(13.07.2017இல் திருச்சியில் நடந்த கவிப்பேரரசு வைரமுத்து பிறந்த நாளில் செம்மொழிக் கவியரங்கில் தலைமையேற்றுப் பாடிய கவிதை)

உச்சிப் பிள்ளையார் வீற்றிருந்து
உலகைப் பார்க்கிற மலைக்கோட்டை!
வெற்றித் தமிழர் பேரவையின்
விழாவால் இன்றிது கலைக்கோட்டை!

கபினியின் காவிரி பாய்ந்து வரக்
காலம் கனிகிற வேளையிலே
கவிதைவெள்ளம் கரை புரண்டு
திருச்சியை நனைக்கும் தோழர்களே!

நாடு முழுவதும் பீடு நடையிடும்
பேரவைக்கிது பண்டிகையாம்!
ஈடில்லாமல் திருச்சி மாவட்டப்
பேரவை நடத்தும் உற்சவமாம்!

உற்சாகத்தின் உற்சவ நாளில்
உள்ளம் குலுக்கும் கவியரங்கம்!
அற்புதக் கவிஞர்கள் நால்வர் வந்து
திறந்து வைப்பார் தமிழரங்கம்!

எத்தனை தினங்கள் இருந்தாலென்ன
இதுதான் இதுதான் சிறந்த தினம்!
வெற்றித் தமிழன் வைரமுத்து
வந்திந்த பூமியில் பிறந்த தினம்!

முந்தைய கவிஞர்கள் வியந்திடும் விதமாய்
விண்ணைத் தொடவே ஓங்கியவன்
சிந்தும் இசையில் சந்தம் இழைத்துத்
தங்க விருதுகள் வாங்கியவன்!

விஞ்ஞானத்தின் சிறகுகளில் உன்
வசந்தத் தமிழின் சுகவாசம் – நீ
கைகால் முளைத்து உலகை வலம் வரும்
கள்ளிக்காட்டு இதிகாசம்!

மிடுக்கும் துடிப்பும் வெடிக்கும் உனது
படைப்புகள் சூடும் புகழ்வாகை – உனக்கு
அடிக்கடி விருதுகள் கொடுத்தே தேயும்
அப்துல் கலாமின் கைரேகை!

வாங்கிக்குவித்த விருதுகள் உனது
வயதின் எண்ணிக்கை மீறியதே -உன்னை
வளர்த்ததாலேயே வடுகபட்டி
விருதுப்பட்டியாய் மாறியதே!
உன்
ஆளுமையோடு இன்னொரு கவிஞன்
தோன்ற இனியரு யுகமாகும்!
காலை தொடங்கி மாலைவரை உன்
வாழ்க்கை முறையே தவமாகும்!

காலை விடியுமுன் நெடுந்தொலை நடப்பாய்
காற்றைக் கிழித்துக் கைவீசி!
நாளுக்குப் பலமுறை உன்னை அழைக்கும்
கலைஞர் வீட்டுத் தொலைபேசி!

திசைக்கு ஒருவராய் இருக்கும் தம்பிகள்
எங்கள் அழைப்புக்கும் செவிகொடுப்பாய்!
“இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்” என
எங்களைப் பற்றியும் எழுதிவைப்பாய்!

பட்டும்படாமல் தொட்டும் தொடாமல்
காலை உணவு அளவோடு -உன்
தட்டில் மட்டும் தினமும் நடக்கும்
கலோரிக் கணக்கின் மாநாடு!

இயக்குநர் அறையிலோ புல்வெளித் தரையிலோ
தொடங்கும் உனது தமிழ்யாகம்!
எடுக்க எடுக்கச் சுரக்கும் அமுதமாய்ப்
பிறக்கும் பாட்டின் பிரவாகம்!

இசையும் தமிழும் கசியக் கசியக்
கழியும் உனது பகல்பொழுது!
அசைவ உணவு ஒன்றுதானே
அசைக்கும் உன்னைச் சிலபொழுது!

ஊட்டம் கொடுக்கும் அசைவ ரகங்களைத்
தேர்வு செய்வதே தனிவிதம் தான்;
நாட்டுக்கோழி இலையில் விழுந்தால்
நோபெல் பரிசெல்லாம் அப்புறம்தான்!

இரைப்பையில் பாதி நிரம்பிய பிறகு
ஒருதுளி உணவும் நீ தொடுவதில்லை – இந்த
விழிப்புணர்விருக்கும் காரணத்தால்தான்
முதுமை உனக்கு வருவதில்லை!

ஐம்பது வயதைக் கடக்கும்போதும்
அடடா இளமை குறையவில்லை -நீ
வேகவேகமாய் நடக்கையில் நாங்கள்
ஈடுகொடுக்க முடியவில்லை!

இத்தனை ஆண்டுகள் நெருங்கிப் பழகியும்
எனக்கும் உன்னைப் புரியவில்லை! நீ
எப்போது எரிமலை எப்போது குளிர்மழை
என்பதுதானே தெரியவில்லை!

உறவோ நட்போ அனுமதியின்றி
உன்னை நெருங்க முடியாது – உன்
செல்லிடப்பேசி எண்ணைப் போல
உலக ரகசியம் கிடையாது!

எல்லோருக்கும் நெருக்கம் நீ எனிலும்
எல்லைக் கோடொன்று கிழிக்கின்றாய் – அந்த
எல்லையை வகுக்கும் தெளிவில்தானே
இன்று வரைக்கும் ஜெயிக்கின்றாய்!
சாதனைகள் உனக்கு சாதாரணம்தான்
வெல்க தினம் தமிழ்ச் சொல்லாண்டு!
வாழ்வை ரசித்து வாழும் தலைவனே
வாழ்க நீ இன்னும் பல்லாண்டு!

அன்னைத் தமிழே! ஆதிநாள் பூங்குயிலே!
உருவானபோதே உயர்தனிச் செம்மொழியே!
என்னருமைத் தமிழர்கள் இல்லங்களை விட்டுக்
கண்ணகி சிலை போலக் காணாமல் போனவளே!

கான்வென்ட் பள்ளிகளின் கதவு திறந்தவுடன்
வெளியேற்றப்பட்ட வைகைக்கரை சரஸ்வதியே!
நாட்டில் இருக்கின்ற தொலைக்காட்சிகளில் எல்லாம்
காணாமல் போனவர்கள் பட்டியலில் இருப்பவளே!

ஒருதேர்வு எழுதி உயர்மதிப்பெண் கிடைக்காமல்
மறுதிருத்தத்துக்கு மனுப்போடும் மாணவிபோல்
கன்னிமை மாறாத காவியங்கள் தந்தாலும்
மன்மோகன் சிங்கிடத்தில் மனுக்கொடுத்து நிற்பவளே!

தாமிரப் பட்டயத்தைத் தொலைத்துவிட்ட ஒருதியாகி
யாரேனும் வருவாரா? சான்றிதழ் தருவாரா? – எனப்
பாராளுமன்றதைப் பார்த்துக் கிடப்பவளே!
வாய்மொழி ஆணையேனும் வருமென்று பார்த்திருக்கும்
தாய்மொழியே! தமிழ்மகளே! உன்பெயரால் கூடியுள்ளோம்!

நாடுகளைத் தாண்டி உன்பேர் நாளைக்குப் பரவிடுமாம் – அதற்குள்
வீடுகளை கொஞ்சம் விசாரித்துப் பார்த்து
ஒரு கவிஞர் இங்கே உளம் நொந்து வந்துள்ளார்!

மழலை உதடுகளில் மிட்டாய் இனிப்பாய் நீ
வழிவாய் எனநினைத்து வழியெல்லாம் தேடி
ஆங்கில மழலைகள்தான் ஆட்டோவில் போகுதென்று
ஏங்கி ஒரு கவிஞர் இதோ இங்கே வந்துள்ளார்!
இதழ்களிலே உனைக் காணோம்! தொலைக்காட்சிப் பெண்களின்
இதழ்களிலும் உனைக் காணோம்! என இதயம் பதைபதைத்து
இன்னும் ஒரு கவிஞர் இதோ இங்கே இருக்கின்றார்!

வண்ணக் கவியரங்கின் வாசல் திறக்கிறது!
மின்னல் கவிதைகளில் மின்சாரம் பிறக்கிறது!
செம்மொழியாய் தமிழ் ஆவதெல்லாம் இருக்கட்டும்!
நம்மொழிதான் தமிழ் என்ற சொரணை முதலில் பிறக்கட்டும்!
அரங்கில் உள்ள கவிஞர்களை அன்போடு பாராட்டி
வரிசையிலே அழைக்கின்றேன் வாழ்க தமிழ் மகளே!

(மான்களுக்கும் கோபம் வரும் – நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *