“எழுத்தும் தோன்றிடும் முன்னே – என்றோ
இருந்த கவி மனத்துள்ளே
விழித்து எழுந்தது பாடல்”

என்பார் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம். எழுத்து பிறக்கும் முன்னே கவிதை பிறந்தது. இந்த வரிகளை எழுதியவர் இறை நம்பிக்கையாளர் இல்லை எனினும், தெரியாத பகுதிக்கு திசைகாட்டும் பலகையென இந்த வரிகள் விரல்நீட்டும் திசை வேறாகத் தெரிகிறது.

படைப்பின் மூலசக்தி தோன்றியதன் பின் பிரபஞ்சம் தோன்றிற்று. பின்னர் தொழிற்பட்ட ஒவ்வொன்றிலும் அந்த மூலசக்தியின் துளிகள் துலங்கின.

பொதுவுடைமைச் சிந்தனையாளர் ஒருவர் புறவயமாய் எழுதிய வரியன்றிலேயே, வேறு விதமாய்ப் பொருள்கொள்ள வாய்ப்பிருக்குமாயின், கவிஞன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், காலங்காலமாகவே, கவிதை, கடவுளின் குரலாகவே ஒலிக்கிறது, என்பது புரிகிறது.

தெய்வமாக்கவி மாட்சி தெரிந்த கவிச்சக்கரவர்த்தியின் பாக்கடல், இறைமை இலங்கும் பாற் கடலேயாகும்.

ஒன்பான் சுவைகளும், காவிய அமைதியும், கதைப்பாங்கும், உளவியல் நுணுக்கங்களும், ஒப்பரிய வருணனைகளும், பொங்கித் ததும்பும் இராம காதையில் ஞானப்புதையல்கள் அறியும் விதமாய்ப் பொலிந்தும் அறிய முடியாமல் ஒளிந்தும் அலகிலா விளையாட்டு நிகழ்த்தக் காண்கிறோம்.

அவ்விதமே யோக நெறியின் கூறுகள், யோக நெறி சென்று சேர்ப்பிக்கும் ஒருமை நிலை ஆகியன, கம்பன் கவிதையில் காணும் விதத்தில் வெளிப்படையாகவும், காட்டுவிக்கும் விதத்தில் ஒளிக்கிடையாகவும் திகழ்கின்றன.

யோகம் என்னும் சொல்லைக் கேட்டதும், எதிர்பாராமல் கிடைக்கும் நற்பேறுகளைச் சிலர் கருதுவர், இன்னும் சிலருக்குத் திருகலான உடற்பயிற்சிகள் என்று தோன்றும்.

யோகம் என்பது ஒருமை நிலையைக் குறிக்கும். ஐக்கியமே யோகம். சராசரியாய் மனிதன் உடலின் போக்கையும், மனதின் போக்கையும், அறிவின் போக்கையுமே ஒன்றுவிக்க முடியாமல் திணறும் போது, ஒன்றுடன் ஒன்று பொருந்தும் தன்மையை யோகநெறி உணர்த்துகிறது.

தன்னில் பொருந்திய பின்னர் எதிலும் பொருந்தும் பக்குவம் மெல்ல மெல்ல வாய்க்கிறது. அதுவே பிரபஞ்சத்தைத் தன்னில் காணும் பேரனுபவமாய், ஞானமாய், கனிகிறது.

வனமொன்றில் விதம்விதமாய் மரங்கள் இருக்கும். வனம் செல்ல எண்ணும் ஒருவர், “வேம்பும் ஆலும், அரசும், மாவும், தேக்கும் அகிலும் என நீளப் பட்டியலிட்டு, “இவ்வகை மரங்கள் இருக்கும் இடத்திற்குச் செல்கிறேன்” என்பதில்லை.

“வனத்திற்குச் செல்கிறேன்” என்றாலே, நமக்கு விளங்குகிறது. மரங்கள் தனித்தனி அடையாளங்கள் கொண்டிருப்பினும், “வனம்” எனும் ஒருமையில் அவை உணரப்படுகின்றன.

“கைவல்ய நவநீதம்” இதனைத் தெளிவாக விளக்குகிறது.
மரங்கள் தனித்தனியாய் குறிக்கப் பெறுவது வியஷ்டி எனப்படும். வனம் எனும் பெயரில் ஒன்றாகக் காணப்படுவது சமஷ்டி எனப்படும்.

தம்மைத் தனித் தனியாய் எண்ணும் வரையில் மனிதர்கள், மனிதர்கள் மட்டுமே. தம்மை எல்லாமாகவும் பார்ப்பவன் இறைவன்.
“மரங்கள் போல் வியட்டி பேதம்
வனம் எனல் சமட்டி பேதம்
சரங்கள் தாவரங்கள் பேதம்
தனியுடல் வியட்டி என்பார்
பரம்பிய எல்லாம் கூட்டிப்
பார்ப்பது சமட்டி என்பார்
இரக்கிய பல சீவர்க்கும்
ஈசர்க்கும் பேதம் ஈதே!”
என்பது கைவல்ய நவநீதம்.

எல்லாவற்றிலும் வகைபிரித்துப் பார்ப்பது பேதம்.
எத்தனை பேதங்களைக் காரண அறிவு விளைவித்தாலும், அத்தனை பேதங்களிலும் எது பொருந்தி நிற்கிறதோ அதுவே தெய்வம் அவ்விதமாய் பொருந்துதலே யோகம்.
இதனைக் கம்பர் மிக நுட்பமாக உணர்த்துகிறார்.

“ஒன்றே என்னின் ஒன்றே ஆம்
பல என்று உரைக்கின் பலவே ஆம்
அன்றே என்னின் அன்றே ஆம்
ஆமே என்னின் ஆமே ஆம்
இன்றே என்னின் இன்றே ஆம்
உளது என்று உரைக்கில் உளதே ஆம்”

இறைவனை “இல்லை” என்று சொல்கையில் கூட “இல்லை” என்னும் சொல்லில் பொருந்தி நிற்பது இறைத்தன்மை என்பது கம்பன் உணர்த்தும் குறிப்பு.
அவரே, ஆரணிய காண்டத்தின் கடவுள் வாழ்த்துப் பகுதியில் “ஆதிதேவர்” ஆகிய மூலப் பரம்பொருள் எத்தகையது என்று குறிப்பிடும் போது.

“பேதியாது, நிமிர் பேத உருவம் பிறழ்கிலா”
என்கிறார்.

தன்னுடைய தனிப்பெருந்தன்மையில் நிலை கொண்டு நிற்கும் பரம்பொருள், தன்னில் உருவான யோனி பேதங்களாகிய பிற உயிர்களிடமிருந்து மாறுபடாமல் பொருந்தி நிற்கும் பெற்றியினை இவ்வரி பேசுகிறது.
சிற்றுயிரானது, தன்னை மும்மலங்களில் இருந்து பிரித்தெடுக்க இறையருளை நாடி நிற்கிறது.

“பேதித்து வளர்தெடுக்க பெய்வளை” என்றார் மாணிக்கவாசகர். இறைமையே எங்கணும் பரவியும், விரவியும் நிற்கிறது.
அறியாமையிலிருந்து உயிரைப் பேதித்து வளர்க்க திருவருளும் குருவருளும் துணை புரிகிறது. தேவையற்றத் தன்மைகளிலிருந்து நீங்குகிற உயிர், பேருயிரான இறைமையில் பொருந்தும் அறிவு நிலையை வேட்கிறது.

எனவேதான் இப்பாடலின் ஈற்றடியில்
“ஆதிதேவர் அவர் எம் அறிவினுக்கு அறிவு அரோ” என்கிறார்.

ஆதியை அறியும் அறிவும், அதற்கடுத்த படி நிலையாய் ஆதியை அனுபவிக்கும் நிலையும் யோகம் எனும் பெருநெறி வழங்கும் பெருங் கொடைகள்.

இப்பேருண்மை கம்பரது இராமகாதையில் வெளிப்படும் தன்மைகளைக் கண்டறியும் முயற்சியே இந்நூல்.

யோக நிலை என்பதன் உள்ளார்ந்த பொருளை உணரும் வண்ணம், என் பக்குவக் குறைவையும் தாண்டி, அதன் சில துளிகளையேனும் பருகும் வண்ணம் என்னை ஆட் கொண்ட என் குருநாதர், ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்களின் திருவடித் தொடர்பே இந்தப் பார்வையை என்னில் விதைத்தது.

“காட்டுவித்தால் யாரொருவர் காணாதாரே, காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக்காலே” என்னும் திருநாவுக்கரசர் திருமொழிக்கேற்ப, காட்டுவித்த குருவருளுக்கும் கூட்டுவித்த திருவருளுக்கும் தலையலால் கைம்மாறிலேன்.
கலையுலகின் ஆலமரமாய் நிலைகொண்டிருக்கும் ஏ.வி.எம் அறக்கட்டளையும், தமிழிலக்கிய உலகில் வெளிச்சப் பயிர்களின் விளைநிலமாய் விளங்கும் சென்னைக் கம்பன் கழகமும் இணைந்து இந்த அறக்கட்டளைப் பொழிவிற்கு என்னை ஆற்றுப்படுத்தியுள்ளன.

இந்த அறக்கட்டளைப் பொழிவுகளின் வரிசையில் என் உரையினையும் நூலினையும் இடம்பெறச் செய்த, ஏ.வி.எம் அறக்கட்டளை அறங்காவலர் திரு.எம். சரவணன் அவர்கள், சென்னை கம்பன் கழகத் தலைவர் அருளாளர் ஆர்.எம்.வீ. அவர்கள், பன்னெடுங் காலமாய் என்னை நன்கறிந்த கம்பன் கழகச் செயலாளர் “இலக்கிய வீதி” இனியவன் அவர்கள், இம்முயற்சிகளை செவ்வனே ஒருங்கிணைத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் ஆகியோருக்கும், துணை நின்ற பிறருக்கும் என் நன்றிகள்.

இதனை அழகுற வெளியிடும் வானதி பதிப்பகத்தாருக்கு என் நன்றிகள்.

இந்நூலினை, என் குருநாதர் ஈஷாயோக மைய நிறுவனர் சத்குரு அவர்களுக்குக் காணிக்கையாக்கி வணங்குகிறேன்.

இதனை வாசிக்கவுள்ள தங்களுக்கு என் நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *