அவளுக்கு ஆவதென்ன?

ஆயிரம் மின்னல்கள் கூடி ஒரு திருமேனி கொண்டது போல் தோன்கிறாள் அபிராமி. நம் அகம் மகிழும்படியான ஆனந்தவல்லி அவர் எனும் பொருள்பட,

“மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குன்றது
தன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி”

என்கிறார் அபிராமி பட்டர்.

அவனை நாம் வணங்குவதால் ஏதும் பயனுண்டா என்ற கேள்விக்கு அபிராமி பட்டர் இந்தப் பாடலில் பதில் சொல்கிறார்.

விரலில் மோதிரம் போடுகிறோம். நம் விரலில் இருப்பதால் அந்த மோதிரத்திற்கு ஏதாவது பெருமை உண்டா? யார் விரல்களில் மோதிரம் இருக்கிறதோ அவர்களுக்குப் பெருமையே தவிர, இந்த மோதிரத்திற்கு யார் கையில் இருக்கிறோம் என்பதால் எந்தப் பெருமையும் கிடையாது. இறைவன் தங்கம், வைரம், வைடூரியம் போன்றவன். அவனை அணுகுவதால் நமக்குப் பெருமை, நம்மோடு இருப்பதால் அவனுக்கு எந்தப் பெருமையும் கிடையாது.

பொன்னால் பிரயோஐனம் பொன் படைத்தாருக்கு உண்டு.

பொன் படைத்தேன் தன்னால் பிரயோஐனம்
பொன்னுக்கு அங்கு ஏதுண்டு? அத்தன்மையைப் போல்
உன்னால் பிரயோஐனம் நிரம்ப உண்டு இங்குனக்கு
என்னால் பிரயோஐனம் ஏதுகண்டாய் கச்சி ஏகம்பனே

என்று கேட்கிறார், பட்டினத்தார்.

எப்போதுமே புறக்கருவிகளால் பயனில்லாதபோது அகக்கருவி இன்னும் கூர்மையாகும். மாற்றுத் திறனாளிகள் என்று ஊனமுற்றவர்களை நாம் சொல்கிறோம். நமக்கு கண் இருக்கிறது என்று நாம் பெருமைப்படுகிறோம். என்ன பிரயோஐனம்? ஆயிரம் மின்னல் பிரகாசமாய் அம்பிகை நம் முன்னால் வந்து நின்றால் நம்மால் பார்க்க முடியாது. ஒற்றை மின்னல் பார்த்தாலே பார்வை போய்விடுகிறது. எப்போதுமே கண்மூடி இருப்பவர்களுக்கு தெய்வத்தை உள்ளேயே தரிசிப்பதற்கு வாய்ப்பு அதிகம்.

“முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்”

என்று திருமூலர் சொல்கிறார். புறத்தோற்றங்கள், புறப் பொருட்கள், புற பூதங்கள் ஆகியவை இந்தப் புலன்கள் எதற்கென்றால் நாம் வெளியே பெறக்கூடிய அனுபவங்களுக்காக.

சதா சர்வகாலம் மனதிலே ஆனந்தம் நிலைபெறுமாறு செய்பவள் ஆனந்தவல்லி. அவள் சிவானந்தவல்லி, அவள் எங்கேயிருக்கிறாள்? ஓங்காரம் என்னும் பிரணவ ரூபமாக இருக்கிறாள். நான்கு வேதங்களின் சாகைகளாக இருக்கிறாள். உபநிஷதங்களாக இருக்கிறாள். எல்லாமுமாக அவள்தான் இருக்கிறாள். இந்த அம்பாளை நான் கும்பிடவா வேண்டாமா என்று ஒருவர் கேட்கிறார்.

அவருக்குத்தான் அபிராமி பட்டர் சொல்கிறார். அவள் எப்படிப்பட்டவள் தெரியுமா? ஆயிரம் மின்னல்கள் ஒரு வடிவமானவள், மனதிற்குள்ளே ஆனந்த வடிவமாக இருப்பவள். ஓங்காரமாய், வேதங்களின் வடிவமாய், உப நிஷதங்களாய் இருப்பவள், நீ அவனை வணங்கினாலும் சரி, வணங்காவிட்டாலும் சரி, அதனால் அவளுக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை.

நம்மில் பலர் என்ன செய்கிறோம் என்றால்,”நீ மட்டும் எனக்கு இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொடு. உன் கோவிலை நான் 108 முறை சுற்றுகிறேன். நாம் சுற்றுவதால் அம்பிகைக்கு என்ன லாபம்? வடை மாலை சார்த்திகிறேன் என்பார்கள். 108 வடையை செய்து மாலை சார்த்திவிட்டு அனைத்தையும் அவனே சாப்பிடுவதால் ஆஞ்சநேயருக்கு என்ன பலன்? கடவுளை நாம் விரும்பினாலும் கடவுளுக்கு அதனால் எந்தப் பயனும் கிடையாது.

தெய்வானுபவத்தை நிலையாக நம் மனதிற்குள்ளே நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஒருமுறை அபிராமியை தரிசிக்கிறோம். மனத்திற்குள்ளே அவளை பிரதிஷ்டை செய்கிறோம். ஒருமுறை அபிராமியின் நாமம் செவியில் விழுகிறது. மனம் அபிராமி அபிராமி என்று ரீங்காரம் இடத் தொடங்குகிறது. ஒருமுறை அவளுடைய சந்நிதியிலே தீபத்தை கைகளில் ஒற்றுகிறோம். நிரந்தரமாக அது நம் மனதில் தங்குகிறது. வெளியிலிருந்து பெறுகின்ற விஷயத்தை உள்ளே நிலை பெறுமாறு செய்வதற்காகதான் இந்தக் கரணங்கள் நமக்குத் தரப்பட்டிருக்கின்றன. ஆயிரம் மின்னல்போல் இருப்பவளை நீங்கள் அகத்திற்குள்ளே நிலைநிறுத்திகிறபோது அவள் அகமகிழ் ஆனந்த வல்லியாக வெளிப்படுகிறாள். அவளை மனதிற்குள் நீங்கள் உணர்ந்துவிட்டால் வேதங்கள், உபநிஷதங்கள் எல்லாம் கல்லாமலேயே உங்கள் பார்வைக்கு வரும். அதனுடைய சாரமாக அவளே இருக்கிறாள்.

அபிராமி பட்டரை திருக்கோவிலில் அர்ச்சகராகப் பணிபுரிவதற்கு அம்பிகை பணித்த நாள்தொட்டு அந்த விக்கரகத்தை அவர் உள்வாங்கினார். எல்லோரும் புறப் பூசனையிலே ஈடுபட்டபோது அவர் அகப்பூசனையிலே ஆழ்ந்து ஆனந்தமாக இருந்தார். அதனால் அவருக்கு உள்ளே அகக்கண் திறந்தது, அங்கே அம்பிகையின் தரிசனம் நிரந்தரமாக நிகழ்ந்தது.

எப்போதுமே தெய்வ தரிசனம் உள்ளுக்குள்ளே சித்திக்கப் பெற்றவர்கள் இந்த சமூக வாழ்க்கையோடு தொடர்பில்லாதவர்கள்போல் தென்படுவார்கள். ஆனால் அவர்களுடைய விழிப்புணர்விலே இந்தப் பிரபஞ்சமே வந்து போகும். விடியல் என்றால் என்ன? இரவு என்றால் என்ன? எந்த நேரத்தில் தெய்வாம்சத்துடைய சொரூபம் நமக்குத் தெரிகிறது? எல்லாமே அவர்களுக்குத் தெரியும். அப்படி வந்தவர்கள் சொல்கிற வாக்குதான் நிறைவாக்கு…

“அருமறைக்கு முன்னாய் நடுஎங்குமாய்
முடிவாய முதல்வி”

மறைகளின் வேராகவும் மறைகளில் வியாபித்திருப்பவனவாகவும் மறைகளின் முடிந்த முடிவாகவும் இருக்கக் கூடியவள் அபிராமி. அவளை நாம் நினைக்காவிட்டாலும் நினைத்தாலும் அவளுக்கு ஆகப்போவது ஏதுமில்லை என்கிறார் அபிராமி பட்டர்.

மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற
அன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
முன்னாய் நடுஎங்குமாய் முடிவாய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *