கவியரசர் அனாயசமான ஓசையழகுடன் எழுதியுள்ள தைப்பாவையில் ஒரு காட்சி ஒழுங்கும் தானாகவே அமைந்துவிடுவதுதான் ஆச்சரியம். தைமாதம் முதல்நாளில் உழவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை அங்கே எழும் ஓசைகள் வழியே உணர்த்துகிறார் கவிஞர்.

காளை மணியோசை களத்துமணி நெல்லோசை
வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை
தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை
கோழிக்குரலோசை குழவியர்வாய் தேனோசை
ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமாய்
வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ
தோழியர் கைதாங்க தூக்கியபொன் அடிநோக
மேழியர்தம் இல்லத்து மேலழுவாய் தைப்பாவாய்

(மேழியர்-உழவர்)

வெவ்வேறு ஓசைகளின் பட்டியல் மட்டுமில்லை இது. காட்சி ஒழுங்கும் இதில் இருக்கிறது. மார்கழித்திங்களின் கடைசிநாளில் இரவு நேரமாகியும் கதிரறுப்பு முடிந்தபாடில்லை. அவ்வளவு அருமையான மகசூல். தைமுதல்நாள் புலர்வதற்கு சில மணிநேரங்கள் முன்பு வரை கூட, நெல் ஏற்றப்பட்ட வண்டிகளைக் காளைமாடுகள் இழுத்துவர,களத்தில் நெல்மணிகள் கொட்டப்படுகின்றன.

காளை மணியோசை-களத்துமணி நெல்லோசை

ஆண்கள் இந்த வேலையில் பரபரப்பாக இருக்க,பெண்களோ பொங்கல் வைக்கும் வேலையில் சுறுசுறுப்பாக இறங்குகிறார்கள்.பொங்கல் பானைமுன் வாழை இலையை விரிக்கும் பெண்களின் கைவளையோசை
கேட்கிறது..

வாழை இலையோசை-வஞ்சியர்கை வளையோசை

வீட்டிலுள்ள மற்ற பெண்கள்,குழந்தைகளின் தலையில் தாழம்பூக்களை வைத்துப் பின்னுகிறார்கள்.மூத்த தாய்மார்களோ,கதிரவன் உதித்துவிட்டால் தயிர் கடைந்து வெண்ணெயெடுக்க முடியாதென்ரு வேகவேகமாய் தயிர் கடைகிறார்கள்.

தாழை மடலோசை-தாயர்தயிர் மத்தோசை

அடுத்து பொழுது புலர்கிறது.கோழி கூவுகிறது. பொங்கல் பொங்குகிறது.உடனே குழந்தைகள் “பொங்கலோ பொங்கல்” என்று கூவுகின்றனர்

கோழிக்குரலோசை – குழவியர்வாய் தேனோசை

கூடவே கடலலைகள் புரண்டெழும் ஓசையும் கேட்கிறது.இத்தனை ஒலிகளும் சேர்ந்து தைமகளை வரவேற்கின்றன. இந்தக்காட்சிகளை மனக்கண்ணால் பார்த்தபடி பாடலை மீண்டும் பாருங்கள்,

காளை மணியோசை களத்துமணி நெல்லோசை
வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை
தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை
கோழிக்குரலோசை குழவியர்வாய் தேனோசை
ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமாய்
வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ
தோழியர் கைதாங்க தூக்கியபொன் அடிநோக
மேழியர்தம் இல்லத்து மேலழுவாய் தைப்பாவாய்

எவ்வித முன்திட்டமும் இல்லாமல் பொங்கும் ஊற்றில் கூட ஆற்றின் ஒழுங்கு அமைவதுபோன்ற அற்புதம்தான் கவிஞரின் கவியோட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *