தன்னை எவ்வளவு தூரம் தாழ்த்திக்கொண்டு அம்பிகையின் திருவடிகளிலே விண்ணப்பிக்கிறார் என்பதற்கு இந்தப் பாடல் சிறந்த அடையாளம்.

அபிராமியைப் பார்த்து பட்டர் கூறுகிறார், “தங்க மலையாகிய மேருவை சிவபெருமான் வில்லாக வளைத்துக்கொண்டு சென்றாலும் உடனிருப்பவள் நீ. உன் திருவடிகளின் துணையில்லாமல் எந்தத் துணையும் இல்லாத மிகச்சிறியவன் நான். உன்னைப் பற்றி கர்ம வினைகளின் பிடியில் உள்ள நான் எழுதிய பாடல் மிகவும் தாழ்ந்ததாக இருக்கலாம். ஆனாலும்கூட உன் திரு நாமங்கள் இந்தப்பாடலில், இருப்பதால் இதனை நீ ஏற்கலாம். தவறில்லை” என்கிறார்.

ஐந்து வயதுக் குழந்தையைக் கூப்பிட்டு உனக்கு இந்த உலகத்திலேயே யாரை ரொம்ப பிடிக்கும்? என்று கேட்டால் அம்மாவைப் பிடிக்கும் என்று சொல்லும். உடனே அம்மாவைப் பற்றி ஆறு பக்க அளவில் கட்டுரை எழுது என்றால் அது அம்மா அம்மா என்றுதான் எழுதிக்கொண்டு வரும். ஆனால் அந்த அம்மாவிற்கு அதைவிட உயர்ந்த பரிசு வேறு எதுவும் கிடையாது. ஆறு பக்கங்களுக்கு அம்மா அம்மா என்று பிள்ளை எழுதிக்கொண்டு வந்தால் அம்மா, இதென்ன என்னைப் பற்றிய கட்டுரையா என்று கொஞ்சுவாள்.

எனக்கு உன்னைப்பற்றி எழுதவேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது. கண்டதையும் எழுதி வைத்திருப்பேன். ஆனால் அதில் அங்கங்கே உன் பெயர் வருகிறது அம்மா. நீ ஏற்றுக் கொள்வாயா, மாட்டாயா? என்று கேட்கிறார்.

இந்த உணர்வு என்று படைப்பாளர்களுக்கு வருகிறதோ அவர்களுடைய படைப்பில் தெய்வீகம் நிலை பெறும். இது நான் செய்தது என்று மனதில் தோன்றி விட்டாலே கர்வம்தான் இருக்கும். தெய்வம் இருக்காது. தன்னைக் கடவுள் படைத்தது எதற்கு என்று கேட்டபோது திருமூலர் சொன்னார். என்னை நன்றாக படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு என்று.

அம்பிகையின் திருநாமங்களுக்கு இருக்கும் மேன்மையை உணர்த்தும் பாடல் இது. இந்த அந்தாதி சொல்பவர்கள் உன்னுடைய பெயரை மட்டும் சொன்னால் போதும், நீ பார்த்துக் கொள்வாய் அல்லவா என்று கேட்கிறார்.

வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன்; நின்மலரடிச்செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன்; பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்; வினையேன்தொடுத்த
சொல்லவ மாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *