மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…

பிசகாத இசையின் பிரசவ அறைக்குள்
அலையும் காற்றுக்கு அனுமதியில்லை;
குழலில் இருந்து குதிக்கும் நதியை
வீணையிலிருந்து வெளிவரும் அருவியைக்
கைது செய்த கருவியின் கர்வங்கள்
விசையை அழுத்தும் விநாடி வரைதான்;
கிராம போன்களின் காலம் தொடங்கி
குறுந்தகடுகளின் காலம் வரையில்
மாயச் சுழலில் மையம் கொண்டுதான்
பூமியை அளக்கப் புறப்படும் இசை;

மெல்லிய முள்ளின் துல்லியக் கீறலில்
அபூர்வ கணங்கள் ஆரம்பமாகும்;
சுழலத் தொடங்கிய சிற்சில நொடிகளில்
சிறகு விரித்துக் காற்றில் பறக்கும்
அசுணமாக்களாய் அழகிய ராகங்கள்;
எதிலும் சிறைப்படாத இனிய சுதந்திரம்
இசையின் கசிவில் எழும் முதல் செய்தி;

வலம்வரும் பறவைகள் சிறகசைப்பினை
ஒலிப்பதிவு செய்தவர் உண்டா?
தனது குரல்வளைக் கூடு வசிக்கும்
பறவைகள் அறியான் பிறவிக் கலைஞன்;
பாடும் பொழுதிலோர் வேடந்தாங்கலாய்
இருப்பதில் அவனே திகைக்கவும் செய்யலாம்.

பிரபஞ்ச இயக்கம் அதிசய ராகம்
பிறப்பும் இறப்பும் பக்க மேளம்
காற்றின் சுருதியில் காலகாலமாய்
கடவுளின் அசுர சாதகம் வாழ்க்கை;

தன்னை மறந்த சஞ்சாரத்தில்
நின்று கலந்து நிரந்தரமான பின்
எது இறை? எது இசை?
அறியப்படாத அத்வைதம் அதுதான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *