திரைப்படம் என்பது கனவுகளின் கட்டமைப்பு. இதையே வேறுவிதமாய் சொல்வதெனில், திரைப்படம் என்பது கனவுகளின் கட்டமைப்பு. ஒரே திரைப்படத்திற்கு எத்தனையோ வடிவங்கள் உண்டு.

திரைக்கதை உருவாகிறபோது அதற்கொரு வடிவம். பின்னர் வசனங்கள் எழுதப்படும் போது வசனகர்த்தாவின் மனதில் அதற்கொரு வடிவம் இயக்கப்படும் ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு வடிவம்.

இசையமைப்பாளர்களின் பின்னணி இசைச் சேர்ப்பில் ஒரு வடிவம்.

திரைப்படத்தை எடிட் செய்யும் மேசையில் ஒரு வடிவம். குரல்களைச் சேர்க்கும் ஒலிக்கலவையில் ஒரு வடிவம்.

இதில் விஷயம் என்னவென்றால், இத்தனைக் கலைஞர்கள் மனதிலும் உருவான வடிவங்களின் ஒற்றுமை, முழுமைபெறும் திரைப்படத்தில் இருக்குமேயானால், அந்தத் திரைப்படம் ஒரு முழுமையான திரைப்படம், வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ள திரைப்படம்.

இணையதளம், அப்படியரு திரைப்படம் என்பதை நான் நம்புவதும் மேற்குறித்த காரணங்களால் தான்.

இணையதளம் திரைப்படத்தின் இயக்குநர்கள் சங்கர் & சுரேஷ் இருவருக்கும், ஒரேயரு விஷயத்தில் தீவிர கவனம் இருந்தது. “இந்தத் திரைப்படம் சொல்ல விரும்பியதைச் சொல்லியிருக்கிறதா,” என்று கண்காணித்துக் கொண்டே இருந்தார்கள்.

சொல்லும் முறைகள் எப்படி இருந்தாலும் சொல்லப்பட்டது என்ன என்பதுதான் எந்தவொரு கலைவடிவத்திற்கும் முக்கியம். அந்த மையம் நழுவுவதற்கு திரைத்துறையில் வாய்ப்புகள் அதிகம்.

நகைச்சுவை, சண்டைக்காட்சி, பாடல் காட்சி, தொழில்நுட்பத் துல்லியம், இசை நுணுக்கம் இத்தனையும் இணைந்து கைகோர்க்கும் போது இரண்டு விஷயங்கள் நிகழலாம்.

ஒன்று, சொல்ல வந்த செய்தி மிக அழுத்தமாகப் பதிவாகும். அல்லது, சொல்ல வந்த செய்தி சொல்லப்படாமலேயே போகும். இணையதளத்தில் அடிநாதமாய் விளங்குகிற சமுதாயத்திற்கான அடிப்படைச் செய்தி இதில் வசீகரமாகவும் வசதியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இன்று மனிதன் தனது வசதிக்காகக் கண்டுபிடித்த பல அம்சங்கள், மனிதனின் கவனக்குறைவால் அவனை திசைமாற்றும் சக்திகள் ஆகிவிட்டன. அவற்றை கையாள்வதில் ஏற்பட்ட குறைபாடு தன்னுடையது என்று கூறத் தெரியாததால் மனிதன் துன்பப்படுகிறான்.

விளையாட்டாய் கையாளும் போது விழிப்புணர்வு இல்லையென்றால் விபரீதம் விளையும் என்பதை அழுத்தமாகச் சொல்லும் திரைக்கதையை இயக்குநர்கள் தந்தார்கள்.

இது தத்துவ போதனையாகவோ தகவல்களின் திரட்டாகவோ இருந்துவிட்டால், கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த திரைப்படமாய் திட்டமிடப்பட்டது.

ஒரு நல்ல உணவை உண்டால் அதன் விளைவுகளில் முக்கியமானது மனநிறைவு. இந்த மனநிறைவு உணவின் சுவையால் மட்டும் வருவதில்லை உணவின் தரத்தாலும் வருவது.

தரமான உணவுகள் சுவைகுன்றி இருந்தாலோ, சுவையான உணவுகள் தரமின்றி அமைந்தாலோ அது மனநிறைவு தருவதில்லை. சாப்பிட்டவர்களுக்கு மட்டுமல்ல சமைத்தவர்களுக்கும் கூட.

சொல்ல வேண்டியதைச் சொல்வதும், சொல்லும் விதத்தில் சொல்வதும் சரியாக அமைந்த திரைப்படம் “இணையதளம்”.

இதன் முதன்மைப் பாத்திரங்களில் ஒருவரான கணேஷ் வெங்கட்ராம், நம்பிக்கை தருகிற நட்சத்திரம். அவரிடம் படத்தின் இயக்குநர்கள் இருவருமே படப்பிடிப்பின் போது ஓர் உத்திரவாதத்தைத் தந்தார்கள்.

“துண்டு துண்டாக நடிக்கும் போது உங்கள் பாத்திரத்தின் முக்கியத்துவம் புரியாது. படம் முழுமையடைந்த பிறகு பாருங்கள்”.

அவர்கள் சொன்னதுதான் நடந்தது. அவருக்கு மட்டுமல்ல படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு பாத்திரமும் தன்னளவில் முழுமை பெற்ற விதமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது.

“காலம் என்னும் கதை வெளியில் நாலும் நடக்கிறது. மாறும் காட்சிகள், மாறும் சூழல்கள், நாட்கள் நகர்கிறது, ஆளுக்கேற்ற விதமாய் இங்கே வாழ்க்கை அமைவதில்லை. வாழ்வின் போக்கை மாற்ற நினைத்தால் வழிகள் தெரிவதில்லை”.

இது, இணையதளம் திரைப்படம் பற்றி இப்போது நினைக்கையில் எனக்குள் எழுகிற எண்ணங்கள்.

இன்று உலகம் முழுமையும் ஆட்டுவிக்கிற இன்றைய தலைமுறையே பெரும் தாக்கம் செலுத்துகிற “இணையதளம்” பற்றிய புரிதல்களையும், அதன் விளைவுகளையும் வசீகர மொழியில் பேசும் வண்ணப்படம் என்று “இணையதளம்” திரைப்படத்தை நான் வரையறை செய்வேன்.

மனிதநேயம் முன்னிலைப்படுத்தப்படும் போது என்ன நிகழ்கிறது? மனிதம் பின்னுக்குத் தள்ளப்பட்டால் என்ன விழுகிறது? என்பதைக் கூர்மையாகவும், குதூகலமாகவும் இணையதளம் சொல்கிறது.
(இன்னும் சொல்வேன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *