பூமிப் பரப்பில் புனிதத் தலைமை
புறப்பட்டு வந்தது புதிதாக!
சாமி எங்கள் விவேகானந்தன்
சத்தியமூர்த்தி வடிவாக!
விரும்பும் கடமைகள் துறந்திடச் சொல்வது
வெட்டிப் பேச்சு வேதாந்தம்!
இரும்பு போல் உடம்பை உரம் பெறச் சொன்னது
விவேகானந்தன் சித்தாந்தம்!
தோல் பந்துக்குள் மூச்சுக் காற்றெனும்
தத்துவ மிரட்டல்கள் அவன் வெறுத்தான்;
கால்பந்தாட்டம் கடவுளைக் காட்டும்
‘கிளர்ந்தெழு தோழா’ என உரைத்தான்!
பொன்னை பொருளை அள்ளிக் குவிப்பவன்
பூமியின் தலைவன் ஆவதில்லை!
தன்னை வெல்லும் தகுதி இருந்தால்
தலைவன் அவன் போல் யாருமில்லை!
தோற்கும் பயத்தில் ஏக்கம் வளர்க்கும்
இதயம் இருந்தால் பலவீனம்
தீர்க்கமும் தெளிவும் வாழ்க்கையில் இருந்தால்
அதற்குப் பெயர்தான் மெய்-ஞ்ஞானம்!
சோதனைப் பொதிகள் சுமக்கிற முதுகாய்
வாழும் வாழ்க்கை எதற்காக?
சாதனை அனைவர்க்கும் சாத்தியம் என்பதை
சொல்லப் பிறந்தான் நமக்காக!