மிகச்சமீபத்தில்,முகநூலில் ஒருவரி வாசித்தேன்.”மறைவாகக்
கடவுள் அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறார்?”
இந்தக் கேள்வி ஏறக்குறைய எல்லோருக்குமே உண்டு.
கடவுள் நமக்கு என்ன செய்வார் என்ற சுயநலக் கேள்வியில்
தொடங்குகிற இந்தத் தேடல், கடவுள் என்ன செய்கிறார் என்ற
சுயத்தேடலாக வளர்வதே பெரிய வரம். இதற்கு விடைகாணும்
வழியே தவம்.
சில நாட்களுக்கு முன் பாலரிஷி அவர்களிடம் “நீங்கள் சித்தர்கள்
பற்றியொரு புத்தகம் எழுதலாமே” என்று கேட்டேன். கேள்வியின்
கடைசிச்சொல்லை பதிலாக்கினார்..”எழுதலாமே!நான் சொல்கிறேன்.
நீங்கள் எழுதுங்கள்”.
அதற்குப்பின் நடந்ததுதான்  சுவாரசியம். அந்த விநாடியிலேயே அவர்சொல்லத் தொடங்கியிருந்தார்.நல்லவேளையாய் காகிதமும் எழுதுகோலும் கையருகே இருந்தன.முன்னொரு முறை பாலரிஷி
குறித்து,மந்திரமழை என்றொரு புத்தகம் எழுதியிருந்தேன்.சித்தர் நெறி குறித்து மறைபொருளாய் உள்ள பல மகத்துவங்களின்விளக்கங்களை மழைபோல் பொழிந்துகொண்டிருந்தார் பாலரிஷி.
சித்தர்கள் கண்டுணர்ந்து தரும் மூலிகைகள் பற்றி அறிந்திருக்கிறோம்.அவற்றில் “செத்த மூலிகை உயிருள்ளமூலிகை”பற்றிக் கேட்டிருக்கிறோமா? பாலரிஷி சொல்லித்தான்முதலில் கேட்டேன்.பூசையில் ஒரு மலரை எடுத்து இறைவனுக்கு அர்ப்பணிப்பதன் மூல தாத்பர்யத்தில் எத்தனை நுட்பங்கள் என்றும் இவர் சொல்லித்தான் கேட்டேன்.
கோள்களின் கோலாட்டம் காரணமாய் வாழ்வில் ஏற்படும்போராட்டம் என்பது உண்மையா என்கிற கேள்வி நம்மில்எத்தனையோ பேர்களுக்கு உண்டு. ஆன்மீகப் பாதையில்இருப்பவர்கள் அத்தகைய நேரங்களை எளிதில் கடக்கஎன்னவழி என்பதையும் விரிவாக விளக்கியிருக்கிறார்பாலரிஷி.

ஞானியரிடம் உரையாடத் தொடங்கும்போதெல்லாம்,நம்கேள்விகளின் எல்லைக்கு அப்பாற்பட்ட விஸ்தீரணத்தில்வந்து விழுகிற பதில்கள் நம்மை வாயடைத்துப் போகச்செய்யும். என் குருநாதரிடம் இதைப் பலமுறை உணர்ந்ததுண்டு.பாலரிஷி அவர்களுடனான உரையாடலிலும் இதே அனுபவம்.
மூலவிதையாகிய ஓங்காரம், பிரபஞ்சத்தின் கருப்பையாகியநாதம், சித்தர்மரபில் ஹோமங்களின் தாத்பர்யம் என்று எத்தனையோ விஷயங்களை பாலரிஷி விளக்கும்போதுசில கேள்விகளை இடைமறித்துக் கேட்பேன். சிலசமயங்களில்நம் கேள்விகள் நமக்கே வியப்பாக இருக்கும்.ஆனால் அடுத்தவிநாடியே வந்து விழுகிற விடையின் வீச்சு, நம் கேள்வி பற்றிநமக்கே எழும் பாராட்டுணர்வு அகங்காரமாய் வளர்ந்துவிடாமல் ஆட்கொள்ளும்.

இந்த நூலின் உருவாக்கத்தில் அத்தகைய அனுபவத்துக்குப் பலமுறை ஆளாகியிருக்கிறேன். உதாரணமாய் ஒரு சம்பவம்.நாதம் குறித்த நுட்பங்களை பாலரிஷி விளக்கிக் கொண்டிருந்தார்.“நாதமே பிரபஞ்சத்தின் மூலம் என்றால் நாதத்துக்கு முந்தையமௌனம்,நிர்ச்சலனம் என்னநிலை?” இப்படியொரு கேள்வியைநான்தான் கேட்டேன் என்பது எனக்கே விளங்கும்முன் விடை சொல்லத் தொடங்கிவிட்டார் பாலரிஷி.  
“நாதம் என்பது பிரபஞ்சம் உருவான மூலம் என்றால் அதற்குமுந்தைய மௌனம்,நிசப்தம்,நிர்ச்சலனம் என்று நீங்கள் எதைச் சொன்னாலும் அது பரம்பொருள் உருவான மூலம்.பரம்பொருள்உருவான பின்னர் நாதத்தில் இந்தப் பிரபஞ்சம் உருவானது, இதைத்தான் பிரணவ மூலம் என்றும் பிரபஞ்ச மூலம் என்றும்சொல்கிறோம்.ஓர் உயிராக நீங்கள் உருவானது பிரபஞ்சத்தில்தான்என்கிறபோது அதன்வழியாகவே நீங்கள் பரம்பொருளுடன்தொடர்புக்கு வருகிறீர்கள்.
அதற்கும் முந்தையதான மௌனம் உங்கள் நேரடி அனுபவத்தில்இல்லை.ஆனால் உங்கள் உபாசனையாலோ தவவலிமையாலோபரம்பொருளை உங்கள் உள்நிலை அனுபவத்தில் நீங்கள் பெற்றால்அந்த மௌனம் குறித்தும் நீங்கள் உணரக்கூடும். இதை நீங்கள்தவவலிமையில்தான் உணர வேண்டுமே தவிர, ஒரு தகவலாகக்கேட்டுப் பெறுவதில் எந்த அர்த்தமும் இல்லை”.
ஆன்மீகத்தின் ஆழம்காணுதல் அனுபவத்தில் நிகழ வேண்டுமேதவிர தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் வராது என்று பாலரிஷி உணர்த்திய நிமிஷங்கள் அவை.

அப்படியானால் இந்தப் புத்தகம்?அவரே சொல்வதுபோல் சித்தர்நெறி குறித்த தகவல்களின் திரட்டல்ல.சித்தர்நெறி குறித்து பாலரிஷி அவர்களின் உள்நிலை அனுபவங்களின்  வெளிப்பாடு.அத்தகைய அனுபவங்களைத் தேடிப்போவதற்கான பாதைக்கு வெளிச்சம்காட்டும் ஞானச்சுடரே இந்தத்தொகுப்பு.
இந்தப் புத்தகம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே “இதற்குஎன்ன தலைப்பு வைக்கலாம்”என்று பாலரிஷி கேட்டார்கள்.உடனே எனக்குள் இருக்கும் வணிக மூளை விழித்துக் கொண்டது.வாசகரை ஈர்க்கும் விதமாக, “சித்தர்நெறி ரகசியம்”, என்றோ“உங்கள் வாழ்வில் சித்தர்கள்” என்றோ வைக்கலாம் என்றேன்.ஒரு புன்னகைமூலம் மறுத்துவிட்டு பாலரிஷி அவர்களே தந்ததலைப்புதான் ‘சித்தர்கள் அருளும் சிவானந்தம்”. 
இந்த நூல் நிறைவுபெறும் நிலையில் நானாகக் கேட்காத ஒருகேள்வியைத்தானாக எழுப்பிக் கொண்டு பாலரிஷியே பதிலும் தந்தார்.

 “சமூகத்தில் எத்தனையோபேர் சிரமத்திலிருக்கிறார்கள்.வன்முறையால் வீழ்கிறார்கள்.நான் சிவானந்தத்தைத் தேடுகிறேன்என்றோ சிவானந்தத்தில் லயிக்க்கிறேன் என்றோ சொல்லிக் கொண்டு இவற்றையெல்லாம் பாராமல் இருப்பது ஆன்மீகமாகாது.அவர்களுக்கு அன்பு,பரிவு,கருணை,உதவி ஆகியன வழங்குவதுதான் ஆன்மீகப் பண்பின் அடையாளம்”.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் பெருமானின் உள்ளுருக்கம் எப்படி இருந்திருக்கும்என்று உணரக்கிடைத்த உன்னத தருணம் அது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *