(2002இல் சென்னை கம்பன் விழாக் கவியரங்கில் பாடிய கவிதை -கவியரங்கத் தலைமை – கவிஞர் வாலி)

பத்துத் தலைகொண்ட ராவணன் நெஞ்சில்
படர்ந்த காதல் ஒருதலைக் காதல்
கெட்ட மனம் கொண்ட சூர்ப்பநகைக்குள்
கிளர்ந்த காதல் தறுதலைக் காதல்
சுத்த வீரன் ராமன் மீது
சீதை கொண்டதே சுந்தரக் காதல்
இத்தனை காதலும் எழுதிய கம்பன்மேல்
எனக்குப் பிறந்தது இலக்கியக் காதல்!

பாலகாண்டத்தில் பார்வை கலந்தது
அயோத்யா காண்டத்தில் அன்பு மலர்ந்தது
ஆரண்ய காண்டத்தில் ஆசை கனிந்தது
கிஷ்கிந்தா காண்டத்தில் ஊடல் எழுந்தது
சுந்தர காண்டத்தில் சிந்தை கலந்தது
முத்தம் கேட்டு மன்றாடும் போதெல்லாம்
யுத்த காண்டம் எம்முள் நிகழ்ந்தது!

காதலுக்காகவே காவியம் படைத்த என்
காதலியே ஒரு காவியம் போன்றவள்
ராமனின் வீரமும் சீதையின் ஈரமும்
சேர்த்துக் கனிந்த செந்தமிழ் மாங்கனி!
தாரையின் பொறுமையும் கோசலை மகிமையும்
கைகேயி அழகுமாய் சிரிக்கும் கண்மணி!
ராவணன் கோபமும் வாலியின் சீற்றமும்
ஊடல் பொழுதில் காட்டும் பெண்மணி!

அன்புத் தொண்டில் அனுமனை வெல்வாள்
சுக்ரீவன் போல் சந்தேகம் கொள்வாள்
கம்பப் பெண்ணிடம் குறையாய் இருப்பது
கும்பகர்ணத் தூக்கம் ஒன்றுதான்!

பதவுரையே வேண்டாத பளிங்கு மேனி
பலமுறை நான் தலைமுழுகும் இன்பக் கேணி
இதமாய் இதழ் பதித்தாள் கவிதை ராணி
இதிகாசப் பேரழகி கம்பவாணி
முதல்முதலாய்த் தொட்டதும்நான் முதிர்ந்த ஞானி
மதுத்தமிழில் போதை கொண்ட மனிதத்தேனீ
புதியசுவைப் பெண்ணவள்தான் புலமைத் தோணி
பள்ளியிலே இவள் பாணி புதியபாணி!

தேரெழுந்தூர் மண்பிறந்த தேவதைஎன் காதலிக்குத்
தெள்ளுதமிழ் தண்ணீர்பட்ட பாடு – அவள்
தேன்மொழிக்கு இல்லையரு ஈடு – இந்த
ஊர்திரண்டு ஏக்கமுடன் பார்த்திருக்க என்னுடனே
ஊர்வலமாய் வந்த மயில்பேடு – என்
உள்ளம்தான் அவளிருக்கும் வீடு!

காதுவழி செந்தமிழர் கேள்விப்பட்ட ராமகதை
காவியமாய்ப் பூத்ததவள் ஏட்டில் – அவள்
கட்டுத்தறி கூடச் சொல்லும் பாட்டில் – அந்த
மாதுமொழி கேட்பதற்கும் மேனியெழில் பார்ப்பதற்கும்
யாருக்குத்தான் வேட்கையில்லை நாட்டில் – இந்த
மாநிலமே திரண்டதவள் வீட்டில்!

ஊர்திரண்டு வந்தவுடன் உளம்மிரண்ட கம்பமகள்
உள்ளபடி வந்துவிட்டாள் ஓடி – அவள்
நடைபயின்றாள் தன்வழியைத் தேடி!
ஸ்ரீரங்கக் காவிரியின் கரையோரம் கண்டுவிட்டு
நான் மெல்லப் பின்தொடர்ந்தேன் நாடி – வெகு
நைச்சியமாய்க் காதல்பாட்டுப் பாடி!

அப்படித்தான் எங்களுக்குள் ஆரம்பப் பழக்கம் பின்
அதன் பின்னே ரொம்பரொம்ப நெருக்கம் – எங்கள்
வரலாறு காதலுக்கே விளக்கம்!
இப்படித்தான் இன்னதுதான் என்று சொல்ல முடியாமல்
இளமைதொட்டு அவள்மீது மயக்கம்-அவள்
எண்ணமென்ன, புரியவில்லை எனக்கும்!

சோழனுக்கும் பெண்ணிவள்மேல் காதலுண்டு ஆதலினால்
சிறையிருந்தாள் மாளிகையில் பாவம் – ஆனால்
தங்கவில்லை அங்குரொம்பக் காலம் – தன்னை
வாழவைக்கும் தந்தையென வந்த சடையப்பனுடன்
தாய்வீடு வந்ததந்தப் பூவும் – அவள்
வீணைக்கே திரும்பி விட்ட ராகம்!

அப்பன்வீடு வந்தபின்னே முக்கனியும் பாலுமுண்டு
மெல்லமெல்லத் தேறிவந்தாள் பாவை – நல்ல
சொல்லெடுத்துப் பாடவல்ல பூவை – அங்கு
கற்பனைக்குப் பஞ்சமில்லை, காவிரிபோல் பொங்கிவந்த
பாட்டழகில் சொட்டவிட்டாள் தேனை – தன்
காவியத்தால் தொட்டுவிட்டாள் வானை!

ஐந்துசுவை பெண்ணிடத்தில் உள்ளதென்று
அரைகுறையாய் வள்ளுவனும் எழுதிப்போனான்;
பைந்தமிழாள் இவளோடு பழகிப் பார்த்தேன்
பொய்யில்லை ஆறுவித சுவைகள் கண்டேன்!
மைதவழும் விழியாளின் அழகுமேனி
மனம்கவரும் ஆறுவகைக் காண்டமாகும்!
கைநழுவக் கைதழுவப் படலம் தோறும்
கதைகதையாய் வகைவகையாய் சுவைகள் ஊறும்!

எழில்மாடம் மீதிருந்த சீதை கண்ணில்
இளமாறன் ராகவன் கண் கலக்க விட்டாள்
அழகியைப் போல் வேடமிட்ட அரக்கி அன்று
அன்னநடை நடப்பதற்குப் பழக்கிவிட்டாள்
குழையாத இரும்பான இராவணன் தன்
கோட்டையினைக் காதலினால் குலைத்துவிட்டாள்
இழைகூட இடமின்றி அணைப்போம் என்றேன்
இவள் மட்டும் மறுத்தென்னை விலக்கி விட்டாள்!

“காவியத்தில் காதலென்றால் வஞ்சமின்றிக்
கவிபாடிக் குவிக்கின்றாய் கம்பப் பெண்ணே
ஆவியையும் நான்தருவேன் என்று சொன்னால்
அலட்சியமேன் செய்கின்றாய்” என்றுகேட்டேன்;
பாவியவள் உடனே கண் கலங்கிவிட்டாள்
பேரழகன் இராமனிடம் காதல் என்றாள்

“தூயவனோ சீதைவிட்டு வேறோர் பெண்ணைத்
தொடமாட்டான்” என்றேன் நான். “தெரியும்” என்றாள்.
“பூமாலை புனைந்தளித்த ஆண்டாள் போலப்
புண்ணியனை தினம் நினைத்துப் புலம்பி நானும்
பாமாலை புனைந்தளித்தேன் – அதனை அந்தப்
பரந்தாமன் ஏற்றுள்ளான்” என்றாள் – நானும்
“ஆம்பெண்ணே! அதுமட்டும் உனக்குப் போதும்
ஆசைவைத்தேன் எனை நீயும் மணந்து கொள்வாய்!
ஏமாந்தால் மனம் தாங்க மாட்டேன்” என்றேன்
இரக்கமுடன் கம்பமகள் என்னைப் பார்த்தாள்!

“படையெடுத்தான் மன்மதனும் என்மேல் – இந்தப்
பெரும்பாடு தவிர்ப்பதற்குப் பூவே உன்னை
அடைக்கலமாய்ச் சரணடைந்தேன்” என்று மீண்டும்
அரவணைக்க நான் முயன்றேன்- தள்ளிப் போனாள்
“தடையென்ன தேவதையே! என் கேள்விக்கு
விடைசொல்லிப் போ”வென்று விரட்டிக் கேட்டேன்
“சடையப்பர் வீடு வந்து பெண் கேளுங்கள்
சம்மதித்தால் பார்க்கலாம்” என்று சொன்னாள்!

தேரெழுந்தூர் நகர்நோக்கிப் போக வேண்டும்
தேவையான சீர்செனத்தி வாங்க வேண்டும்!
பாரிபோல் கொடை வழங்கும் சடையப்பர் பால்
போராடிப் பெண்ணிவளை அடைதல் வேண்டும்!
ஊரறிய மணவினை நான் புரிய வேண்டும்
உங்களுக்கும் அழைப்பிதழ்கள் வழங்க வேண்டும்!
வேறென்ன உங்களிடம் விளம்ப வேண்டும்!
விடைகொடுங்கள் இப்போதே கிளம்ப வேண்டும்!

(மான்களுக்கும் கோபம் வரும் -நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *