காலம் தனக்கென வைத்திருக்கின்றது
கால காலமாய் உண்டியல் ஒன்று;
முதன்முதல் வானம் உதிர்த்த விண்மீன்,
முதல்முகில் பொழிந்த மழையின் முதல்துளி
வளைத்த தனுசு முறிந்த பொழுது
தெறித்து விழுந்த தங்க மணிகள்.
கொடைக்கரம் இழுத்த மேகலையிருந்து
நகைத்துச் சிதறிய நன்முத்துக்கள்;
கந்தையில் மீந்த அவலொரு கைப்பிடி;
உடைத்த சிலம்பின் உள்ளே இருந்து
குதித்த மாணிக்கப் பரல்களில் கொஞ்சம்,
அன்னப்பறவையின் ஆதி இறகு;
போதி உதிர்த்த இலைகளில் ஒன்று;
சிலுவை செதுக்கிய மரத்தின் மிச்சம்;
சிண்ட்ரெல்லாவின் சின்னச் செருப்புகள்;
ஏதென்ஸ் நகரில் உருண்ட குவளை;
குருதி தோய்ந்த குறுவாள்,கேடயம்,
துடிப்படங்கிய துப்பாக்கி ரவைகள்
சமீப காலமாய் சயனைடு குப்பிகள்
இத்தனை இருக்கும் உண்டியலுக்குள்
எட்டிப் பார்த்தால் எங்கோ இருக்கலாம்
எல்லோருடைய கண்ணிர்த்துளிகளும்…..

Comments

  1. முத்தையாவின் நெஞ்சக உண்டியலில்
    இத்தனை நினைவுக் காசுகளா ? கவித்துவ வரிகள் கவர்கின்றன.

    பழ.சந்திரசேகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *