மனிதன் சில கருவிகளை வைத்துக்கொண்டுதான் இயங்குகிறான். ஒன்று அவனுடைய நினைவு, இன்னொன்று அவனுடைய மொழி, நீங்கள் பிறந்ததிலிருந்து ஆயிரம் முறை அபிராமியை தரிசனம் செய்திருக்கலாம். வீட்டில் உட்கார்ந்து கற்பனை செய்தால் அந்த உருவம் முழுமையாக நமது மனதில் வருகின்ற பக்குவம் படிந்திருக்காது. நினைவுக்கு அவள் எட்டுவதில்லை. மொழியில் எவ்வளவு சொல்லமுடியும். அவளை தரிசித்தேன் எப்படி இருந்தது தெரியுமா என்று நீங்கள் ஆயிரம் பக்கங்கள் எழுதலாம். அப்போது கூட அந்த நினைவு வராது.

இசைக் கச்சேரிகளில் பார்த்தால் ஓர் இடத்தில் ஆலாபனை செய்துகொண்டே மேலே போய்க்கொண்டே இருப்பார்கள். ஓர் எல்லைக்கு போகமுடியாது. கையைக் காட்டுவார்கள். என்ன அர்த்தம்? இதைத் தாண்டி இருக்கிறது, என்னால் முடியவில்லை நீங்களாகவே அனுமானித்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தம்.

எப்போதுமே ஒரு கலைஞன் தோற்கிற போதுதான் கலை ஜெயிக்கிறது.

தெய்வத்தின் பெருமை எத்தகையது என்றால் நம்முடைய நினைவாலும் எட்ட முடியாது. நம்முடைய மொழியினாலும் எட்ட முடியாது. கடவுளாக நம்முடைய பக்திக்கும், ஈடுபாட்டிற்கும் இரங்கி தானாக வந்து தன்னை வெளிப்படுத்திக்கொண்டால் தான் உண்டு. நம்முடைய மொழி, நினைவு, புத்தி இவையெல்லாம் கடவுளிடம் தோற்றுப் போவதற்காக நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கருவிகள்.

அம்பிகையின் தரிசனம் என்பது நம்முடைய முயற்சியால் மட்டும் வருவதில்லை. நம் ஈடுபாட்டை பார்த்து மகிழ்ந்து அவளாக வந்தால் தான் உண்டு. மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின்ற மூர்த்தி என் விழிக்கும் வினைக்கும் வெளி நின்றது.

வினை என்றால் பொதுவான அர்த்தம் நம்முடைய நல்வினை, தீவினை, இங்கே அந்தப் பொருள் அல்ல, நம்முடைய முயற்சி, நாம் செய்கிற பூசனைகள், அம்பிகையின் பாடல்களை பாராயணம் செய்கிற விதம் இதிலெல்லாம் அம்பிகைக்கு மனம் மகிழ்ந்தால் தானாக வெளி வருவாள்.
தெய்வத்தினுடைய பண்புகளில் சௌசீல்யம் சௌலப்யம் என்று உண்டு. சௌசீல்யம் என்பது எளிவந்த பண்பு, நமக்காக இறங்கி வருவது, சௌலப்யம் என்பது நம்முடைய குறைகளையும் தாண்டி நம்மை ஆட்கொள்வது.

மருத்துவமனையில் ஒரு குழந்தை பிறக்கிறது. புதுமலர் போன்ற ஒரு குழந்தையை கைகளில் ஏந்தினோம் என்று கவித்துவமாகச் சொல்லலாம். உள்ளபடியே புதுமலர் போலவா குழந்தை பிறக்கிறது. அது குடியிருந்த இடத்தினுடைய சீழ்,ரணம்,நிணம்,ரத்தம் எல்லாவற்றோடும் பிறக்கிறது. அந்தத் தொப்புள் கொடியை அறுத்துவிட்டு தாதி அந்தக் குழந்தையை தூய்மை செய்து அழகாக ஒரு துவாலையில் சுற்றிக் கொண்டு வந்து கொடுக்கிறபோது நம் கைகளில் புதுமலர் போல் இருக்கிறது.

ஆனால் ஒரு பசு கன்றை ஈனுகிறது. அங்கே எந்தத் தாதியும் வந்து எந்த வேலையும் பார்ப்பதில்லை. அந்தக் கன்றினுடைய உடம்பிலும் அத்தனை நிணங்களும் ஒட்டியிருக்கின்றன. அந்தத் தாய்ப்பசு தன் நாவினால் மெல்ல மெல்ல நக்கி நக்கி அவற்றை அகற்றுகிறது. அது அசிங்கம் பார்ப்பதில்லை.

இந்த மனித உயிர் எவ்வளவு வினைகளோடு இருந்தாலும் அதை கன்றுபோல் பாவித்து தாய்ப்பசுவாகிய அம்பிகை தானே அந்தக் குறைகளை நீக்குகிறாள். நீக்கி அதனிடம் இருக்கக்கூடிய உண்மையான பக்தியை ஏற்றுக் கொண்டு தானாக வெளியில் வந்து காட்சி தருகிறாள்.

உண்மையான தவம் என்பது என்ன? தவத்திற்கு தனக்குள்ளே இருந்து வருகிற இடையூறுகளால் கலையாமல் இருப்பதற்குப் பெயர்தான் தவம். அதைச் சரியாகச் செய்த ஒரே தபசி சிவபெருமான்தான். மன்மதன் வந்து அம்பு போடுகிறபோது இந்த இரண்டு கண்களைத் திறந்து பார்க்கவில்லை. நெற்றிக்கண்ணை திறந்து அவனை எரித்தார். நெற்றிக்கண் ஆக்ஞையின் அடையாளம். என்னுடைய இலக்கு ஞானம் என்று சொன்னால், இடையில் வரும் இடையூறுகளை நான் எரிப்பேன் என்பதற்கு அது அடையாளம்.

சிவபெருமான் பெரிய விரதத்திலேயே இருக்கிறார், அழியா விரதம். தவம் முடிகிறவரையில் இந்த இன்பத்திலெல்லாம் ஈடுபட மாட்டேன் என்று அர்த்தம். அதை உலகமே கேலி செய்யும் விதமாக பராசக்தி செய்து விட்டாள். மனதில்கூட பெண்ணை நினைக்க மாட்டேன் என்று சொன்னவர் உடம்பில் பாதியைக் கொடுத்துவிட்டு நிற்கிறார் என்று உலகமே கேலி செய்கிறது.

அபிராமி பட்டர் திரும்ப திரும்ப சிவபெருமானை தலைவர் என்பார். அவர் சாக்த நெறியிலே ஈடுபட்டாலும் சிவசக்தி வழிபாட்டில் ஆழங்காலப்பட்டவர் என்பதற்கு அடையாளம்.

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாதநின்திரு மூர்த்திஎன்றன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்விழி யால்மதனை
அழிக்கும் தலைவர் அழியாவிரதத்தை அண்டமெல்லாம்
பழிக்கும் படியொரு பாகம்கொண்டாளும் பராபரையே.

பக்தி நெறியிலே ஈடுபடுகிறவர்களுக்கு மனதில் ஒரு குழப்பம் வரும். அது தன்னுடைய தகுதி பற்றியது. கடவுளைப் பற்றிப் பேசுவதற்கு எனக்கு என்ன தகுதி அங்கே இருக்கிறது என்பதைப் பற்றியது அது. தெய்வத்திற்கு எவ்வளவு பேர் எப்படியெல்லாம் பக்தி செலுத்துகிறார்கள் நானெல்லாம் ஒரு தூசு இல்லையா? இந்த எண்ணம் யாருக்காவது தோன்றினால் அவர்கள் தான் பக்தி செலுத்தத் தகுதியானவர்கள் என்று அர்த்தம். பக்தியைப் பொறுத்தவரை தகுதியின்மை ஒன்றுதான் தகுதி.

எனக்கு எல்லாம் இருக்கிறது. நான்தான் உன்னை வணங்க சரியான ஆள் என்றால் கடவுள் முதலில் உங்களை நிராகரித்து விடுகிறார். தான் எவ்வளவு சாதாரணம் என்று எந்த உண்ணம் இறங்கி நினைக்கிறதோ அந்த உள்ளத்தைத் தான் கடவுள் உகக்கிறார். தன்னை சிறியதாக அறிந்தவர்களால் தான் பெரிய ஒன்றைத் தேடிப்போகமுடியும். தன்னிடத்திலே எல்லாம் இருக்கிறது என்று தானாய் ஒருவனால் தெய்வ நெறிக்குள்ளே ஈடுபட முடியாது.

நீதான் கதி என்று வந்துவிட்டேன். மற்றவர்களுடன் என்னை ஒப்பிட்டுப் பார்க்காதே, எவ்வளவோ பெரியவர்கள், ஞானிகள், வேதத்தில் கரை கண்டவர்கள், வாழ்வின் அனுபவத்தால் உன்னை உள்ளே உணர்ந்தவர்கள், இடையறாது பூஜித்தவர்கள் இவர்கள் அனைவரும் உனது பக்தர்கள் தான் அவர்களுடன் ஒப்பிட்டு என்னைத் தள்ளிவிடாதே என்கிறார்.

தரியலர் என்றால் பகைவர்கள். பொருப்பு என்றால் மலை. மூன்று புரங்களையும் எரிப்பதற்காக மேரு மலையை வில்லாக யார் மூலப் பரம்பொருள் என்று திருமாலும் பிரம்மாவிற்கும் வாதம் நிகழ்ந்தது. சிவபெருமான் அங்கே தோன்றினார். திரிபுரங்களை எரிப்பதற்குப் போய்க் கொண்டிருந்த நேரம். அவர் தோன்றியவுடனே அவருடைய மேம்பாட்டை உணர்ந்து விஷ்ணு விலகுகிறார். பிரம்மா வேறு வேலைக்குச் செல்பவர், அவசரத்தில் சென்றுவிடுவார். நாலு வார்த்தை சொல்லலாமே என்று ஏதோ பேசிவிட்டார்.

அப்போது பிரம்மாவிற்கு ஐந்து தலைகள் இருந்தன. அதில் ஒரு தலையைக் கொய்தார். கீழே விழுந்து அழுதார் பிரம்மா. என் ஐந்து தலையில் ஒரு தலையைக் கொய்தீர்கள், அந்த கபாலம் எப்போதும் உங்கள் கையிலே இருக்க வேண்டும் என்றார் பிரம்மா. அதை பிச்சைப் பாத்திரமாக மாற்றி இறைவன் தன் கைகளிலே ஏந்திக் கொள்கிறான்.

முப்புரங்களை எரிப்பதற்காகப் போகிறபோது கூட அந்த இடைவெளியிலே ஒரு வீரச்செயலை நிகழ்த்தி விட்டுப் போகிறார். அப்பேர்ப்பட்ட சிவபெருமானுடைய இடப்பாகத்தைச் சேர்ந்தவளே. நீ என்னைத் தரமில்லையென்று தள்ளிவிடாதே. தகுதியின்மையே தகுதியானது பக்தி என்கிற நெறியில் இந்தப் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

பரமென்று உனையடைந் தேன்தமியேனும்உன் பத்தருக்குள்
தரமென்றுஇவன் என்று தள்ளத்தகாது தரியலர்தம்
புரம்அன்று எரியப் பொருப்புவில்வாங்கிய போதில்அயன்
சிரம்ஒன்று செற்றகை யான்இடப்பாகம் சிறந்தவளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *