வெறுக்கவும் செய்வாளோ?

ஒருவரை ஆட்கொள்ள வேண்டுமென்று முடிவு செய்துவிட்டால் அவர் என்ன தவறு செய்தாலும் மன்னித்துக்கொண்டே இருப்பாள் அம்பிகை.

ராமகிருஷ்ணரிடத்தில் வந்தவர்களிலேயே மிகவும் முரட்டுத்தனமாக எதிர்கேள்விகள் கேட்டு நடந்து கொண்டவர் நரேந்திரர். ஆனால் எல்லோரை விடவும் நரேந்திரர்மேல் தனி அக்கறையும், அன்பும் காட்டி அவர் கேட்கிற எல்லாக் கேள்விகளையும் பொறுத்துப் போனார் பரமஹம்சர்.

சீடர்கள் யாரும் கேட்கத் துணியாத கேள்விகளையெல்லாம் நரேந்திரர் கேட்டார்.”உள்ளபடியே நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

ஒரு குருவைப் பார்த்து இப்படிக் கேட்டால் அவர் சாதாரண ஆளாக இருந்தால் கோபம் வந்து விடும். அவர் பொறுத்துக்கொண்டே வந்தார்.

அர்ஜுனனுக்கு கண்ணன் கீதையைச் சொல்கிறார். கடைசிவரைக்கும் அர்ஜுனன் நம்பவேயில்லை. “சில ரகசியங்களை நான் முதலில் சூரியனுக்குச் சொன்னேன். சூரியன் இடிவாருவுக்கு சொன்னான்”. என்று கண்ணன் சொன்னால் “நீ இப்போது பிறந்த ஆள். நீ எப்படி சூரியனுக்குச் சொல்லியிருக்க முடியும்?” என்று கேட்டான் அர்ஜுனன். விஸ்வரூபத்தைக் காட்டியபிறகுதான் புரிந்து கொண்டான்.

இறைவனுக்கோ, குருவுக்கோ ஓர் உயிரின் பழுக்கக் கூடிய பக்குவம் தெரிந்துவிட்டால் அவர்கள் என்ன தப்பு செய்தாலும் மன்னித்து பக்கத்திலேயே வைத்திருப்பார்கள்.

தேவர்களும், அசுரர்களும் இறைவனுடைய பிரார்த்தனைக்குப் பிறகு செய்யத் தொடங்க வேண்டும் என்ற அறிவில்லாமல் நேரடியாக அமுதம் கடையத் தொடங்கினார்கள். நஞ்சு வந்தது. அதற்காக நஞ்சை அருந்தி உயிர்விடுங்கள் என்று கடவுள் அவர்களை விட்டு விடவில்லை.

அவர்கள் செய்தது தவறு என்றாலும் இவர் அந்த நஞ்சை தன்னுடைய கண்டம் கறுக்குமாறு உண்டு அவர்களைக் காப்பாற்றினார்.

ஆலகால விஷம்தான் உவகில் தோன்றிய முதல் நஞ்சு. அதுவரைக்கும் நஞ்சு என்பதே கிடையாது. அதை முதலில் சாப்பிட்டவர் சிவபொருமான். எனவே புது நஞ்சு என்கிறார் அபிராமி பட்டர்.

கடவுளிடம் நீங்கள் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் இறைவன் எதைக் கொடுத்தாலும் நமது நன்மைக்கே என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அம்பிகை தருவது அத்தனையும் எனது ஆக்கத்திற்கே அன்றி என்னைத் தாழ்த்துவதற்கு அல்ல என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

அம்பிகை நமக்குத் தருகிற சோதனைகள் அனைத்துமே பின்னாளில் நம்மைக் காப்பதற்கான தடுப்பூச்சிகள்.

அம்பிகையின் பெருங்கருணைக்கு ஆட்படுகிற போது மனம் விண்ணப்பம் வைக்கிறது. “நான் தப்பு செய்தால்கூட என்னை வெறுத்துவிடாதே. நீ என்னை கொடுத்தாலும் எனக்கு நல்லதே என்று பக்குவத்தை நீ ஏற்கனவே அருளிவிட்டாய், அதனால் எனக்கு கவலையில்லை” என்றார்.

வெறுக்கும் தகைமைகள்செய்யினும்தம்மடி யாரைமிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றேபுது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்தபொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும்யான் உன்னை வாழ்த்துவனே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *