ஒளிரும் கலா வயிரவி

அடுத்த நான்கு பாடல்களில் ஓர் அழகிய வரிசை உள்ளது. இந்தப் பாடல் பதினாறு நாமங்களைக் கொண்ட பாடல். அதற்கடுத்த பாடல் இப்போது நிலவு தோன்றப் போகிறது என்பதை குறிப்பாக அபிராமி பட்டர் உணர்த்துகிற பாடல். அதற்கடுத்து நிலவு தோன்றியதும் அவருக்குள் தோன்றுகிற களிப்பை வெளிப்படுத்துகிற பாடல்.

தன் பிரார்த்தனைக்கு அம்பிகை அருள் செய்யும் நேரம் வருவதை உணர்ந்து சோடச நாமங்களால் தோத்திரம் செய்கிறார் அபிராமி பட்டர்.

இன்னொரு சிறப்பு இந்தப் பாடலில் உண்டு. அம்பிகையை அவர் உணர்ந்து எவ்வாறு என்பதை நாம் அறியும்படி அவர் அறிவுறுத்துகிறார்.

அபிராமி பட்டர் போன்ற அருளாளர்கள் உள்ளே எதைப் பார்த்தார்களோ அதையே வெளியில் எல்லா இடத்திலும் பார்த்தார்கள். உள்ளுக்குள் அவர்களுக்கு அபிராமி தரிசனம் சித்தித்த பிறகு அந்தத் திருவுருவத்தை உள்ளத்தில் எழுதி எழுதி வைத்தபிறகு எங்கே பார்த்தாலும் அவர்களுக்கு அபிராமியின் தரிசனம் சித்தித்தது.

இதை வெளியுலகிற்கு உணர்த்துவதற்கு அம்பிகை ஆடிய ஒரு நாடகம் அமாவாசையை பௌர்ணமி ஆக்கியது. இந்த நாடகத்தை அம்பிகை வேண்டுமென்றே நிகழ்த்தினாள் என்பதை பட்டர் இனிவரும் பாடல்களில் சொல்லப் போகிறார்.

ஓர் உருவம் இருக்க வேண்டும், அந்த உருவத்திற்கு நீங்கள் தோத்திரங்கள் செய்ய வேண்டும். தோத்திரங்கள் செய்யச் செய்ய அந்த உருவம் உள்ளுக்குள்ளே பதியும்.

பைரவி என்ற சக்தி பைரவருக்குரிய பெண் சக்தி. பைரவி என்றால் அச்சம் தருபவள் என்றொரு பொருள் உண்டு. அருள் நெறியின்பால் சாராமல் வெவ்வேறு விஷயங்களில் திசைமாறிப் போகிறவர்களுக்கு அவள் அச்சம் தருபவளாக இருக்கிறாள். தீமைகளுக்கு அச்சம் தருபவளாக இருக்கிறாள்.

பஞ்சும ஐந்தாவதாக இருக்கக்கூடிய சக்தி. அருளல் என்னும் தொழிலைச் செய்பவர் சதாசிவம். அவருடைய சக்தி பஞ்சமி. நமசிவாய என்னும் ஐந்தெழுத்திலே அவள் இருக்கிறாள். பஞ்ச புலன்களிலும், பஞ்ச பூதங்களிலும் அவள் இருக்கிறாள். படைத்தல், காத்தல், அழித்தல், கரத்தல், அருளல் என்பனவற்றில் ஐந்து தொழிலை அவள் தான் செய்கிறாள்.
பாசாங்குசை, பாசத்தையும் அங்குசத்தையும் கைகளில் ஏந்தியிருக்கிறாள். இதுபற்றிய விளக்கங்களை நாம் ஏற்கனவே விரிவாகப் பார்த்துள்ளோம். பஞ்சபாணி ஐந்து மலரம்புகளைக் கொண்டவளாக இருக்கிறாள்.

வேள்வியில் அவிர்பாகத்தை இறைவனுக்கென்று அர்ப்பணிப்பார்கள். அம்பிகையுடைய அவிர்பாகம் தீயவர்களுடைய உயிர். வஞ்சகர்களுடை உயிரையே ஆவியாக ஏற்கக்கூடியவள். சண்டி என்னும் உயர்ந்த தேவதையாக அவள் திகழ்கிறாள். தீமைகளை அழித்து, அந்தத் தீமைகளை உள்வாங்கி உயிர்களைப் புதுபிக்கின்ற, ஒளிவீசச் செய்கின்ற அற்புதத்தை அவள் செய்கிறாள்.

தெய்வத்தினுடைய அம்சங்கள் ஒன்று படைக்கும், இன்னொன்று தீயவற்றை அழிக்கும். சிஷ்ட பரிபாலனம், துஷ்ட நிக்கிரஹம் என்று சொல்வார்கள். ஒன்றை அழிப்பதனாலேயே அது தீயது என்று பொருளல்ல. அழிப்பதன் மூலமாக நன்மைக்கு உதவுவதால் அதுவும் ஒரு ஆக்கப் பூர்வமான செயல்தான். நம் கண்முன்பாக அது அழிகிறது ஆனால் அது விளக்கம் பெறுகிறது. அசுரனை இறைவன் சம்ஹாரம் செய்கிறபோது நம் கண்முன்னால் அவன் இல்லாமல் போகிறான். ஆனால் அந்த உயிருக்கு நல்கதி கிடைக்கிறது.

ஒருவன் தீயவன் என்றால் சட்டம் தண்டிப்பதற்கும் அம்பாள் சம்ஹாரம் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் அது தான். தூக்கில் போட்டால் அந்த உயிர் மோட்சத்திற்கெல்லாம் போகாது, இன்னும் கோபத்தோடு மறுபடியும் இந்த பூமிக்கு வந்தாலும் வரும்.

ஆனால் அம்பாள் சம்ஹாரம் செய்கிறபோது அந்த உயிரினுடைய தீமை அகல்கிறது. உயர் உய்வடைகிறது. அவளே காளியாகவும் இருக்கிறாள்.

எல்லாக் கலைகளையும் வைர மாலைகளாக அணிந்திருக்கிறாள். “ஒளிரும் கலா வயிரவி”. வைரம் என்பது வீரத்தையும் குறிக்கும். வீறுகொண்ட கலா பூஷணியாக அவள் திகழ்கிறாள். சராசரி மனிதர்களைவிட கலைஞர்களுக்கு ஏன் இந்த நாட்டில் மரியாதை அதிகமாக இருக்கிறதென்றால் அவர்கள் பராசக்தியின் அம்சத்தைப் பெற்றுத் திகழ்கிறார்கள்.

அபிராமி பட்டர் அபிராமியை, “மண்டலி” என்கிறார்.

என்னென்ன மண்டலங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிறதோ அவையெல்லாம் அவளுடைய ஆளுகைக்கு உட்பட்டவை. சூரிய மண்டலம், சந்திரமண்டலம், குருமண்டலம் எல்லா மண்டலங்களையும் அவள் ஆள்கிறாள். ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்றால் 48 நாட்கள் ஒரு மண்டலம் மருந்து உட்கொள்ள வேண்டுமென்றால் அந்த 48 நாட்களில் நான் குணமடைய வேண்டுமென்ற பிரார்த்தனையை வைத்தால் அந்த மண்டத்திலே உடனிருந்து குணமடையச் செய்பவள் அம்பிகை.

மாலினி வண்ண வண்ண மாலைகளை அணியக் கூடியவள். சூலி கையிலே திரிசூலம் உள்ளவள். வராகி சக்தி வரிசைகளிலே எட்டாவதாக வராகி. வரப்பிரசாத ரூபமாக இருப்பவள் வராகி.

இந்த நாமங்களை நான் சொல்லுகிறேன் என்று அபிராமி பட்டர் சொல்லவில்லை. இப்படியெல்லாம் நான்கு வேதங்களும் அவளை வழிபடுகின்றன என்று வேதம் படித்தவர்கள் சொல்லுவார்கள் என ரொம்ப தன்னடக்கமாகச் சொல்கிறார், நான் கண்டுணர்ந்த, கற்றுணர்ந்த நாமங்கள் என்று சொல்லவில்லை. எப்போதுமே நாமங்களுக்கு மந்திர வலிமை உண்டு. வேதத்தை மிகச் சரியாகப் படித்த கோடிக்கணக்கானவர்களின் நாவிலே உழன்று உழன்று வருவதால் அதற்கு இன்னுமும் சக்தி கூடுகிறது.

அப்பேர்ப்பட்ட மந்திர சக்தியுள்ள பதினாறு தோத்திரங்களை இந்தப் பாடலிலே அபிராமி பட்டர் அருளியிருக்கிறார். இது வேதங்களால் அர்ச்சிக்கப்பட்ட தோத்திரங்கள் என்று கடைசி வரியிலே முத்திரை கொடுக்கிறார்.

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்ச பாணிவஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டிகாளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினிசூலி வராகி யென்றே
செயிரவி நான்மறை சேர்திருநாமங்கள் செப்புவரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *