அழகிற்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி

அவள் ரொம்ப அழகு என்று யாராவது ஒரு பெண்ணைப் பார்த்துச் சொன்னீர்கள் என்றால் என்ன மாதிரி அழகு என்று கேட்பார்கள்.

ஒரு பெண்ணுடைய அழகைப் பார்த்தால் நீங்கள் யாருடனாவது ஒப்பிட முடியும். ஏறக் குறைய இந்தப் பெண்மாதிரி அழகு. அந்த பெண் மாதிரி அழகு என்றாவது சொல்லலாம்.

அம்பிகை எப்பேர்ப்பட்ட அழகு என்றால் அம்பிகை மாதிரி அழகு. அவளை யார் கூடவும் ஒப்பிட முடியாது. ஒப்பிடுவது என்பது எப்போது வரும்?

ஒன்றைப் பார்த்து இதுபோல் இருக்கிற தென்று உங்கள் மனம் நினைத்தால்தான் ஒப்பிடவே முடியும். ஆனால் அம்பிகை அழகு தனியாக நிற்கும். அந்த அழகைப் பார்த்து விட்டால் வேறு எதையுமே ரசிக்கத் தோன்றாது.

அம்பிகையினுடைய பாதங்கள் எப்போதும் சிகப்பாக இருக்கின்றன. அம்பிகை வீற்றிருக்கிற ஆசனத்திற்கு நான்கு வேதங்களும் நான்கு பீடங்களாக இருக்கின்றன. அந்த நான்கு வேதங்களுக்கும் பெரிள சந்தோஷம், நாம் அம்பிகையின் பாதங்களுக்குக் கீழே இருக்கிறோம்.

சதாசர்வ காலமும் அவளுடைய திருவடிகள் மென்மையை தரிசித்துக்கொண்டே இருக்கலாம் என்று நான்கு வேதங்களும் நினைத்தன.

அவற்றுக்கு என்ன வருத்தம் என்றால் அவள் ஒரே இடத்தில் உட்கார மாட்டாள். யாராவது ஓர் அடியவருக்குத் துன்பம் என்றால் ஓடுவாள். திரும்ப வருவாள். இந்த நான்கு வேதங்களும் அவளுக்குப் படிகளாகப் பயன்பட்டன.

எப்படியென்றால் அவ்வப்போது அவளுடைய பாதங்கள் பட்டுக்கொண்டே இருக்குமே தவிர நிரந்தரமாக அவளுடைய பாதங்களைப் பற்றிக்கொண்டிருக்கிற வாய்ப்பு வேதங்களுக்கு இல்லை. அந்தப் படிகளில் ஏறி இறங்கி அந்தப் பாதங்கள் எப்போதும் சிகப்பாகவே இருக்கின்றன.

ஓர் அடியாரைப் பார்த்துவிட்டு, இன்னோர் அடியாரிடம் செல்வதற்கு முன்பு ஒரு சிறிய இடைவெளி கிடைக்கும்.

அந்த இடைவெளியில் நான்கு வேதங்களும் அவளுடைய பாதங்களைத் தொட்டு வணங்கிக் கொண்டே இருக்கின்றன. ஓடி ஓடி அவள் பாதங்கள் சிவக்கின்றன. இந்த வேதங்கள் தொட்டுத் தொட்டு அவள் பாதங்கள் சிவக்கின்றன.

நிலவினுடைய இளம் பருவத்துத் தோற்றம் மூன்றாம் பிறை. மூன்றாம் பிறைக்கு இருக்கிற பெரிய சிறப்பு அதில் கறை கிடையாது. களங்கம் கிடையாது. அதைத்தான் இறைவனும், இறைவியும் தங்கள் திருமுடியில் அணிந்து கொண்டிருக்கிறார்கள்.

இருவரும் அர்த்தநாரீஸ்வர கோலத்தில் இருக்கிற போது இருவருக்கும் பொதுவாக சடாமுடியில் பிறைநிலவு இருக்கிறது.

தன் சிரசிலே இளம் பிறையை சூடிக்கொண்டு இருக்கிறாள். பிறை நிலவை, முற்றாத பால் மதியம் என்று திருநாவுக்கரசர் சொல்கிறார். திங்கட் கொழுந்தணிவேணிக் கூத்தர் என்று சேக்கிழார் சொல்கிறார்.

அம்பிகை பிறை நிலவை அணிந்தவள். அந்தப் பிறை, முழு நிலவினுடைய குழந்தை போல் இருக்கிறது.

கோமளம் என்றால் தாமரை, யாமளை என்றால் கறுப்பு நிறம் கொண்டவள். தாமரையினுடைய மெல்லிய இயல்புகளும் கறுப்பு வண்ணமும் கொண்டவள்.

அவள் கொடி போல் இருப்பாள். கொம்பாகவும் இருப்பாள். கொடியும், கொம்பும் என்ன பண்ணும்?

சிவபெருமான் கொம்பாக இருக்கிறபோது அவள் கொடியாக பற்றிப் படருவாள். அடியவர்கள் பற்றுக் கோடில்லாமல் தவிக்கிறபோது அவர்களுக்கு கொம்பாக வந்து நிற்பாள்.

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத் தாள்பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றநெஞ்சே என்கிறார்.

இழவு என்றால் வருத்தம். ஏதாவது துக்க காரியங்கள் நடந்தால் அதை இழிவு என்று நாம் சொல்கிறோம். கொண்டாட்டத்திற்கு விழவு என்று பெயர். வருத்தத்திற்கு இழவு என்று பெயர். மனம் சதாசர்வகாலமும் ஏதாவது ஒரு வருத்தத்திலேயே உழன்று கொண்டே இருக்கிறது. சிலபேர் என்ன காரணம் என்றே தெரியவில்லை; வருத்தமாக இருக்கிறது என்று சொல்வார்கள்.

பழக்கத்தாலேயே சிலருக்கு வருத்தம் வருகிறது. காரணம் அவசியமில்லை. தூங்குவது போல், சாப்பிடுவது போல், தினமும் மூன்று மணி நேரம் வருத்தமாக இருப்பது என்பதையும் பழகியிருப்பார்கள். சும்மா வருத்தப்படாதே. உனக்கு என்ன குறை? என்கிறார் அபிராமி பட்டர்.

அடைக்கலம் தேடிவந்த நிலவை அள்ளி தலையில் வைத்துக் கொண்டாடிய அம்பிகை இருக்கிறபோது உனக்கு என்ன குறை? நீ பற்றிப் படர்வதற்கு அவள் கொம்புபோல் இருக்கிறபோது உனக்கு என்ன குறை?

நான்கு வேதங்களையும் தாண்டி ஓடோடி வருவதற்கு அவள் தயராக இருக்கிறபோது உனக்கு என்ன குறை? ஈடு சொல்ல முடியாத அந்தப் பேரழகி உனக்கு முப்போதும் துணையாக இருக்கிறபோது உனக்கு என்ன குறை? குறையொன்றுமில்லை.

அழகுக்(கு) ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள்பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றநெஞ் சேயிரங்கேலுனக்(கு) என்குறையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *