அற்புதரின் பார்வை நிகழ்காலத்துடன் நின்று விடுவதல்ல. அது பின்னர்
நிகழக்கூடியதையும் சேர்த்தே தரிசிக்கும் தன்மை வாய்ந்தது. அற்புதர்கள்
எல்லோருமே இப்படித்தான் போலும்.ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஒற்றை
மனிதன் கூட இல்லாத பொட்டல் வெளியைப் பா ர்த்த ஒரு ஞானி”அடேங்கப்பா! எம்மாம் சனம்” என்று வியந்து கொண்டே நடந்தாராம்.
இன்று அங்கே ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
சீருடை அணிந்து வந்து வழிபடும் புனிதத் தலமொன்று உருவாகிவிட்டது.

அற்புதரின் பார்வையும் அத்தகையதுதான். அவர் கைகளில் விழுந்த ஒற்றை
விதையைப் பார்க்கும்போது அந்த விதை விளைவிக்கக் கூடிய எண்ணற்ற
கனிகளையும் கண்ணுற்று விடுவார் அற்புதர்.

ஏழேபேர்கள் சூழ்ந்திருந்த போது அவர் வாங்கிய சின்னஞ்சிறு நிலத்தில்
பல்லாண்டுகளுக்கு முன்னர் அவர் அடிக்கல் நாட்டிய அதே இடத்தில் அடிக்கல்லுக்கு பதிலாய் வையகமே வியந்து பார்க்கும் அற்புதம் ஒன்று நிமிர்ந்து நிற்கிறது.

அற்புதர் வைத்திருந்த திட்டங்களின் முன்னுரையைக் கேட்டவர்கள்,
“இது சாத்தியமேயில்லை” என்று சத்தியம் செய்தனர். அவர்கள் கண்முன்னே
அங்குலம் அங்குலமாய் அந்தக் கனவுகள் நிறைவேறின. தங்கள்
கண்முன்னே நடைபெற்ற காரணத்தால் அவர்கள் அந்த அற்புதங்களை
சம்பவக் கணக்கிலேயே சேர்த்துவிட்டு அவரின் அடுத்த திட்டத்தை
மறுக்கத் தயாராயினர்.

அற்புதரின் பார்வையில் எதிர்காலம் என்பது எல்லா சாத்தியங்களும்
நிரம்பியது. நாளையின் கோப்பையில் தண்ணீர் நிரம்பியதன் அடையாளம்தான் இன்று ஏற்படும் தாகம் என்றார் அற்புதர்.

ஒரு திருடனுக்குள் தெய்வமாக்கவியைக் காலம் கண்டுணர்ந்தது போல்
ஒவ்வோர் உயிரிலும் தெய்வீகத்தின் எல்லைதொடும் சாத்தியக்கூற்றினைக்
கண்டுகொண்டேயிருந்தார் அற்புதர்.கனிவிலும் பணிவிலும் குவிகிற அவரின்
கரங்களுக்குள் ஒளிந்திருந்தது எதிரே நிற்கும் மனிதருக்குள் தெய்வீகம்
மலர்கிற தேதி. ஒவ்வோருயிரையும் தீண்டும் அவரின் விழிகளில் தெரிந்தது
கடவுள் அனுப்பிய சேதி.

இன்றின் நிகழ்வில் ஊன்றி நிற்கிற எவரின் முன்னும் எதிர்காலம் புலப்படும்
என்பதே காலமும் கணக்கும் நீத்த பூரணத்தின் அனுபவம் என்பதை அற்புதரைப் பார்த்தே உணர்ந்தது உலகம்.

அற்புதராய் வெளிப்படும் முன்னரே அவரின் எதிர்காலம் உணர்ந்து
ஒரு மழைநாளில் அவரைப் பணிந்த புனிதர் ஒருவரின் கைவிரல்
சுவடுகள் அற்புதரின் பாதங்களில் பத்திரமாயிருந்தன.

எங்கும் எதிலும் கொட்டிக் கிடக்கும் சாத்தியங்களைக் காண்பதால்
அற்புதரின் கண்களில் அடைபட்ட  கதவுகள் என்பதே இல்லை.

வேப்பங்காய் கசக்கும் என்பது எவ்வளவு உண்மையோ வேப்பங்கனி
இனிக்கும் என்பதும் அவ்வளவு  உண்மை. கனிவதற்கான சாத்தியங்கள்
கண்களில் தென்பட்டால் காயும் இல்லை. காய்தல் உவத்தலும் இல்லை
என்றார் அற்புதர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *