எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…

அமெரிக்காவில் எதைப் பார்க்கிறோமோ இல்லையோ நிச்சயம் நயாகராவைப் பார்க்க வேண்டும் என்று முன்னரே கருதியிருந்தேன். அதற்குரிய பொழுது பாஸ்டனில் விடிந்தது.

மழை பிலிற்றிக்கொண்டிருந்த அந்த அதிகாலைப் பொழுதில், என் பள்ளிப்பருவத் தோழன் அருண்குமாரும் நானுமாய் நயாகராவுக்குக் கிளம்பிய பொழுது, பள்ளிப் பருவத்தின் சுற்றுலா புறப்பாட்டு அனுபவம் மீண்டும் மனதில் நிழலாடியது.

பயணங்களில், “நாம் வெளிநாட்டில் இருக்கிறோம்” என்கிற உணர்வை ஏற்படுத்துபவை உணவுகள். நண்பர்கள் எல்லா இடங்களிலும் இருந்ததால் இந்திய உணவே தொடர்ந்து கிடைத்து வந்தது. இதற்கு முன்னர் டல்லாஸில் இருந்து சனன்டானியோ சென்றபோது, ரொம்ப அநியாயம். நண்பன் விஜயானந்த்தின் மனைவி கவிதா, நம்மூர் தீர்த்த யாத்திரைகளுக்குத் தயார் செய்வதுபோல் புளியோதரை, தயிர்சாதம், மாங்காய் ஊறுகாய் என்று அமர்க்களப்படுத்தியிருந்தார். இந்த முறையாவது, நாம் இருப்பது அமெரிக்கா, போகும் இடம் நயாகரா என்று நானே முதலில் நம்புவதற்காக இந்திய உணவு வேண்டாம் என்று மறுத்திருந்தேன். பயணத்தின் போதே சாப்பிட்டுக் கொள்ளும் விதமாய் அமெரிக்க உணவுகளான டோநட், சீமன்பிரட் போன்றவற்றைக் கையிலெடுத்துக் கொண்டோம்.

பாஸ்டனிலிருந்து நயாகராவிற்கு ஏறக்குறைய ஏழு மணிநேரக் கார்ப்பயணம். வாய் ஓயாத பேச்சு, காரின் ரிகார்ட் பிளேயரில் நான் கையோடு கொண்டு போயிருந்த டி.எம்.சவுந்தர்ராஜன் பாடல்கள். பயண அலுப்பைத் துளியும் தராத சாலைகள். அந்தப் பயணத்தின் உற்சாகத்தில் நயாகராவில் நனைவதுகூட இரண்டாம் பட்சமாகிவிட்டது.

பாதிதூரம் போயிருப்போம். அருண்குமாரின் செல்லிடப்பேசி ஒலித்தது. பேசியவன், என்னிடம் நீட்டி, “ஈஷாவிலிருந்து யாரோ செந்தில் என்று ஒருவர் பேசுகிறார்” என்றதும் எனக்கு விஷயம் விளங்கிவிட்டது.

நான் அமெரிக்காவிலிருந்த அதே நேரம், சத்குரு ஜகிவாசுதேவ் அவர்களும் அமெரிக்காவில் முகாமிட்டு இருந்தார்கள். பாஸ்டனில் ஓய்வாக இருந்தபோது, ஈஷாவின் அமெரிக்க மையத்தைத் தொடர்பு கொண்டேன். தொலைபேசியை எடுத்த அமெரிக்கரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, “நான் அமெரிக்கா வந்திருப்பதை சத்குரு அவர்களிடம் தெரியப்படுத்துங்கள். அது போதும்” என்று கூறியிருந்தேன். “சத்குரு வகுப்பில் இருக்கிறார். நாங்கள் தெரிவிக்கிறோம்” என்றார் அந்த அமெரிக்கர்.

பாஸ்டனில் என் நண்பரின் இல்லத்திற்கு அழைத்து இந்த எண்ணை அவர்கள் பெற்றிருப்பார்கள் என்று நினைத்தபோதே செந்தில் பேசினார். நலம் விசாரித்துவிட்டு, “கொஞ்சம் இருங்க! சத்குரு பேசறாங்க!” என்றார் “என்னங்க முத்தையா! எப்ப வந்தீங்க! உங்க மேகஸீன் விஷயமா வந்தீங்களா” என்று சத்குருவின் பரிவான குரல் ஒலித்தது. தமிழ் மாநாட்டிற்கு வந்த விஷயத்தைச் சொல்லிவிட்டு, தற்போது நயாகரா சென்று கொண்டிருப்பதையும் சொன்னேன். உடன் யாரெல்லாம் வருகிறார்கள் என்று கேட்டுவிட்டு, எப்போது இந்தியா திரும்புகிறேன் என்று விசாரித்த சத்குரு “சரிங்க! ஜாக்கிரதையா போயிட்டு வாங்க! இந்தியாவிலே பார்க்கலாம்” என்று ஆசிர்வதித்தார்.

இந்தத் தொலைபேசி அழைப்பு, என்னை மேலும் உற்சாகமாக்கியது. எதிர்பாராத சந்தோஷத்தில் சற்றே மௌனமாகி வெளியே பார்வையைப் படரவிட்டேன். அமெரிக்காவில் ஏறக்குறைய இரண்டாயிரம் மைல்களையாவது காரில் கடந்திருப்பேன் அந்த தூரத்தில் குறைந்த பட்சம் ஒரு கோடி மரங்களையாவது கடந்து வந்திருப்பேன். பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது பசுமை.

நயாகராவுக்காக சேமித்திருந்த உற்சாகம், பயணக் கலகலப்புக்கே பெரிய அளவில் பயன்பட்டது. நம் வேளாங்கண்ணியை நினைவுபடுத்தக்கூடிய வீதி அமைப்புகளோடு விளங்குகிறது நயாகரா நகரம். நயாகராவை நெருங்க நெருங்க, அருவிப்பக்கமாய் நம்மை அழைத்துப் போவதற்கு வாடகை ஹெலிகாப்டர்கள் நம்மூர் ஆட்டோக்களைப் போல் நின்று கொண்டிருந்தன.

சுற்றுலாத் தலங்களுக்கே உரிய சின்னச் சின்னக் குழப்பங்கள் கொண்ட வீதிகள், நயாகராவிலும்!!

“வேளாங்கண்ணிபோல் இருக்கிறதே” என்று மனதில் விழுந்த முதல் பிம்பம் கரையும் முன்னே மற்றோர் ஆச்சரியம். “டேய் சுப்பிரமணி! தனியா போகாதே” “அம்மா! இந்தப் பக்கம் வாங்க!” “க்ரேஸி! ராபர்ட் எங்கே!” என்று ஏகப்பட்ட தமிழ்க் குரல்கள். அன்றுதான் அப்படியோ இல்லை என்றுமே அப்படியோ தெரியவில்லை. நயாகரா அருவிக் கரையில் நூற்றுக்கணக்கான தமிழ் முகங்கள்.

தமிழர்கள் எப்போதும் இயற்கைக்குப் பக்கத்தில் இருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டுக் கொண்ட போது “ஹோ”வென்ற சிரிப்போடு வரவேற்றது நயாகரா, பாறை தேவதைக்குப் பாலாபிஷேகமாய் அடர்த்தியான பிரவாகமாய் நயாகரா! பார்த்து முடியாத பிரம்மாண்டம் அது.

நயாகராவை இன்னும் நெருங்கிப் பார்க்கும் விதமாய் ‘மெய்டன் மிஸ்ட்’ என்றொரு படகுச் சேவை இருக்கிறது. அதற்கு வாங்கும் சீட்டிலேயே, கோட் ஒன்றும் அடங்கும். நீலநிற பிளாஸ்டிக்கில் செய்யயப்பட்ட அந்த கோட், அருவியின் அசுர வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. படகுத் துறைக்குப் பக்கத்திலேயே இருக்கிறது, அமெரிக்காவையும் கனடாவையும் தனித்தனியாகப் பிரிக்கிற ஒற்றைப் பாலம். பத்தடி கடந்தால் பக்கத்து தேசம்! இந்தப் பக்கம் அமெரிக்கக் கொடிகள், அந்தப் பக்கம் கனடா கொடிகள். கனடா நாட்டுக் கரையிலும் ‘மெய்டன் மிஸ்ட்’ படகு இருக்கிறது. அதில் இருப்பவர்களைத் தனியாகக் காட்டுவதற்கு மஞ்சள் வண்ண கோட் வழங்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *