இனியேது பிறவி?

இந்திரலோகத்தில் கேட்டதையெல்லாம் தரக் கூடிய மரம் இருக்கிறது. அதன் பெயர் கற்பக விருட்சம். அந்த கற்பக விருட்சத்தின் கீழ் ஒருவன் அது கற்பக விருட்சம் என்பது தெரியாமல் உட்கார்ந்தான்.

ரொம்ப களைப்பாக இருக்கிறதே இளநீர் கிடைத்தால் பரவாயில்லை என்று நினைத்தான்; இளநீர் வந்தது. இளநீரைக் குடித்தபிறகு இளநீர் போதுமா? பசியாறுவதற்கு. நல்ல அறுசுவை உணவு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான்.

அறுசுவை உணவு வந்தது. சாப்பிட்ட பிறகு புழுக்கமாக இருக்கிறதே, நல்ல குளிர்ந்த தென்றல் வீசினால் பரவாயில்லை என்று நினைத்தான். குளிர்ந்த தென்றல் வீசியது.

மரத்தில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டே தூங்குவது சிரமமாக இருக்கிறது. பஞ்சணை வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். பஞ்சணை வந்தது. படுத்துக்கொண்டான் காட்டுக்கு நடுவில் தென்றல் வருகிற இடத்திலே உண்டுவிட்டு மகிழ்ச்சியாக உறங்குகிறோம். நாம் கண்மூடித் தூங்குகிறபோது ஒரு புலி வந்து நம்மை தின்று விட்டால் என்ன செய்வது? என்று நினைத்தான். புலி வந்து அடித்துத் தின்றது.

ஒரே ஒரு கற்பக விருட்சம் இந்திர லோகத்தில் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். அந்த கற்பக விருட்சம் வேறு ஒன்றுமில்லை. நம் மனம்தான். நாம் நம்முடைய சக்திகளை உயரத் தூண்டி மனதிலே எதுவேண்டுமென்று நினைக்கிறோமோ அதுதான் நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லதையே பார், நல்லதையே கேள், நல்லதையே பேசு, நல்லதையே செய் என்று சொல்வதன் நோக்கம் நல்லதே நடக்கும் என்பதற்காகத்தான்.

மனிதனுடைய பெரும்பாலான துன்பங்கள் அவனுடைய மனதிலேயே பிறந்து வடிவமெடுத்து அவனுக்கு எதிராகத் திரும்புகின்றன. எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவில்லை என்பதைத்தான் அருளாளர்கள் திரும்பத் திரும்பச் சொல்லுகிறார்கள். இறைவழிபாட்டில் இருப்பவர்களுக்கு மனதின் சக்தி வேகமாகத் தூண்டப்படும். அந்த மனதிலே தீமைகளையே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தால் தீமைகளை நாமே வருவிக்கிறோம் என்று பொருள்.

கற்பக விருட்சத்தை எல்லோருக்கும் மனதிலே கடவுள் கொடுத்தார். ஆனால் அதைக் கையாள்வது மனிதனுடைய கையிலே இருக்கிறது என்று அந்தப் பொறுப்பையும் கொடுத்தார். நேர்மறையான எண்ணங்களால் உயர்ந்த எண்ணங்களால் அந்த கற்பக விருட்சத்தை நீரூற்றி வளர்த்தால் நல்லதே நடக்கும்.

தங்களுக்கு துன்பம் வந்துவிடும் என்று அருளாளர்கள் நினைத்தால் துன்பம் வந்துவிடும். அதனால்தான் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று திருநாவுக்கரசர் பாடினார்.

மனதை எப்போதும் நேர்மறையான சிந்தனைகளின் தளத்திலே வைத்துக் கொள்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும். அப்போதுதான் உங்களுக்குள் இருக்கிற கற்பக விருட்சம் நல்லபடியாக வேலை பார்க்கும். ஒன்றே ஒன்று தான் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடும். மறு படியும் மண்ணில் பிறவி கிடைக்காமல் போய்விடும்.

அம்பிகையினுடய அருளுக்குப் பாத்திரமாகாதவர்களுக்கு ஒன்றே ஒன்று நிரந்தரமாகக் கிடைக்கும். திரும்பத் திரும்பப் பிறப்பதுதான் அது.

அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்
பெருநோய்கள் கெடநலியப் பெயர்த்தும் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி இருக்கின்றாரே என்று திருநாவுக்கரசர் சொல்கிறார்.

ஏன் பிறக்கிறான் என்றால் இறப்பதற்கு, ஏன் இறக்கிறான் என்றால் பிறப்பதற்கு. தொடர்ந்து வெவ்வேறு தாய்மார்களுக்கு மகனாகப் பிறக்கிற வாழ்க்கைதான் நம் வாழ்க்கை.

ஒரு தாய் இரு தாய் பல கோடியதாய்
உடனே அவமாய் அழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா என்றருள் தாராய் என்று அருணகிரிநாதர் பாடுகிறார்.

திரும்பத் திரும்ப மற்ற தாய்களின் கருவிலே பிறந்து பிறந்து இறந்து இறந்து வருவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமா? அம்பிகை ஒருத்திதான் தன்னுடைய தாய் என்று தெளிவு வந்தால் மற்ற தாய்கள் உங்கள் வாழ்வை விட்டு நீங்கிவிடுவார்கள்.

தப்பாமல் வந்துகொண்டே இருக்கும். பிறவி தப்பிப் போகும். இவள் ஒருத்திதான் என்னுடைய தாய் என்ற உறுதிப்பாடு உள்ளத்திலே வருகிறபோது மறுபிறவி இல்லாமல் போகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? முந்தைய பாடலில் சொன்ன உருவத்தை குறிக்க வேண்டும். குறிக்கிறபோது அவள் யார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மால்வரை என்றால் எட்டுத் திக்குகளிலும் இருக்கக் கூடிய மலைகள், உவர் என்றால் உவர்ப்புச் சுவை. ஆழி என்றால் கடல். உவர்ப்புச் சுவை பொங்கி வழியக்கூடிய ஏழு கடல்களும், பதினான்கு புவனங்கள், அம்பிகையினுடைய கருவிலே எட்டுத் திக்குகளிலுள்ள மலைகள், ஏழு கடல்கள், பதினான்கு புவனங்கள் தோன்றின. இத்தனையும் ஈன்றவள் என்ற உணர்வோடு அம்பிகையினுடைய திருமேனியை மனதிலே குறிப்பவர்கள் கற்பக விருட்சத்தின் நிழலிலே இருப்பார்கள். வேறு பிறவி வாராமல் பிறவித் தொடரை முடித்துக் கொள்வார்கள்.

இத்தனையும் ஈன்றெடுத்த, புது மலர்களின் நறுமனம் வீசக்கூடிய கூந்தலைக் கொண்டிருக்கிற அம்பிகையின் திருமேனியை தன் உள்ளத்திலே யார் குறித்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்கிறார்.

கொங்கு என்ற சொல்லுக்கு மணம் என்று பொருள். தேன் என்று பொருள். மணம் பொருந்திய கூந்தல் என்று அர்த்தம். மணம் நிறைந்த மலர்களைச் சூடிய கூந்தல் என்று அர்த்தம். நாம் வசிக்கிற பகுதிக்கு கொங்கு நாடு என்று பெயர். கொங்கு என்பதற்கு புதிது என்றும் ஒரு பொருள் உண்டு. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, தொண்டை நாடு என்றெல்லாம் இருந்தபோது இடையிலே பிற்காலத்திலே காடு திருத்தி நாடாக்கிய நாடு கொங்கு நாடு. புதிதாகத் தோன்றியதால் அதற்கு கொங்கு நாடு என்று பெயர்.

தங்குவர் கற்பகத் தருவின் நீழலில் தாயரின்றி
மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும்
பொங்குவர் ஆழியும் ஈரேழ்புவனமும் பூத்தஉந்திக்
கொங்கிவர் பூங்குழ லாள்திருமேனி குறித்தவரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *