IMG_8767எவ்வளவுதான் கடுமையான பணிச்சுமையாய் இருக்கட்டும். சுகா சிலகடமைகளிலிருந்து தவறுவதேயில்லை. திரைப்படப் பணிகள் ஒருபக்கம்,இளையராஜா 1000 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஒரு பக்கம் என கடும் வேலைகளுக்கு நடுவிலும் நண்பர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வந்து நிற்பார்!

அதாவது நெருங்கின நண்பர்களை கலாய்க்க ஊசிமுனையளவு இடம் கிடைத்தாலும் அதில் ஓர் ஊரையே புகுத்தி ஊர்வலம் விடுவது,அவரைப் பொறுத்தவரை இருட்டுக்கடை அல்வா தின்பது மாதிரி.

முனைவர். கு. ஞானசம்பந்தன் அவர்களை கோவையில்தான் முதன்முதலாக சுகா சந்தித்தார் என்று ஞாபகம். நட்சத்திர விடுதியொன்றில் ஓரிரு அறைகள் தள்ளி இசைஞானி பள்ளி கொண்டிருக்க, சுகாவின் அறையில் சுகாவும், பேராசிரியரும் நானும் அந்த விடுதியின் நட்சத்திரங்களில் ஒன்றிரண்டு உதிர்ந்து விழும்படி அதிர்ந்து சிரித்துக் கொண்டிருந்தோம்.

பின்னர் முனைவர், கு, ஞானசம்பந்தன் சென்னையில் சுகாவின் இல்லம் சென்றபோது குடும்பத்துடன் சுகா பணிந்து ஆசி பெற்றதில் நெகிழ்ந்து நடுங்கி கண்ணீர் மல்கினார் பேராசிரியர். நம்பிப் பழகினார். அப்புறம்தான் சுகா அதுவரை பொறுமையாய் மறைத்து வைத்திருந்த அரிவாளைத் தூக்கியது..

சுகாவிடம் தொடர்ந்து ஒரு மணிநேரமாவது தொலைபேசும் பேராசிரியர் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறையேனும் “அடப்பாவிகளா” என அலறுவார்.அந்த உரையாடல் முடிந்த கையோடு சுகா என்னை அழைத்து பேராசிரியர் மாட்டிக் கொண்ட இடங்களை விளக்க நான் அதை முடிந்த வரை பரப்புவேன். இவையெல்லாம் எங்கள் தமிழ்த்தொண்டின் ஒரு பகுதி.

சமீபத்தில் முனைவர் கு.ஞானசம்பந்தன் ,தான் நடித்த ஒரு படம் சர்வதேச விருதுக்கான தேர்வுக்குப் போயிருப்பதை சொல்ல, சுகா கேட்ட கேள்வி ” அதாவது நீங்களும் ஒலகநாயகன் னு சொல்ல வர்றீங்க!”

” அய்யய்யோ! அடப்பாவிகளா!நான் என்ன சொல்றேன்! நீங்க என்ன சொல்றீங்க?”
இந்தச் செய்தி எனக்குத் தெரிய வந்ததும் சுகாவை கடுமையாகக் கண்டித்தேன். “பேராசிரியரை பிரபஞ்ச நாயகன் னு சொல்லுங்க”.அவரும் பலமாக ஆமோதித்தார்.

இதற்கிடையில்தான் அந்தத் தகவலை சுகாவுக்கு சொன்னேன்.”ஓரு விஷயம் தெரியுமா சுகா? நானும் ஒரு படத்துக்கு வசனம் எழுதிக்கிட்டிருக்கேன்”>

சுகா அதிர்ந்து போய் ” என்னண்ணே சொல்றீங்க” என்றார்.

“ஆமாங்க! ஒரு திகில் படம்”

“கேட்கவே திகிலா இருக்குண்ணே”

மற்றவற்றை வெள்ளித் திரையில் காண்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *