வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

“மனிதன் நினைப்பதுண்டு, வாழ்வு நிலைக்குமென்று! இறைவன் நினைப்பதுண்டு. பாவம் மனிதனென்று!” கவியரசு கண்ணதாசனின் இந்தப் பாடல் மனித மனத்தின் இயல்பைக் கேலி செய்கிறது.

சிறைவாசம் இருந்தவனுக்குக் கூட விடுதலையாகும் கடைசி நாளில் மனம் கனக்கும் என்றால் அதுதான் மனதின் விசித்திர இயல்பு. ஒன்றைப் பற்றிக் கொள்வது பெரிதல்ல. விட்டுவிட வேண்டிய நேரத்தில் விட முடியாமல் தவிப்பதுதான் தவறு. பெஞ்சும் பலகையும் பிடித்து போன பள்ளி மாணவன், அடுத்த வகுப்புக்குப் போக மாட்டேன் என்று அடம்பிடிக்க முடியுமா என்ன-?

ஒவ்வொரு நிலையையும் தண்டிச் செல்கையில் இப்போதைய பிடியை விட்டு விட்டுத்தான் போகவேண்டி வரும்.

மரத்துக்கு மரம் தாவுகையில் குரங்கு முதல் மரத்தின் கிளையை விட்டு விட்டு அடுத்த மரத்தின் கிளையைப் பற்றுமாம். மனிதன் அடுத்த மரத்தின் கிளையைப் பற்றிவிட்டு பின்னர் முதல் மரத்தின் கிளையை விடுவானாம். ரொம்பச் சரி.

ஆனால் அடுத்த மரத்தின் கிளையைப் பிடித்த பிறகாவது முதல் மரத்தின் கிளையை விட்டுவிட வேண்டுமல்லவா! இங்கேதான் மனிதனின் தடுமாற்றம்.

உறவுகள், பதவி, ஊர்மாற்றம் என்று பல இடங்களில் மாற்றத்திற்கு மனம் தயாராக வேண்டும். அனுபவங்கள் வரவுக் கணக்கில் இருக்கட்டும். முயற்சி அடுத்த இலக்கை நோக்கிப் பறக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *