“உங்கள் அலுவலக அறையில் தென்முகமாக தட்சிணாமூர்த்தி படம் வைத்து தீபமேற்றுங்கள்”. பாலரிஷி ஸ்ரீ  விஸ்வசிராசினி சொன்னதுமே செய்ய வேண்டுமென்று தோன்றிவிட்டது. எங்கள் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடக்கும். நான் வழிபாட்டுக் கூடத்துக்குப் போகும் முன்னரே தீப தூபங்கள் தயாராக இருக்கும்.

இது தெரிந்தோ என்னவோ,”இந்த தீபத்தை நீங்கள்தான் ஏற்ற வேண்டும்,நீங்கள் ஊரில் இல்லாதபோது மற்றவர்கள் ஏற்றலாம் என்று சொல்லியிருந்தார் பாலரிஷி. முதல் வேலையாய் தட்சிணாமூர்த்தி படத்துக்கேற்ற மாடம் வாங்கப்பட்டது. விசேஷ காலங்களில் நெய்தீபமும், மற்ற நாட்களில் எண்ணெயும் இட்டு தீபம் ஏற்றலாம் என்று முடிவானது.

தீபத்திற்கான பித்தளை விளக்கு டெரகோட்டா விளக்கு இரண்டுமே வாங்கப்பட்டன.மெல்ல மெல்ல விளக்கிலுள்ள திருகாணி திறந்து திரியிடவும் எண்ணெய் ஊற்றவும் பழகினேன். எண்ணெய் பட்டால் திரி நனைந்து தொய்ந்து போவதும், எண்ணெய் படாவிட்டால் திரி சுடர்பெறாமல் “சுர்”ரென்று கருகுவதுமான கண்ணாமூச்சிகளைக் கடக்கப் பழகினேன். ஒரே உரசலில் பிளாஸ்டிக் மெழுகு பற்றுமா மரக்குச்சி பற்றுமா என்ற பட்டிமண்டபத்தில் தீர்ப்புச் சொல்லும் விதத்தில் தகுதி பெற்றேன்.

திரி பற்றும்வரை பொறுமையாயிருக்கவும் விரல் சுடும்முன் குச்சியை உதறி அணைத்து வீசவும் தட்டுத் தடுமாறி முயற்சிப்பதை நமட்டுச் சிரிப்புடன் அலுவலகத்தில் பிரதாப் பர்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பிரதாப்புக்கு பிப்ரவரியில் கல்யாணம் என்பதால் அந்தப் பையனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருப்பதை இந்தப் பதிவில் குறிப்பிடப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் அழகான திரிகளைப் பார்த்தாலும் சின்னச் சின்ன அகல்களைப் பார்த்தாலும் வாங்கத் தோன்றிற்று. நேற்று எல்.எம்.டபிள்யூ நிறுவனத்தில் தந்த மலர்ச்செண்டில் இருந்த ரோஜாக்களைக் கத்தரித்து மாடத்தை நானாக அலங்கரித்தேன்.யோகா தியானம் என்று வந்த பிறகு பூஜை பழக்கங்கள் வெகுவாகக் குறைந்து பத்தாண்டுகள் இருக்கும். இப்போது கொம்பில்
படரும் கொடிபோல பூஜா மனோபாவம் சிகரங்களில் படியும் முகில் மாதிரி படர்ந்தது. விடுமுறையில் கூட அலுவலகம் திறந்து விளக்கேற்றி வைத்துவிட்டுத் திரும்பும் அளவு அதில் ஆர்வமும் ஈடுபாடும் வளர்ந்தது.

இதனால் ஏற்படக்கூடிய பலன்கள் பற்றிய எதிர்பார்ப்புகளைக் கடந்து, தீபமேற்றிய சில நிமிடங்களில் அந்த அறையில் பரவும் அமைதியும் மெல்லதிர்வுகளும் மனதுக்குப் பிடிபட்டன. மாடத்தை நெருங்கும் போதே மனம் மலரத் தொடங்கிற்று. தளும்பல்கள் தடுமாற்றங்களிலிருந்து  மீண்டு “சட்”டென்று தெளிவின் பாதையில் வெளிச்ச நடை நடப்பது போல் உணரத் தலைப்பட்டேன்.

இந்தப் பின்புலத்தில்தான் எனக்கு குங்கிலியக்கலய நாயனாரைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு நாளில் சில நிமிடங்கள் தீபமேற்றுவதில் செலவிடும்போதே இத்தனை நுட்பமான அனுபவங்கள் வாய்க்குமென்றால் வாழ்வையே திருக்கோவிலில் குங்கிலியமிட அர்ப்பணித்த அவரின் அனுபவம் எத்தனை அற்புதமாய் இருந்திருக்க வேண்டும்!!

இறை சந்நிதியில் ஒருநாளிட்ட குங்கிலியம், அந்த நறுமணப்புகையை எழுப்பி, நமஸ்கரித்து எழுந்ததும் புகைநடுவே தெரிந்த பரமன். அந்த நிர்ச்சலமான இலிங்கத் திருவுருவைக் கண்டவுடன் உள்ளே எழுந்த அசைவு, அந்த அசைவில் உணர்ந்த ஆனந்தம் என்று, அந்தப் பேரனுபவத்தில் லயித்திருப்பார் கலயர். ஒவ்வொரு முறை குங்கிலியமிடும் போதும் அந்தப் பரவசம் புதிய புதிய அனுபவமாய் புகைபுகையாய் அலையலையாய் புறப்பட்டு அவரை அள்ளிச் சென்றிருக்கும்.தன்னைக் கடந்த அந்த அனுபவத்தில் குங்கிலியத்திலிருந்து நறுமணப் புகையாய் தானேயெழுந்து அமிர்தலிங்கத்தை ஆரத் தழுவும் தவிப்பு அவரை நாயன்மாராய் உயர்த்தியிருக்கும். செயலும் நினைவும் முற்றாகப் பொருந்துதலே யோகம். இதை எனக்கு உணர்த்திற்று தட்சிணாமூர்த்தி மாடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *