கருவியும் புதிது-உன் குறுநகை புதிது

கைகளின் வித்தை புதிது
அருவியைப்போல வருகிற ஸ்வரங்கள்
அத்தனை அத்தனை புதிது
திருமலை நாதன் பெயரொடு வந்து
தந்தசங் கீதம் புதிது
ஒருவரும் நினையாப் பொழுதினில் மறைந்தாய்
காலனுக்கேது மனது
தூண்டிய விளக்காய் திகழ்கிற முகத்தில்
துலங்கிய சாந்தமும் எங்கே
வேண்டிய வரைக்கும் புகழினைக் குவித்தும்
வணங்கிடும் பணிவும் எங்கே
மாண்டலின் எனுமொரு விந்தைக் கருவியின்
மாபெரும் தலைவன் எங்கே
மாண்டனன் என்றதும் மருகிய மனங்கள்
மயக்கத்தில் ஆழ்ந்தன இங்கே
முதல்தர இசையை சின்னஞ் சிறுவனாய்
மேடையில் இசைத்த மேதை
இதம்தரும் கலையில் இணையில்லாமலே
இதுவரை நடந்த பாதை..
நடுத்தர வயதை நெருங்கும் முன்னரே
நீயேன் முடித்தாய் பயணம்
நிரந்தரப் புகழை நிலைபெறச்செய்த
ஶ்ரீநிவாசனின் சயனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *