குழந்தைகளின் குடும்பச் சூழ்நிலைகளையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்க இயலாது.

சின்ன வயதில் பெற்றோரின் அரவணைப்பின்றி, பதற்றமான குடும்பச் சூழலில் வளரக்கூடிய ஒரு மாணவனை மீட்டிருக்க வேண்டிய மகத்தான சக்தி, அவனுடைய அப்போதைய தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு உண்டு-.

பிஞ்சுக் குழந்தைகள் மனதில் ஓர் ஆசிரியருக்கான இடம் அற்புதமானது. தங்கள் மாணவர்களின் கல்வித்திறன் போலவே மனநலன், மகிழ்ச்சி, நம்பிக்கை ஆகியவற்றை கவனிக்க வேண்டிய பொறுப்பை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தாமாக முன்வந்து, ஏற்றுக் கொண்டால் அந்தக் குழந்தையின் வாழ்வு மிக நிச்சயமாய் சீரமைக்கப்படும்.

இதை ஆசிரியர் செய்தாக வேண்டும் என்பதைவிட இதனை ஓர் ஆசிரியர்தான் செய்ய இயலும் என்பதுதான் உண்மை.

ஓர் ஆசிரியரின் அடிப்படைத்தகுதிகளான நிபந்தனையற்ற அன்பு, ஒரு மாணவரின் சூழலை எல்லாக் கோணங்களில் இருந்தும் பார்த்துப் புரிந்துகொள்கிற பக்குவம், இவையெல்லாமே ஓர் ஆசிரியரை மகத்தான ஆசிரியராய் மலர்த்துகிறது.

சோதனை வரும் நேரங்களில், “நமக்கெதற்கு வம்பு” என ஒதுங்குவது சாரசரிக்கும் கீழான மனோநிலை. “சரி செய்ய இது நல்ல வாய்ப்பு” என்று முனைப்புடன் களமிறங்கி, முன்னுதாரணமாக சூழலை உருவாக்கும் வல்லமைதான் சாதனையாளர்களின் மனோநிலை.

அன்புமிக்க ஆசிரியர்களே! இது கல்வித்துறைக்கான சோதனைக் காலம். அதே வேளை, களங்கத்தை அகற்ற சரியான நேரம்.

நீங்கள் ஒதுங்கிப்போகும் சாதாரணரா? சூழலை மாற்றும் சாதனையாளரா?

மரபின் மைந்தன் முத்தையா

                                                                                                                                                    (தொடர்வோம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *