எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…

நகர்ந்து கொண்டிருப்பது நதியின் இயல்பு. பயணம் செய்வது மனித இயல்பு.

இந்தியச் சமய மரபில் பயணம் என்பது ஆன்மீக வளர்ச்சியின் அம்சம். கங்கை, காவிரி, கன்யாகுமரி என்று பல இடங்களுக்கும் பயணம் செய்து, எல்லா இடங்களும் இறைவனின் இருப்பிடம் என்பதை உணரச் செய்வதற்காகவே தீர்த்த யாத்திரைகள் சமயத்தின் பெயரால் செய்யப்பட்டன.

“கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்?
பொங்கு தண் குமரித்துறை ஆடில் என்?
ஓங்கு மாக்கடல் ஓதநீர் ஆடில் என்?
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே”

என்கிறார் திருநாவுக்கரசர்.

வெவ்வேறு இயல்புடைய மனிதர்கள் – பண்பாடுகள் – மொழிச் சூழல்கள் – வாழ்க்கை முறைகள் அத்தனையும் தரும் பட்டறிவு ‘பத்து பல்கலைக் கழகங்களின் படிப்பறிவுக்குச் சமம்.

சர்வதேச அளவில் அமெரிக்காவின் இருப்பு, பல விஷயங்களில் அதன் நிலைப்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையில் அமெரிக்கா பற்றிய ஓர் அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்கொண்டு அந்த தேசத்துக்குள் செல்வது ஒருவகை.

அமெரிக்க சமுதாயம் தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிற விதம், அதன் வளர்ச்சி முறை, குடிமக்களுக்கு தேசத்தின் மீதிருக்கும் நேசம் போன்றவற்றைக் கண்டு, அதன் காரணங்களை ஆராயும் கண்களோடு அமெரிக்காவைப் பார்ப்பது இன்னொரு வகை.

இந்த இரண்டாவது மனநிலையில்தான் என் பயணம் இருந்தது. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தென்னகத்திலிருந்து சென்று ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளவருமான திரு.பால்பாண்டியன், மாநாட்டின் போக்குவரத்துக் குழு பொறுப்பாளர் திரு.பழனிச்சாமி ஆகியோர் டல்லாஸ் விமான நிலையத்தில் எங்களை வரவேற்றனர்.

அமெரிக்காவில் கோடைக்காலம் இது. “கொளுத்துகிற வெய்யிலில் கொஞ்சம் கூட வியர்க்கவில்லையே” மனது முதலில் மகிழ்ந்தது. பிறகு தான் நினைவு வந்தது – “வெளியே தராத செல்வமும் வியர்வை தராத வெய்யிலும் ஆபத்து” என்பது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் பொருத்திய குளிர்சாதன ஏற்பாடு வியர்வை. வெளியிலுள்ள சீதோஷ்ணத்திற்கேற்ப சமன்பாட்டை வியர்வை செய்யும். வியர்க்காத பட்சத்தில் நீர்ச் சத்து குறையும். சோர்வு கூடும்.

அமெரிக்காவின் வெய்யிலுக்கு ஈடுகொடுக்க நிறைய தண்ணீர், பழரசம் பருகுங்கள் என்று கார் பயணத்தில் சொல்லிக்கொண்டே வந்தார் பழனிச்சாமி.

கோபிக்குப் பக்கத்திலுள்ள கிராமத்தை சேர்ந்தவர் அவர். அமெரிக்காவில் கால் வைத்து அரை மணிக்குள்ளாகவே காது குளிரக் கொங்குத் தமிழ் கேட்டதும் உற்சாகமாகி விட்டேன்.

கடந்த நூற்றாண்டில்தான் அமெரிக்காவில் அடுக்கு மாடிகள் ஆச்சரியம். இந்த நூற்றாண்டில் அமெரிக்காவின் ஆச்சரியம் அடுக்குப் பாலங்கள் தான்.

தூரத்திலிருந்து பார்க்கும் போது பின்னிப் பிணைந்த பாம்புகளாய்த் தெரியும் பாலங்கள். பக்கத்தில் நெருங்க நெருங்க துல்லியமான கோடுகளாய்ப் பிரிகின்றன.

ரெனய்ஸன்ஸ் ஹோட்டலில் நாங்கள் நுழையும் போது எங்களை வரவேற்றார் திருமதி. விஜி ராஜன். இவர் மாநாட்டுக் குழுவின் தலைவர். வாமன வடிவம் செயலாற்றலில் விசுவரூபம். “இரவு விருந்துக்கு திரு.பால் பாண்டியன் இல்லம் செல்லத் தயாராகுங்கள்” என்று முன்பே தெரிவித்திருந்தார்கள்.

சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு எங்களை அழைத்துச் செல்ல கார் வந்தது. “இப்படி வெய்யில் கொளுத்துகிறதே” என்று நேரத்தை விசாரித்தால் வடஅமெரிக்கா நேரப்படி இரவு எட்டுமணி.

குளிர்காலத்தில் ஐந்து மணிக்கெல்லாம் இருட்டிவிடுகிற அமெரிக்காவில் கோடைக் காலமென்றால் சூரியனுக்கு ஓவர் டைம்& இரவு ஒன்பதரை மணி வரை.

வாரத்திற்கு நாற்பது மணி நேரமே பணி நேரம் என்கிற வரையறை கண்டிப்பாகப் பின்பற்றப்படும் அமெரிக்காவில் சூரியனுக்கு மட்டும் அந்தச் சுதந்திரம் கிடையாது.

இரவு விருந்து, இந்தியாவின் இன்றைய நிலை பற்றிய கலந்துரையாடலின் களமாக இருந்தது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களில் பலருக்கும் தாயகத்தின் இன்றைய நிலை குறித்துத் தெளிந்த பார்வை இருக்கிறது. எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாய், ரவி தமிழ்வாணன் அங்கு வந்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *