காலச் சக்கரம் சுழலுது உனது
காரியத் திறமை காரணமாய்!
தோழா! உனது தோள்களை நம்பித்
தொழிலில் இறங்கு வீரியமாய்!

தாமதமாகும் வெற்றிகளுக்குத்
தோல்விகள் என ஏன் பெயர் கொடுத்தாய்;
பூமியின் நியதி! ஒளியும் இருளும்!
புரிந்து கொள்ளாமல் மனம் சலித்தாய்!

சோர்ந்து போகச் செய்யும் எதையும்
சிந்தித்தாலும் தீமை வரும்!
தீர்ந்துவிடாத முயற்சி இருந்தால்
ஆமை முயலைத் தாண்டி விடும்!

ஜனகனின் வில்லைப் போன்றது வாழ்க்கை;
சரியாய் வளைத்தால் வளைந்து விடும்,
மனதில் உள்ள துணிவைப் பொறுத்தே
மகத்துவம் எதுவும் நிகழ்ந்துவிடும்!

பச்சை மண்ணில் பானைகள் செய்தால்
‘பொட்’டென உடையும் சீக்கிரமாய்!
உச்ச நெருப்பில் வாட்டியெடுத்தால்
உறுதியாகும் பாத்திரமாய்!

உன்னைநீயே செதுக்கிக் கொள்ளும்
உளிதான் தோல்வி; உணர்ந்துவிடு!
என்ன வந்தாலும், ஏது வந்தாலும்
துவண்டுவிடாதே! நிமிர்ந்துவிடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *