பெண்களைப் பொறுத்தவரை அழகின் அடையாளங்கள் மட்டுமின்றி
அசைவின் அடையாளங்களும் முக்கியம். சலங்கையொலி வளையலொலி
ஆகிய இரண்டுமே இயங்கிக் கொண்டேயிருக்கும் பெண்களை நமக்கு
அறிமுகம் செய்யும்.அந்த அணிகலன்கள் அழகையும் உணர்த்தும்.
செயலையும் உணர்த்தும்.

அங்குமிங்கும் பரபரவென்று நடமாடும் பெண்களின் சலங்கையொலி
துரித கதியில் கலகலக்கும்.அதேபோல அவர்கள் ஏதேனும் வேலை
பார்த்துக் கொண்டேயிருந்தால் கைவளையல் சலசலக்கும். இறைவன்
அளந்த இருநாழி நெல் கொண்டு உலகத்திற்கே படியளக்கும்
புவனமுழுதுடையாள், மங்கலத்தின் திருவுருவாகத் திகழ்கிறாள்.
மலையான் மகளாகப் பிறந்ததால் மலையரசியும் அவளே.
செங்கலசம் போன்ற திருமுலைகளை உடையவள்.அவள் எல்லா
உயிர்களுக்கும் அள்ளியள்ளித் தருவதில் அவள் கைகளில் இருக்கும்
சங்கு வளையல்கள் ஓயாமல் அலைந்து கொண்டேயிருக்கின்றன.

அலைகள் பெருகும் கங்கையினைத் தன் ஜடாபாரத்தில் அடக்கி
ஆளுகிற சிவபெருமானின் திருமேனியில் ஒரு பாகத்தை ஆள்கிற
அம்பிகை பொன்வண்ணமாகவும் நீலவண்ணமாகவும் சிவந்த நிறமாகவும்
வெண்ணிறத் திருமேனியாகவும் மரகதத்திருநிறக் கொடிபோலவும்
வெவ்வேறு தாத்பர்யங்களில் காட்சி அருள்கிறாள்.

நிறங்களால் தேவாதி தேவர்களையும் தேவர்களையும் குறிக்கும்
மரபு நம்மிடமுண்டு.

“செய்யன் கரியன் வெளியன் வெளியன் நற்பச்சையன்
எய்த உணர்ந்தவர் எய்யலர் இறைவனை”

என்னும் திருமந்திரம்,முறையே பிரமன்,இந்திரன்,உருத்திரன்,திருமால்
ஆகியோரைக் குறிக்கும்.அவர்கள் இயற்றும் தொழில்களுக்கும் அதிபதி
அபிராமி என்பதும் இதிலுள்ள குறிப்பு

“மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலைச் செங்கை சகலகலாமயில் தாவுகங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடை ஆளுடையாள்
பிங்கலை,நீலி,செய்யாள்,வெளியாள், பசும்பெண்கொடியே”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *