அலைபேசி ஒலித்தது. வடநாட்டுக் குரலொன்று .முதலில் ஹிந்தியில் பேசத் தொடங்கி ,நான் இடைமறித்ததும் தமிழில் பேசினார். ஜக்ரிதி என்னும் பெயருடைய 10 மாதக் குழந்தையொன்று புற்றுநோயால் அவதிப்படுவதாகவும்,நாளொன்றுக்கு 18,000 ரூபாய் சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுவதாகவும் விபரங்களைக் குறுஞ்செய்தியில் அனுப்புவதாகவும் கூறினார்.

இத்தகைய அழைப்புகளின் நம்பகத்தன்மை குறித்து எனக்கு சில ஐயங்கள் உண்டு. எனவே அந்தக் குறுஞ்செய்தியை முழுமையாகப் பார்க்கவில்லை.

ஓரிரு நாட்களில் அதே மனிதர் அழைத்தார். ” உங்களுக்கு விபரங்கள் அனுப்பிவிட்டோம். ஆனால் உங்களிடமிருந்து எவ்வித உதவியும் வந்து சேரவில்லை” என்ற தொனியில் தொடங்கினார். எனக்கு எரிச்சல் வந்தது. ” பிறகு பேசுங்கள் ” என்று அழைப்பைத் துண்டித்தேன்.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு மற்றோர் அழைப்பு. இம்முறை ஓர் இளம்பெண்ணின் குரல். “விபரங்கள் அனுப்பியும் நினைவூட்டியும் உங்களிடமிருந்து உதவி வரவில்லை.நீங்கள் உதவப் போகிறீர்களா இல்லையா என்று மட்டும் சொல்லுங்கள்” என்று கடுமையாகக் கேட்கவும் கோபம் தலைக்கேறியது.

” இனி என்னை அழைத்துத் தொந்தரவு செய்யாதீர்கள்”

” எங்களுக்கும் உங்களைத் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்க விருப்பம் கிடையாது.உதவப் போகிறீர்களா? இல்லையா?”

“நீங்கள் ஒரு தகவலை அனுப்பிவிட்டு நேரம் கொடுக்க வேண்டும்”

கத்தி விட்டு அழைப்பைத் துண்டித்தேன். கடும் எரிச்சல். அதேநேரம் அழைப்பை துண்டிக்கும் முன் அந்தப் பெண் கோபத்தோடு சொன சொற்கள் நல்ல வேளையாய் என் காதில் விழுந்தன..

” இங்கே பாருங்கள்! உங்களுக்கும் எனக்கும் நேரம் இருக்கிறது. ஆனால் ஜக்ரிதிக்கு நேரமில்லை.அவள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.”

ஓரிரு நிமிடங்களில் என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவர்கள் தந்த வலைதளத்தைத் தேடினேன்.விபரங்கள் இருந்தன.http://www.reliefindiatrust.org/ என்னால் இயன்ற தொகையை இணையம் வழியாக செலுத்திவிட்டு அந்தப் பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

” சிறு தொகை செலுத்தியுள்ளேன். ஆனால் நீங்கள் மிகவும் கடுமையாகப் பேசுகிறீர்கள்” (Made a small payment.but you people are very harsh).

சற்று நேரத்தில் அந்தப் பெண்ணிடமிருந்து பதில் வந்தது. “உங்களுக்கு மிகவும் நன்றி. மிக முக்கியமான நேரத்தில் உதவ முன்வந்திருக்கிறீர்கள் .நான் ஒரு மாணவி . எங்கும் வேலைக்குப் போனதில்லை. எந்தப் பயிற்சியும் மேற்கொண்டதில்லை. ஓய்வு நேரத்தில் இந்தத் தொண்டில் ஈடுபடுகிறேன். மற்றவர்களிடம் எப்படிப்
பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை.என்னை மன்னித்து விடுங்கள்”.

“தன்னலம் சாராத ஒரு பணியில் தீவிரமாக ஈடுபடுவதன் மூலம் ஒரு மனிதன் சக்தி பெறுகிறான்” என்று சத்குரு சொல்வது நினைவுக்கு வந்தது.

அந்தப் பெண்ணின் கோபத்தை அறச்சீற்றம் என்றே புரிந்து கொண்டேன். “நல்லது பெண்ணே. நல்வாழ்த்துகள்.நானும் பொறுமையிழந்திருக்க்க் கூடாது.அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதில் அனுப்பினேன்.

அலைபேசியை வைத்த பின்னும் அந்தப் பெண்ணின் கோபக் குரல் காதுகளில் ஒலித்தது. மெல்லிய புன்னகையும் பாராட்டுணர்வும் எழுந்தது. “தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *