சிவவாக்கியர் அடிப்படையில் சிறந்த யோகி. யோக சூட்சுமங்கள் பலவற்றையும் அனாயசமாகப் பாடிச் செல்கிறார்.அவருடைய பாடல்கள் யோக ரகசியங்களும் யோகப் பயிற்சியினால் கிடைக்கக் கூடிய பலன்களையும் விரிவாகப் பேசக் கூடியவை.

.மனித உடலில் தச வாயுக்கள் உள்ளன.குழந்தை கருவில் இருக்கும் போதே உடனிருக்கும் வாயுவாகிய தனஞ்செயன் மூலாதாரத்தில் ஒடுங்குகிறது. அந்த மனிதர் வாழ்வு முழுவதும் ஆன்மீக அறிமுகமின்றி வாழ்வாரேயானால்,மூலாதாரத்திலேயே ஒடுங்கிக் கிடக்கும் அந்த வாயு, உயிர் பிரிந்த மூன்றாம் நாள், சடலத்தை அழுக வைத்து கபாலம் வழி வெளியேறுகிறது. இதனால் தான் மூன்றாம் நாள் காரியம் செய்யும் வழக்கம் வந்தது.

இந்த வாயுவை, பிராணாயாமப் பயிற்சியால் சஹஸ்ரஹாரத்திற்கு ஏற்றினால், உடல் சிவக்கும்.இளமைத் தோற்றம் கிடைக்கும்.இதனை அம்மையப்பன் திருவடிகளில் ஆணையிட்டுச் சொல்கிறார் சிவவாக்கியர்.

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராகி மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே
என்கிறார். இது போல் பல சூட்சுமங்களை உள்ளடக்கிய ஏராளமான பாடல்கள் உள்ளன.

உடம்பினால் உயிர் வந்ததா உயிரால் உடம்பு வந்ததா என்பது மெய்யுலகின் நீள்நதிக்கரையில் நெடுங்காலமாய் கூழாங்கல் போல் உருளும் கேள்வி.இதை ஒரு விவாதம் போல் தொடங்கினாலும் தெளிவான விளக்கத்தை சிவவாக்கியர் முன் வைக்கிறார்.
உடம்பு உயிர் எடுத்ததோ உயிர் உடம்பு எடுத்ததோ என்பது முதல் வரி.

அடுத்த வரியிலேயே உடம்பு உயிர் எடுத்தபோது உருவம் ஏது செப்புவீர் என்கிறார்.அதாவது உயிர்தான் உடம்பெடுக்கிறதே தவிர உடம்பு தனக்கான உயிரைத் தேடிக் கொள்ளவில்லை.

திருவுந்தியாரில் இதை விளக்கும் அழகான பாடல் ஒன்று உண்டு.

உயிர்களுக்குத்தான் முக்திபெறும் வாய்ப்புண்டு.ஜடப்பொருட்களுக்கு முக்தி கிடையாது.எனவே உயிருக்கு முக்திமுதல் என்று பெயர் சூட்டுகிறார் திருவுந்தியார் பாடிய திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார்.

முக்தி முதலாகிய உயிரில் மோகக் கொடி படர்ந்ததால் அத்திப்பழம் பழுத்ததாம். இங்கே அத்திப்பழம் என்பது உடலைக் குறிக்கும். ஆனால் ஓர் ஆத்ம சாதகன் உடலானது ஆன்மீகத்தில் முன்னேற ஒரு கருவி என்பதைக் கண்டுணர்ந்து உலக இன்பங்களில் ஈடுபடாமல் மேல்நிலை நோக்கி செல்ல வேண்டுமாம்

முத்தி முதலில் மோகக் கொடி படர்ந்து
அத்தி பழுத்ததென்று உந்தீ பற
அப்பழம் உண்ணாமே உந்திபற

சிவவாக்கியரின் பெரும்பாலான பாடல்கள் உடலை இறைத்தேடலுக்கான கருவியாக மட்டுமே கருத வேண்டும் என்று வலியுறுத்துபவை. அவ்வாறு கருவியாக்கும் வழிகளையும் விரித்துச் சொல்பவை

Comments

  1. உடல் உயிர் பற்றி திருமூலரின் கருத்து வேறாகத்தெரிகிறதே.
    உங்கள் விளக்கங்கள் எப்போதும் போல் மிக அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *