தாமரைக்காடு

அம்பிகையை தாமரைத் தோட்டமாக தரிசிக்கிற பாடல் இது. அருணம் என்றால் சூரியன், சூரியனைப் பார்த்து மலரக்கூடியது தாமரை. அந்தத் தாமரையிலும் நம் சித்தமாகிய தாமரையிலும் அவள் அமர்ந்திருக்கிறாள். அம்பிகையினுடைய தன பாரங்கள் தாமரை மொக்குகளைப் போல் இருக்கின்றன. அவளுடைய கண்களும் தாமரைப் பூக்களாக இருக்கின்றது. முகமும் தாமரைப் பூவாக இருக்கின்றன. கைகளும் தாமரைப் பூக்களாகத் தோன்றுகின்றன. பாதங்களும் தாமரைப் பூக்களாகத் தோன்றுகின்றன. பேரழகின் திருவடிவை நீங்கள் தவிர்க்கவே முடியாது.

இராமன் கணை பட்டு வாலி விழுந்து கிடக்கிறான். கண்கள் செருகுகின்றன. யார் நம் மீது அம்பு போட்டதென்று கண்களைத் திறந்து பார்த்தான். ஒரு பெரிய மேகத்திற்கு மேல் தாமரை மலர்ந்திருக்கிறது. கைகளில் வில்லை வைத்திருக்கிறது. அப்படியே வந்துகொண்டு இருக்கிறது. தன்னைக் கொன்றவனைப் பார்த்து இப்படி யாருக்காவது தோன்றுமா? ஒரு நீலமேக சியாமள வண்ணன் மலர்ச்சியோடு என்னைக் கொன்றான் என்று அட கொலைகாரப் பாவி என்று சொல்லத் தோன்றும். ஆனால் உயிர் பிரிகிற நேரத்தில் அந்த தரிசனம். அவனுடைய அகக்கண்களில் தெரிகிறது. அம்பு விட்டது மறந்துபோனது. வந்திருப்பது பரமாத்மா என்று தெரிகிறது.

“கண்ணுற்றான் வாலி நீலக் கார்முகில் கமலம் பூத்து
மண்ணுற்று வரிவில் ஏந்திவருவதுதே போலும்மாலை”

அபிராமி அன்னையை அகக்கண்ணில் பார்த்த அபிராமி பட்டருக்கு முழுக்க தாமரை வடிவமாய் அவள் இருக்கிறாள். அவள் அமர்ந்திருந்த இடம் மட்டும் தாமரை அல்ல, அவள் வடிவமே தாமரை. தகைசேர் நயனம் என்றால் பெருமைகொண்ட கண்கள் என்றும் பொருள்.

“பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே”
என்று தேவாரம் பாடுகிறதல்லவா?

அவளுடைய கண்களாகிய தாமரை எப்போதும் சிவபெருமானுடைய பேரழைகை பருகிக்கொண்டே இருக்கின்றன. அம்பிகையினுடைய கண்கள் ஏற்கனவே அழகானவை. பேரழகனான சிவப்பெருமானின் அழகைப் பார்த்துக் கொண்டே இருப்பதால் அந்தத் தகை சேர்ந்து அந்தக் கண்களுக்கு கூடுதல் அழகு வந்தது.

எப்போதும் அடியார்களைப் பார்க்கும் போது அவள் முகம் தாமரைபோல் மலர்கிறது. கைகளிலே தாமரை மலர்களை வைத்திருக்கிறாள். அவள் கைகளும் தாமரை போல் இருக்கின்றன. அவள் திருவடிகளாகிய தாமரை அபிராமி பட்டருக்கு நெருக்கம். ஏனென்றால் அவருடைய சிரசின்மேல் தன் பாதங்களைப் பதித்திருக்கிறாள். அதில் தாமரை மலர்களுடைய குளிர்ச்சியை, மென்மையை, பரிமளத்தை உணர்ந்திருக்கிறார்.

ஒரு தாமரைக் காடு போல் தேவி தோற்றமளிக்கிறாள். இதைத்தான் என் மனதில் எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கிறேன் என்கிறார் பட்டர். இதைவிட எனக்கு வேறு தஞ்சம் உண்டா என்று கேட்கிறார்.

அருணாம் புயத்தும்என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயமுலைத் தையல்நல்லாள் தகை சேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்
சரணாம் புயமும்அல் லாற்கண்டிலேன் ஒரு தஞ்சமுமே.

அடுத்தவர்களுடைய குறைகளை அருளாளர்கள் தங்கள்மேல் ஏற்றிப்பாடுவார்கள் என்பதை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டே வந்திருக்கிறோம். மனதிற்கு நன்றாகத் தெரிகிறது, இதைவிட தஞ்சம் வேறில்லை என்பது. அம்பிகையினுடைய தவநெறிக்கப் போகலாம் என்று பார்த்தால் மனது ஒத்துழைக்க மறுக்கிறது. வேறு பக்கம் திசைதிருப்பிக் கொண்டு போகிறது.

ஒரு வகுப்பில் ஐம்பது குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் மூன்று குழந்தைகள் பாடத்தை சரியாகக் கவனிக்காவிட்டால் அந்த மூன்று குழந்தைகளைத்தான் ஆசிரியருக்கு நன்றாகத் தெரியும். மற்ற 47 பேரைப் பற்றி கவலையே இருக்காது. அந்த மூன்று பேரை தெரிந்து அறிவுறுத்தி படிக்க வைக்க முயல்வார்கள்.

அம்பிகை அதுபோல் சிலரைத்தான் தன் நெறியில் ஈடுபடுத்துவதற்கு அவள் முயல்கிறாள். நான் படியாத பிள்ளைதான். என்னை அதற்காக அளவுக்கதிகமாய் பிள்ளைதான். என்னை அதற்காக அளவுக்கதிகமாய் துன்புறுத்தாதே என்று இந்தப் பாடலில் விண்ணப்பம் செய்கிறார்.

அவள் திருவுருவத்தை திரும்பத் திரும்ப மனதில் நினைப்பதே தியானம். அதை என் மனம் பழகமாட்டேன் என்கிறது.

அம்பிகையின் கைகளில் என்ன இருக்கிறது? மன்மதனுடைய கரும்பு வில்லும், ஐந்து மலர்கணைகளும் உள்ளன. இதை தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொண்டே வருகிறார். என்ன காரணம்? காமனுடைய கைகளில் இருக்கின்ற மலர்கணைகளை நினைத்தால் காமம் பெருகும். காமத்தை வென்ற காமாட்சி அதைத் தன் கைகளில் வைத்திருப்பதை நினைத்தால் ஞானம் பெருகும்.

ஒரே கருவிதான் துப்பாக்கி. அது தீவிரவாதி கையில் இருந்தால் நமக்கு பயமாக இருக்கிறது. காவல்துறையினர் கையில் இருந்தால் நமக்கு நிம்மதியாக இருக்கிறது. கரும்பு வில் காமன் கைகளில் இருக்கிறபோது நம்மை சிறைப்படுத்துகிறது. அம்பிகையின் கைகளில் இருந்தால் நமக்கு விடுதலை கொடுக்கிறது.

பஞ்சைக் கொண்டு பாதத்தில் ஒற்றினால் வலிக்கும் என்று பயப்படக்கூடிய அளவிற்கு என்றும் உள்ள தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள்மேல் கோபத்தைக் காட்ட மாட்டார்கள். நீயும் என்மேல் காட்டாதே என்கிறார் அபிராமி பட்டர். இதில் இன்றைய தாய்மார்களுக்கொரு செய்தி இருக்கிறது.

ஒரு குழந்தையை அடிக்க வேண்டுமென்று ஏன் தோன்றுகிறது? அந்தக் குழந்தை செய்கிற தவறினால் அல்ல. நம் மனதில் ஏற்கனவே இருக்கிற அழுத்தங்கள் கின்னக் குறும்பைக் கூட தாங்க முடியாமல் செய்கிறது.

அலுவலகத்தில் மேலதிகாரி மேல் கோபம் இருக்கும். சாலையில் செல்லும்போது எவனாவது தவறு செய்திருப்பான். அவனை நம்மால் அடிக்க முடியாது. இந்தக் கோபத்தையெல்லாம் காட்டுவதற்கு நமக்கு ஓர் இடம் இருக்கிறது. அது குழந்தையின் முதுகு. ரௌடி, அயோக்கியன், மேலதிகாரி மேல் இருக்கும் கோபத்தையெல்லாம் இங்கே பலர் இறக்கி வைக்கிறார்கள். குழந்தை வளர்க்கும் கலையையும் கற்றுத்தருகிறார் அபிராமி பட்டர்.

தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும்
அஞ்சம்பும் இக்(கு)அலர் ஆகநின்றாய்அறி யார்எனினும்
பஞ்சஞ்சும் மெல்லடி யார் அடியார் பெற்ற பாலரையே.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *