மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…

சித்திரக்காரனின் தூரிகை முனையாய்க்
குழம்பி நனைந்து கிடக்குதென் இதயம்;
ஒப்ப முடியா நிறங்களிலெல்லாம்
தப்ப முடியாதென் தலையைத் திணித்துக்
கழுத்தை அழுத்தும் சித்திரக்காரனாய்க்
காலம் என்னை வேலை வாங்கும்;
நேற்றைய சாயம் நீங்கும் முன்னரே
மாற்றுச் சாயம் மூச்சை அழுத்தும்;
மையம் உலர்ந்தும், முனைகள் நனைந்தும்,
வறண்ட ஈரத்தில் வாழ்க்கை நடக்கும்.
கோலப் புள்ளிகள், கோடுகள், விளைவுகள்,
ஜாலம் காட்டும் சித்திர நேர்த்திகள்,
தவறி விழுந்த துளிகளைக் கூட
சுழித்துக் காட்டும் சமாளிப்புகளென
சாமர்த்தியத்தின் சூடு தாங்காமல்
வண்ணங்கள் நடுவிலென் வியர்வை வழியும்;
மயில் தோகையினும் மெல்லிய முனைகளில்
பிசுபிசுத்திருப்பது எனது கண்ணீர்;
ஆயிரங்களுக்கோ லட்சங்களுக்கோ
ஓவியம் வாங்க ஊரே கூடும்;
விவஸ்தையில்லாத நிறங்களின் கலப்பில்&என்
சுயத்தை விழுங்கிச் சூல்கொண்ட ஒவியம்
எக்கேடு கெட்டால் எனக்கென்ன போச்சு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *