unnamed

அரணானாள் அன்னை

காலம் எனும் பகடை கையில் உருட்டுகிற
மூல விடுகதை மோகினி நீ – நீலம்
படர்ந்த விழியாலே பராம்மா என்னைத்
தொடர்ந்த வினையகலத் தான்

வெய்யில் விழிபார்த்தே வேதக் குயில்கூவும்’
கையில் கிளிவைத்த காமினி-வையகம்
வாழப் பதம்வைத்து வந்தவளே நின்முன்னே
தாழத் தலைதந்த னை.

மூசென்னும் வண்டு முரலும் குரல்கேட்டே
ஆசு கவிபாட ஆக்கினாய்- ஓசையைப்
பொற்றாளம் தன்னில் பொதிந்தளிந்த மாதரசி
மற்றாரை நாடும் மனம்?

ஒன்பான் இரவுகளில் உன்கோயில் முன்றிலில்
நின்றாரைக் காக்கும் நிமலையே-வென்றாரின்
வெற்றிக்குச் சூத்திரமே வீழ்ந்தார்க் கொருபாடம்
கற்பிக்கும் கற்பகமே கா.

பாடுந் தமிழானாய் பாட்டின் பொருளானாய்
தேடி நடக்குந் திசையானாய்- ஆடிடும்
அத்தன் நடனமெல்லாம் ஆட்டுவிக்கும் சக்திநீ
அததனைக்கும் வாய்க்கும் அரண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *