கண்ணனை மாயன் றன்னைக்
கடல்கடைந் தமுதங் கொண்ட,
அண்ணலை அச்சு தன்னை
அனற்தனை அனந்தன் தன்மேல்,
நண்ணிநன்கு உறைகின் றானை
ஞாலமுண் டுமிழ்ந்த மாலை,
எண்ணுமா றறிய மாட்டேன்,
யாவையும் யவரும் தானே!
-நம்மாழ்வார்

ஆலகாலம் பெருகிய சுவடேயின்றி மௌனம் கொண்டிருந்த பாற்கடலின் மையத்தில், மேருவை உரசி மேலெழுந்தது பேரலை, பால்நுரைகளில் மிதந்த பதுமமலர் மேலே பொன்னிறத் திருமேனி பேரொளி வீச, மின்னற் கொடிபோலும் முத்துச் சுடர்போலும் தென்றல் நடைபோலும் தேனின் மழைபோலும் அலைமகளாம் திருமகள் அசைந்தசைந்து கரை சேர்ந்தாள்.

கரையிறங்கிய கருமுகில்போல் கனிந்துநின்ற கார்வண்ணனின் கண்கலந்த விநாடியில் ‘கும்’ மெனும் செம்மை கன்னங்களில் கோலமிட ஒசிந்து நின்றாள் திருமகள். அதே நேரம் பாற்கடலிலிருந்து மெல்ல மெல்ல மேலெழுந்தன சில அற்புதங்கள். ஆனைகளின் உச்ச வடிவான ஐராவதம், பசுக் குலத்தின் திலகமான காமதேனு, குதிரை வர்க்கத்தின் உச்சமான உச்சைர்வம், விருட்சங்களின் அற்புதமாகிய கற்பகம், இவற்றுடன் சிந்தாமணி, கௌஸ்துப மணி, சூடாமணி ஆகியவை ஒவ்வொன்றாய் வெளி வர, கரையோரம் எழுந்தது ஆனந்த ஆரவாரம்.

இருண்ட வானில் மெல்ல மெல்ல கண் விழிக்கும் நட்சத்திரங்கள் மத்தியில், தகதகத்தெழும் பூரண நிலவு போல் பொங்கியெழுந்தது வானமுதம். மரணமிலாப் பெருவாழ்வின் மாமருந்தாய் வானவர் தம் பெருவிருந்தாய் கிளர்ந்தெழுந்த அமுதகலசத்தை தாங்கி வந்தார் அப்சா.

இதுவரை நிகழ்ந்த யுத்தங்களில் அசுரர் குலம் பெருத்தும் அமரர்கள் எண்ணிக்கை சிறுத்தும் இருந்த நிலை மாறி ஆலகால நஞ்சும் வாசுகியின் நஞ்சும் வெளிப்பட்டதில் அசுரர்களில் பெரும் பகுதியினர் அழிந்திட மிகச்சிலரே எஞ்சியிருந்தனர். அவர்களிடையே ஆவேசம் தலைக்கேறியவனாய் திருமாலை நோக்கிப் பாய்ந்தெழுந்தான் அசுரர் குல ஒற்றன்.

“வாசுகியின் தலைப்பகுதியில் இருந்து கடைந்தால் அமுதம் வருமென்று தேவர்களுக்கு நீதான் சொன்னாய். அதனை ஒட்டுக் கேட்டு நாங்கள் தலைப்பகுதியில் திரண்டோம். ஆலகாலம் பெருகியது!” அசுரன் முடிக்கும் முன்னே அமரர்கள் பக்கத்திலிருந்து பெருகியது ஆரவாரச் சிரிப்பொலி.

“முட்டாள் அரக்கனே! நீ ஒட்டுக்கேட்க வருவது தெரிந்து உன் காதில் விழவேண்டுமென்ற திருமால் அதை ரகசியம் போலச் சொன்னார். அது ரகசியமல்ல. உங்களுக்கு நாங்கள் விரித்த வலை.”

ஏதும் செய்ய முடியாத ஆற்றாமையில் அமுதக் குடத்திலாவது உரிய பங்கைப் பெறுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டனர் அசுரர்கள்.

அனைத்தும் முடிந்ததும் அமுதம் கிடைக்க அருந்துணை புரிந்த மேருவையும் வாசுகியையும் வழிபட்டனர் தேவர்கள். அவையோ திருமாலின் திருவடிகளைப் பணிந்தன.

வியப்போடு பார்த்தவர்களுக்கு விளக்கம் கொடுத்தார் திருமால். “பாற்கடலின் அடியில் மேருமலை ஊன்றி நிற்க முடியாமல் ஒவ்வொரு கடைசலிலும் வழுக்கியது. நான் ஆமை வடிவெடுத்து கடலுக்கடியில் போய் மேருவை முதுகில் தாங்கினேன். பின்னரே மேரு நிலைகொண்டு நின்ற அதற்காகவே நன்றி சொல்ல பணிகிறார்கள்.”

அமுதம் கடையும் வழியையும் காட்டி, அசுரர்களின் பெரும்பகுதி அழியவும் செய்து கடையும் பொழுது கூர்மமாய்த் தாங்கிய கருணாமூர்த்தியின் கமலத்தாள்களைப் பணிந்தனர் அமரர்கள்.

“எங்கள் பங்கு அமுதம் எங்கே? காலந்தாழ்த்தியது போதும் .பங்கிட்டுக் கொடுங்கள்” என்று கூச்சலெழுப்பினர் அசுரர்கள். செய்வதறியாது திகைத்த தேவர்கள், திருமாலைத் தேடிப் பரபரக்க அசுரர்களின் செவிகளில் அமுதமாய்ப் பாய்ந்தது சலங்கையொலி. திரும்பிப் பார்த்த அசுரர்களின் திகைத்த கண்களில் தீப்பற்றியது மோகக் கனல்.

தரையிலிறங்கிய குளிர்நிலவாகத் தளுக்கி நடந்தாள் மோகினி ஒருத்தி. செழித்துக் கிடந்த பேரழகும் சிரித்தும் பேசிய பேச்சழகும் சுழித்த புருவத்தின் மின்னழகும் சுந்தரவதனத்தின் பொன்னழகும் ஏற்கெனவே நெஞ்சந் தடுமாறியிருந்த அசுரர்களை நிலைகுலையச் செய்தது. காமப் பித்தேறி மோகினியின் கடைக்கண் பார்வை பருகப் பின்னே நடந்தனர் அசுரர்கள்.

“நடமாடும் அமுதம் நம்முன்னே இருக்கிறது. குடமாடும் அமுதத்தைக் குடிக்க என்ன அவசரம்?” என்றான் ஒருவன்.”அட பைத்தியக்காரா! இந்தப் பேரழகியின் கனியிதழ்களைப் பார். அதில் தேனமுதம் பருகினால் வானமுதம் வேண்டியதே குடித்தவர்கள் கால்கள் பின்னப் பின்ன மயக்கும் பேரழகியின் பின்னர் முட்டி மோதிக் கொண்டு நடந்தனர்.

“அசுரர்களே! உங்கள் பங்கு அமுதத்தைப் பெற்றுத் தரவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். உங்கள் பங்கை வாங்கித் தரும்வரை அமைதியாயிருப்பீர்களா?” கிள்ளை மொழியில் கொஞ்சல் குரலில் கேட்ட மோகினியிடம் சத்தியம் செய்யும் சாக்கில் அவள் தலையிலடிக்கத் தாவிய அசுரர்களிடமிருந்து சாகசமாய் தப்பித்து சங்கீதமாய் சிரித்த படியே முன்னால் நடந்தாள் மோகினி.

அமுதம் பருகுவதுபோல் மோகினி ஏற்படுத்திய மாய பிம்பத்தில் அசுரர்கள் மயங்கினர். மோகினியாய் மாய வடிவெடுத்த திருமாலின் வலையில் விழுந்தவர்கள் தெளிவு பெறும்முன் மாயத்தோற்றம் நீங்கி தன்னுருவில் மீண்டும் தரிசனம் தந்தார் மஹாவிஷ்ணு.

அமுதக் குடத்தை மார்போடணைத்து தன் விருப்பத்தின் வண்ணமே அமரர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் ஆவலுடன் வந்தவர், ஆலகாலத்தை அள்ளியுண்டு அமரர் குலம் காத்த ஆதிநாதனாம் பரமனுக்கு நன்றிசொல்ல விழைந்தார்.

எப்போதும்போல தேவதேவர் இருவருடன் தேவர்குலம் முழுவதும் சிவபூசை புரிந்து அமுதம் உண்ணும் ஆசையுடன் திரும்பி வந்து பார்த்தபோது அவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

அங்கே… அமுதக் குடத்தைக் காணோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *