ஓஷோ பற்றிய உரைகள் நிகழ்த்திய மற்ற இரண்டு நாட்களும் ஜெயமோகன் ஓஷோ உருவான பின்புலம் பற்றி பேசவே அதிக நேரம் அர்ப்பணித்தார். ஓஷோ புதுமையானவர்தான் ஆனால் புதியவர் அல்ல என்பதை வெவ்வேறு தரவுகளைக் கொண்டு நிறுவ முற்பட்டார்.

பண்டைய ரிஷிகள் வகையறாவில் ஓஷோ சேர்க்கப்படலாம் என்பதை வலியுறுத்தும் பொருட்டு அவர் தந்த விளக்கங்கள் ஏற்கத் தக்கவையாக இருந்தன. ரிஷி என்ற சொல் மெய்ப் பொருளை உணர்ந்தவர்கள் என்கிற பொருளில் மட்டுமே காலங்காலமாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர்கள் வேத நெறியாளர்கள் வேத மறுப்பாளர்கள் நியமங்களை கடந்தவர்கள் நியமங்களிலேயே இருந்தவர்கள் என பல்வேறு வகைகளை சார்ந்தவர்கள்.

தீர்க்கதமஸ் போன்ற ரிஷிகளை மட்டுமின்றி சிலப்பதிகாரத்தில் வருகிற வேளா பார்ப்பனர் வரை வெவ்வேறு உதாரணங்களை ஜெயமோகன் அடுக்கினார்.

ரிஷிகளைக் குறிக்க கவிதை என்கிற சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மெய்ப் பொருளை உணர்ந்தவர்கள் எனும் பொருளிலேயே கவி என்னும் சொல் குறிக்கப்படுகிறது.

போர்க்களத்தில் தன்னை காண வருகிற வீடணனை கும்பகர்ணன்” கவிஞரின் அறிவு மிக்காய்” என அழைப்பது இதனால்தான்.

சாங்கியம் சார்வாகம் போன்ற மரபுகளுக்கு நெருக்கமானவராக ஓஷோவை ஜெயமோகன் அடையாளம் காட்டினார். மேற்குறித்த வகைமைகள் ஓஷோவின் இருப்பு குறித்த அடையாள வரைபடங்களாய் அமையுமே தவிர இவை எவையுமே ஓஷோவின் நேரடி அடையாளங்கள் அல்ல.

அந்த வகையில் மேற்குறித்த மரபினர்களுடன் ஓஷோவுக்கு இருக்கக்கூடிய ஒற்றுமைகளையோ ஒற்றுமை இன்மையையோ மனதளவிலேனும் தாண்டிய பிறகு மட்டுமே ஓஷோவை உணர முடியும்.

ஏனெனில் சார்வாகத்தின் எல்லைக்கு வெளியே ஓஷோ ஒரு பெரிய திரும்பு பாதையாய் நிற்பார்.சாங்கியத்திலும் அப்படியே.

மறுநாள் உரையிலும் ஓஷோவின் தியான முறையை விளக்க பல்வேறு தியானப் பாதைகளை மேற்கோள் காட்டினார். ஓஷோவின் இயல்புகளோடு பெரிதும் ஒத்துப் போகக் கூடியவராக ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவல் வரும் ஹென்றியை ஜெயமோகன் ஒப்பிட்டபோது அந்த அரங்கில் ஜெயகாந்தன் சோப் எங்கப்பா என்று ஆடிக்கொண்டிருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.

தியானம் என்பதை விளக்க ஊழ்கம் எனும் சமணச் சொல்லை ஜெயமோகன் பயன்படுத்தினார். ஆழமாக நினைத்துப் பார்த்தல் என்று அதனை விளக்கவும் செய்தார். இதனை திருநாவுக்கரசர் “ஒன்றியிருந்து நினைமின்கள்” என்கிறார்.

எவையெல்லாம் தியானம் அல்ல என்று சொல்ல வந்தவர் நாம பஜனை பிரார்த்தனை போன்றவையெல்லாம் தியானம் அல்ல என்றார்.

ஓஷோவின் டைனமிக் தியான முறை பற்றி விரித்துரைக்க அந்த நாளை அவர் வகுத்திருந்தாலும் அதை நோக்கி செல்லவில்லை.ஹோமியோபதி போல பல தியான முறைகளின் கலவை என்றார்.ஓஷோ தியான முறைகளின் அடிப்படைகள் மூன்று. ஒன்று புலன் மயக்கம்,இரண்டாவது ஆற்றலை விசிறியடித்தல், மூன்றாவது கூட்டுச் செயல்பாடு என்றார். இதில் ஜெயமோகன் சொன்ன காரணம் கூட்டாக இருக்கையில் மனிதனின் அறிவாற்றல் குறைகிறது என்றார். உள்முகமாக நிகழும் தியானத்திற்கு இந்த அவதானிப்பு பொருத்தமாகப் படவில்லை.

உரையின் முடிவில் ஓஷோ மேல் தனக்கிருக்கும் மூன்று விமர்சனங்களை முன்வைத்தார்.
1) ஓஷோவின் மரபு மறுப்பும் கடந்த கால மறுப்பும் சாமானிய மனிதர்களால் கைக்கொள்ளப்பட்டால் அது ஆபத்தானது,அந்த மனிதரை உள்ளீடற்ற நாத்திகனாக்கும் என்றார்.ஒப்புக் கொள்ள வேண்டிய பார்வை. ஓஷோ நம்மை உடைக்க வேண்டிய சுத்தியலே தவிர ஓஷோ எனும் சுத்தியலைக் கொண்டு நம்மைச் சுற்றி இருப்பவற்றை உடைக்கக் கூடாது என்னும் துல்லியமான உவமையைச் சொன்னார் ஜெயமோகன்.

2) இரண்டாவதாக ” இன்று” இன்று ஓஷோ சுட்டும் நிகழ்கணம் பற்றி ஜெயமோகன் தன் மறுப்பை சொன்னார். செயற்கை நுண்ணறிவு வழி சூழப்பட்டிருக்கும் இன்று ஓஹோ கண்ட நிகழ்காலத்தை விட வேறு பட்டது என்பது ஜெயமோகனின் வாதம். ஆனால் நிகழ்காலத்தில் நின்றிருப்பது என்பது தன்னில் லயித்து தன்னுள் ஒரு தெளிவை உணர்வுகள் தவிர புற நிகழ்வுகளோடு பொருது கொண்டிருப்பதில்லை. நிகழ்கணத்தில் லயித்திருப்பவனே புற உலகின் பாதிப்புகள் அற்று வாழத் தலைப்படுகிறான்.
தொழில் நுட்பம் உற்ற காலமோ அற்ற காலமோ நிகழ்கணத்தில் இருப்பதை தொந்தரவு செய்வதாக நான் நினைக்கவில்லை.

3) ஓஷோ வழியைப் பற்றி சொல்பவரே தவிர இலக்கைச் சொல்பவர் அல்ல. இது என் சொந்த விமர்சனம் என்றார் ஜெயமோகன். ஒன்றுமற்ற தன்மையில் இருந்து வரும் உயிர்கள் ஒன்றுமற்ற தன்மையில் சென்று கலப்பதை ஓஷோ உணர்த்த வந்தார். ஓஷோ என்ற பெயரே அதற்கான ஒரு குறியீடு. முக்தி என்பது ஓர் இலக்காக இருக்கலாம் என்கிறார் ஜெயமோகன். சரிதான். ஆனால் ஒருவகையில் முக்தி என்பது கூட இலக்கல்ல. இயல்பாக நிகழ்வது. தன்னை முழுக்க கரைத்தவர்களுக்கு சில நேரம் முடி கூட இலக்கல்ல.
” கூடும் அன்பால் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்”
என்று பெரிய புராணம் அடியவர்கள் இலக்கணத்தைப் பேசுகிறது. எனவே ஓஷோ மீது ஜெயமோகனின் இந்த மறுப்பு நீள விவாதிக்க வேண்டியது.

இந்த உரை வரிசையில் எந்த முக்கியமான அம்சம் விடுபட்டிருக்கிறது என்றுஓஷோ வாசிப்பாளனாக என்னைக் கேட்டால் ஓஷோவின் சத்திய தரிசனம் என்று சொல்வேன். சத்திய தரிசிகளின் முக்கிய அம்சங்களில் ஒன்று காட்டாத காட்டுதல். ஓஷோ பெரிய பெரிய நூல்களுக்கு உரை எழுதுகிற போதெல்லாம் அத்தகைய சாளரங்களை அனாயசமாக தெரிந்து விட்டுச் செல்வார்.

பதஞ்சலி சூத்திரத்திற்கு உரை எழுதும்போது அஷ்டாங்க யோகம் பற்றி சொல்கிறார் ஓஷோ. அந்த எட்டு படிநிலைகள் எதற்காக என்பதை ஜென் மார்க்கத்துடன் ஒப்பிட்டு ஜென் திடீரென நிகழ்வது. அது அசாதாரண மனிதர்களுக்கு உரியது, ஆனால் பதஞ்சலியின் வழிமுறை படிப்படியாக செல்வது என்று விளக்குகிறார் ஓஷோ. மரபார்ந்த பயிற்சியில் அஷ்டாங்க யோகம் என்ன என்பதையே உணர முடியும். அஷ்டாங்க யோகம் ஏன் என்கிற இடைவெட்டு ஓஷோவின் சத்திய தரிசனத்தின் வெளிப்பாடு. இந்த சத்திய தரிசனம் ஓஷோவின் முக்கிய அம்சம் என்பது என் கணிப்பு.

ஓஷோ குறித்த விரிவான பின்புலத்தை இந்த மூன்று நாள் உரைகள் வழங்கின. ஓஷோ, தன்னைத் தானே மீட்டிக் கொண்ட ஒரு வீணை. அறிவுலகத்தின் கண்ணி விரித்து ஆன்ம ரகசியங்களை புகட்ட வந்த புதிர்ப் புனிதர். நவீன மனிதனின் தன்னிலை பற்றி மேற்கொள்ளும் தேடலுக்கு சுருதி சேர்க்கும் மீட்டலாக அமைந்தன இந்த மூன்று நாள் உரைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *