“நீங்க இப்போ என்ன டயட்டில் இருக்கீங்க? இந்தக் கேள்வி இயல்பான ஒன்றாகவே ஆகிவிட்டது. குறிப்பாக, இணையம் வழியாய் விதம்விதமான வாழ்க்கை முறைகள் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு அனைவருக்குமே இருக்கும் சூழலில், வித்தியாசமான உணவு முறைகள், விசித்திரமான உணவுப் பழக்கங்கள் என நிறையவே” கேள்விப்படுகின்றனர்.

ஆனால், சமீப காலத்தில், காட்டுத் தீ போல் பரவி வருவதோடு, பின்பற்றுபவர்களில் பெரும்பாலானவர்களால் மிகத் தீவிரமாக ஆதரிக்கப்படுவதும், பிரச்சாரம் செய்யப்படுவதுமான உணவுமுறை, பேலியோ உணவு முறை.
இதன் அடிப்படையே, குகை மனிதனின் உணவுப் பழக்கம் என்ற ஒற்றை வாக்கியத்தில் அடங்கிவிடுகிறது. “விவசாயம் என்னும் ஒரு வாழ்க்கை முறை ஏற்படும் முன்னர் வேட்டையாடி வாழ்ந்த மனிதன், வெறும் கொழுப்பு உணவையே உண்டிருப்பான். எனவே, கொழுப்பு உணவை மட்டுமே சாப்பிடுங்கள். வாழ்க கொழுப்புடன்” என்பது பேலியோ பிரியர்களின் கொள்கை முழக்கம்.

கொழுப்புச்சத்து மட்டுமே உட்கொள்ளப்படும் போது அது உடம்புக்கு எரிபொருள் போல் இயங்குகிறது. மற்ற உணவில் மாவுச்சத்துகள் இரத்தத்தில் சேர்ந்து சர்க்கரையை அதிகரிக்கிறது. எடையைக் கூட்டுகிறது. இன்னும் பிற நோய்களை ஏற்படுத்துகிறது என பிறக்காத குழந்தைக்குக் கூட புரிகிறமாதிரி விளக்கமாய், விரிவுரை நிகழ்த்திவிடுகிறார்கள் பேலியோ நிபுணர்கள்.

அயல்நாடுகளில் பல்லாண்டுகளாகவே பேலியோ முறை நடப்பில் இருந்தாலும், “பேலியோ பைபிள்” போன்ற விரிவான புத்தகங்கள் வெளிவந்திருந்தாலும், அதனை இந்திய வாழ்க்கை முறைக்கும், இன்றையவாழ்க்கை முறைக்கும் ஏற்ற விதத்தில் வடிவமைத்திருப்பவர் திரு.நியாண்டர் செல்வன். அமெரிக்காவில் வசிக்கும் இந்த இந்தியர், தன் வாழ்வையே பரிசோதனைக் கூடமாக்கி, பற்பல கோணங்களில் ஆய்வுசெய்து பேலியோ என்னும் உணவு முறையை வடிவமைத்திருக்கிறார்.

இதனை, வடிவமைத்து, பரிசோதித்து நோய்களைக் கடந்து, பின்னரே பிறருக்குப் பரிந்துரைத்தார் என்பது இதன் முக்கிய ஈர்ப்பு.

பேலியோ பற்றி கேள்விப்படுபவர்கள் எடுத்ததும் ஆடிப்போகிறார்கள். பலர் “அய்யயயோ” என்று ஓடிப் போகிறார்கள். காரணம், அவர்கள் உண்ணச் சொல்கிற உணவுகள். உதாரணமாக, காலை உணவென்றால் 100 பாதாம்கள். (100 கிராம் தானே என அலட்சியமாய் பார்க்காதீர்கள். ஒரு பாதாம் ஒருகிராம்) மதியம் நான்கு முட்டைகள். இரவில் வேகவைக்கப்பட்ட அல்லது சமைக்கப்பட்ட இறைச்சி. இடையில் பசித்தால் கொழுப்பு உணவுகள்.

காலை எழுந்தவுடன் பாதாம் – பின்பு
கோழி கொடுக்கும் நான்கு முட்டை
மாலைவரை கொழுப்புத் தீனி – பின்னர்
மட்டன் சிக்கன் மீன்வகைகள்

என்பது பேலியோ பாட்டு!

கொழுப்பு மட்டுமே சாப்பிட்டால், கொழுப்பு கூடாது; சர்க்கரை ஏறாது. ரத்த அழுத்தம் கூடாது என்பது போலியோவின் பாலபாடம்.
அதற்காக நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்ததுமே பையை எடுத்துக்கொண்டு பாதாமும் முட்டையும் வாங்கப் புறப்படக் கூடாது.

முகநூலில் ஆரோக்கியம் – நலவாழ்வு உள்ளிட்ட. சிலபல பேலியோ குழுக்களில் சேர்ந்து, அவர்கள் பரிந்துரைக்கும் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து, பரிசோதனை முடிவுகளை குழுவில் வலையேற்ற வேண்டும்.
திருப்பதி தர்ம தரிசனத்தை விடவும் பெரிய வரிசையில் நீங்கள் காத்திருப்பீர்கள். பொறுப்பானவர்கள் உங்களுக்குப் பொருத்தமான உணவுமுறையைப் பரிந்துரைப்பார்கள்.

சர்க்கரை அளவு மூன்றாவது நாளிலேயே கணிசமாகக் குறைகிறது. எடை குறைகிறது. இந்த அழுத்தம் கட்டுக்கு வருகிறது. தைராய்டின் ஆதிக்கம் தகர்கிறது என்கிறார்கள்.

கொழுப்பு உணவு, வெய்யில் குளியல் என்று வாழ்வின் போக்கே மாறிவிடும்.

ஆனால், பேலியோ நோயின் மிக பயங்கரமான பக்க விளைவு, ஒன்று உண்டு. பலன் ஓரிரு நாட்களிலேயே தெரியத் தொடங்குவதால், யாரைப் பார்த்தாலும் நான்காவது நிமிடத்தில் பேலியோ உணவுபற்றிப் பேசத் தொடங்கிவிடுவீர்கள். அவர்கள் அறிமுகம் ஆனவராகவும் இருக்கலாம். அந்நியராகவும் இருக்கலாம்.
மற்ற ஊர்களில் எப்படியோ தெரியாது. கொங்கு மாவட்டங்களில் கொடிகட்டிப் பறக்கிறது பேலியோ உணவுமுறை பேலியோ உணவில் ஆண்டுவிழா கொண்டாடிய அனுபவசாலிகள் உண்டு. அசைவ ஆதிக்கம் தான் பேலியோ என்றில்லை. சைவத்திலும் சரிநிகர் சமானமான உணவு வகைகள் உண்டு.

பருப்புகள் ஆகாது. தானியங்கள் ஆகாது. அவகோடா பழம் தவிர மற்றவை கிடையாது. கொய்யாக்காய் சேர்த்து. உப்பு போட்ட எலுமிச்சைச்சாறு. பிரத்யேக முறையில் தயாராகும் புல்லட் காபி, புல்லட் டீ, ஆகியவையும் பேலியோவின் சிறப்பம்சங்கள்.

அலோபதி மருத்துவத்தைப் பொறுத்தவரை மற்ற மாற்று சிகிச்சைகள் போலவே, பேலியோவுக்குத் தடா. ஆனால், அலோபதி மருத்துவர்களில் சிலர் பேலியோ பக்தர்கள். அவர்கள் பேலியோ குழுமங்களின் ரகசிய சிநேகிதர்கள்.
ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்ற துறைகளின் நிபுணர்களை அணுகிக்கேட்டோம். பேலியோ உணவு-முறை உடனடி பலனளிப்பதாக இருந்தாலும், காலப்போக்கில் ஏதேனும் ஓர் உறுப்பைப் பாதிக்கக் கூடும் என்கிறார்கள். குறிப்பாக, எல்லா உணவுகளிலும் புரதம்,பரதம் ஆடுவதால் சிறுநீரகம் சிரமப்படலாம் என்பதில், அலோபதி உள்ளிட்ட மருத்துவக் கிளைகள் ஒத்துப் போகின்றன.

ஆனால் பேலியோ உணவு உண்ணத் தொடங்கி, சிலருக்கு சிறுநீரகச் சிக்கல் சரியாகி வருவதாக பேலியோ குழு மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் பிரத்யேக பேலியோ உணவகங்கள் போன் செய்தால் வீட்டுக் கதவைத் தட்டி, தட்டுதட்டாக பேலியோ உணவு தருகிறார்கள்.

பேலியோ உணவுக்குச் செலவு அதிகம் என்று சலித்துக் கொண்டால், “மருத்துவச் செலவு வெகுவாகக் குறைகிறதே” என்று மடக்குகிறார்கள்!

ஆனால் பேலியோ உணவு ஆலோசனைக்கோ, மருத்துவ முடிவுகளின் பரிசீலனைக்கோ பேலியோ குழுமங்களில், நியாண்டர் செல்வன் உள்ளிட்ட நிபுணர்கள் நயா பைசா கூட வாங்குவதில்லை.

இந்திய பேலியோவின் பீஷ்மர் நியாண்டர் செல்வனின் உணவுமுறை கேட்டால் அடிவயிறு அதிர்கிறது. காளை மாட்டின் வாலும், எருமை மாட்டின் நாக்கும் இவரது விருப்ப உணவுகளாம்!!

தொடர்ந்து அசைவம் சாப்பிடுவதால் ஏற்படும் குணமாற்றங்கள், குற்ற உணர்வு ஆகியவை, நம்மைக் குகை மனிதனின் வேட்டை மனோபாவத்திற்கே கொண்டு செல்லக்கூடும் என்னும் குறைபாடு இதில் இருக்கத் தான் செய்கிறது.

பேலியோ, மில்லட் உணவை மறுதலிக்கிறது. குறிப்பாக சர்க்கரையைக் கூட்டுவதில் மில்லட் உணவுகள் மிதமாகவே இருக்கின்றன என்கிற கருத்தை பேலியோ ஏற்பதில்லை.

ஆனால், வரகரிசி, கம்பு ஆகியவை சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். உணவில் 70% காய்கறிகளும், வரகரிசி,கம்பு ஆகிய தானியங்களும் இருந்தால் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கலாம் என்று அடித்துச் செல்கிறார் ஆறாம்திணை.கு.சிவராமன்.

உடனடி நன்மைகளை உணர்வதனால் பேலியோ பெரிதும் பின்பற்றப்படுகிறது. நீண்டகாலப் பயன்பாட்டில் குறைபாடுகளை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறி.

பேலியோ, சொந்த அனுபவத்தில் வடிவமைக்கப்பட்ட உணவுமுறை. இதன் குழுமங்களில், “அவரவர் உடல்நலனுக்கு அவரவர் பொறுப்பாளர்” என்னும் பொறுப்புத் துறப்பு வாசகங்கள் உண்டு.

அதேநேரம் எளிதில் புரியக்கூடிய விரிவான விளக்கங்களுடன், பேலியோ சார்ந்த புத்தகங்கள், இணையவிவாதங்கள் நிறைய உள்ளன.

பேலியோ உங்களுக்கான உணவா? என்கிற கேள்விக்கு, பதிலும் உங்கள் வசமே.

Comments

  1. பேலியோ நிச்சயம் எனக்கான உணவு இல்லை. புதிய தகவல். மிக்க நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *