அரங்கம்
(கவியரங்கக் கவிதைகள்)
(சென்னை பாரதியார் சங்கம் நடத்திய கவியரங்கில் வாசித்த கவிதை. கவியரங்கத் தலைவர் டாக்டர்.பொன்மணி வைரமுத்து)

ஏங்கிக் கிடக்கிற இந்தியருக்கு
ஏழ்மையும் பிணியும் என்றும் நிரந்தரம்;
தேங்கிக் கிடக்கிற அரசியல் குட்டையில்
தீய கிருமிகள் தினமும் பிறந்திடும்;
தூங்கி வழிகிற தலைவரை நம்பியே
துவண்டு விழுகிற தொண்டர்கள் ஆயிரம்! – நீ
வாங்கச் சொன்னது வீர சுதந்திரம்;
வாங்கி வந்ததோ வேறு சுதந்திரம்…

பாரதி!
எரிப்பது குறித்த நெருப்பினுக்கும்
வகுப்புகள் எடுத்த வீரியப் புலவனே!
பாரத தேசம் பற்றி உனக்குள்
ஆயிரம் கனவுகள்! அழகுக்கவிகளாய்
நகல்பெறப்பட்டவுன் நல்ல கனவுகள்
பகல் கனவுகள் என நான் பிரகடனம் செய்கிறேன்

ஆராதனைக்குரிய சுதந்திரத்தை
அடிமை மகள் ஆக்கியிங்கே, ஆடிப்பார்த்தோம்
தீராத வறுமையினால் உலகிலுள்ள
தேசமெங்கும் கடன்வாங்கித் தின்று தீர்த்தோம்
போராடிப் பெற்று வந்த உரிமை யாவும்
மார்வாடிக் கடைகளிலே கொண்டு சேர்த்தோம்
பாரதத்தாய் திருப்பள்ளி எழுந்த நாளில்
பாரதியே உன் கனவு கலையப் பார்த்தோம்!

சாதிகளின் சங்கத்துக்(கு) அடிக்கல்நாட்டி
சமத்துவத்தைக் கல்லறைக்குக் கொண்டு போனோம்;
தேதிகளை மறக்காமல் கிழித்த போதும்
தினந்தோறும் பின்நோக்கி நடக்கலானோம்
போதிமரப் போதனைகள் பூத்த மண்ணை
போதைகளின் புகலிடமாய் மாற்றலானோம்
வேதங்கள் உருக்கொண்ட இந்தியாவை
வேடிக்கைக் கூடமென ஆக்கலானோம்!

வங்கத்தின் வெள்ளத்தை மையநாட்டில்
வரவழைப்பதிருக்கட்டும் – இங்கே எங்கள்
பக்கத்தில் காவிரியை வரச் சொல்லப்பா
புண்ணியமாய்ப் போகட்டும் – பராசக்தித்தாய்
எங்கேனும் காணிநிலம் தருவாள் என்று
எதிர்பார்த்தே ஏமாந்த பலரும் இன்று
அங்கங்கே புறம்போக்கு நிலத்தை எல்லாம்
ஆக்ரமிப்பு செய்ததுதான் கடைசி மிச்சம்!

காட்டாறு பாய்கின்ற வேகத்தோடு
கனல்பறக்கும் எழுத்துக்கள் கொடுத்தும் என்ன?
ஈட்டிமுனை போல் வருத்தும் எண்ணம் மின்ன
ஈனர்கள் முகத்திரையைக் கிழித்தும் என்ன?
பாட்டாலே வையத்தை பாலித்தென்ன?
பாரதத்தின் தலையெழுத்தைத் தேர்தல் நாளில்
ஓட்டாலே ஒரு நொடியில் மாற்றுகின்றார்
உலகத்தைப் பாமரர்தான் ஆளுகின்றார்!

வீணர்களே நிறைகின்ற புழுதிமண்ணில்
வீணையென விழுந்தவன் நீ பாவம் – அந்த
வானத்தை வளைக்க வந்த கவியே – நாங்கள்
வாங்கியது வரமல்ல சாபம் – எங்கள்
தீனநிலை மாற்ற வந்த தமிழா – இங்கு
தணியாது போடா உன் தாகம் – உள்ள
ஈனர்கள் சுயநலத்தின் பேய்ப்பசிக்கு
இரையாகும் சுதந்திரத்தால் எவர்க்கு லாபம்!

தோழமை நாடுகள் யாவினுக்கும் எங்கள்
ஏழைமை கூறிவிட்டோம்- வெறும்
கோழைகளாய்த் தொலைக்காட்சியின் முன்னர்
குடித்தனம் பழகிவிட்டோம்
ஆள்கிற தலைவர்கள் கால்களில் விழுவதில்
ஆனந்தம் கண்டுவிட்டோம்!
வீர சுதந்திரம் வேண்டி நின்றோம் இன்று
வேறொன்று கொண்டுவிட்டோம்!

பாரதியே! எங்கள் பாவலனே! இந்தப்
பாடுகள் நிரந்தரமா?
வான்வெளி மின்னிடும் தாரகை எங்களின்
வாசலில் ஒளிதருமா?
ஊருக்கு நல்லது கூறிய கவிஞன் உன்
கனவுகள் மலர்ந்திடுமா?
வாலிபர் மறுபடி வாங்க இருப்பதே
வீர சுதந்திரமா?
போடா பாரதி போடா எமக்கொரு
பாதையும் தெரியலையே!
கூக்குரல் நிரம்பிய போர்க்களம் நடுவிலுன்
கீதையும் புரியலையே!
நாடாய் இருந்தது, காடாய்த் திரிந்தது
ஏனென்று விளங்கலையே!
நாளும் சிறுமைகள் காணும் இளைஞர்கள்
ரௌத்திரம் பழகலையே!

ஆயினும் நம்பிக்கை மீதமிருக்குது
ஆமெங்கள் நெஞ்சினிலே!
ஆங்கொரு காட்டிடை நீ வைத்துப் போனதோர்
அக்கினிக் குஞ்சினிலே!
பாரங்கள் நீங்கிடும்! சோகங்கள் தீர்ந்திடும்
ஆண்மையின் விடியலிலே!
பாரதி விரும்பிய பாரத தேசம்
தோன்றும் அந்நாளினிலே!

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *