பாகவதக் கண்ணனும் பாரதக் கண்ணனும் வேறு வேறு என்றிருக்கும் கதைகள் தொடங்கி, குருஷேத்திர யுத்தம் ஓர் உருவகம் என்ற காந்தியின் கருத்து வரை அனைத்தையும் ஓஷோ நிராகரிக்கிறார்.

சூர்தாஸ், கண்ணனின் பாலபருவத்தை மட்டுமே பாட, கேசவதாஸ் கண்ணனின் இளமைப் பருவத்தை மட்டுமே பாடுகிறார். இதற்கெல்லாம் அவரவரின் மன எல்லைகளே காரணம் என்கிற ஓஷோ.

“கண்ணன் ஒரு விரிந்த சமுத்திரம். அந்தக் கடல் நீரில் கொஞ்சம் எடுத்து குளமாக்கி, இதுதான் கண்ணன் என்று சொல்பவர்கள் கண்ணனின் ஒரு துளியைக் கூடக் காட்டிவிட முடியாது” என்கிறார்.

இதிலும் பாரதியின் கருத்து ஓஷோவுடன் ஒத்துப் போகிறது. கண்ணன் எல்லைகளுக்குள் அகப்படாதவன் என்று சொல்ல வருகிற பாரதி,

“நாவு துணிகுவதில்லை – உண்மை
நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே;
யாவரும் தெரிந்திடவே – எங்கள்
ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்வதுண்டு;
மூவகைப் பெயர் புனைந்தே – அவன்
முகம் அறியாதவர் சண்டைகள் செய்வார்
தேவர் குலத்தவன் என்றே – அவன்
செய்தி தெரியாதவர் சிலர் உரைப்பார்” என்று பாடுகிறான்.

எல்லையின்மை என்கிற அனுபவத்துக்குத் தயாராக வேண்டிய மனது, தனக்கு சித்தித்த அனுபவம் மட்டுமே கடவுட் தன்மை என்கிற முடிவுக்கு வந்து விடுகிறது. உண்மையான கடவுள் அனுபவம் பெற்றவர்கள், இந்தப் பிரபஞ்சத்தையே தன்னில் ஒரு பாகமாகப் பார்க்கிறார்கள். விழிப்புணர்வின் உச்சநிலையில் அதுவே அவர்களின் முதல் அனுபவமாக மலர்கிறது. தங்கள் மனக் கற்பனையிலோ உருவெளித் தோற்றத்திலோ அரைகுறையாகக் கடவுள் பற்றிய சில காட்சிகளைக் கண்டவர்கள், அதுவொன்றே கடவுள் அனுபவம் என்று கருதத் தலைப்படுகிறார்கள். இதன் விளைவாக பேதங்களும் மோதல்களும் வெடிக்கின்றன.

“நாவு துணிகுவதில்லை – உண்மை
நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே”

பல ஞானிகளின் மொழி மௌனமாகவே இருப்பதும் இதனால்தான்.

“யாவரும் தெரிந்திடவே – எங்கள்
ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்வதுண்டு”

பெயர் சொல்லிடக் கடவுளைச் சுட்டுகிறபோது எல்லையில்லாத பேராற்றலுக்கான அடையாளமாக மட்டுமே அது அமைகிறது என்று பாரதி பிறிதோரிடத்திலும் பேசுகிறான்.

புதிய ஆத்திசூடிக்குப் பரம்பொருள் வாழ்த்து எழுதும்போது, எந்தக் கடவுளைப் பாடுவம்? புதிய ஆத்திசூடியின் உட்பொருளே, மனிதனை உள்முகமாகத் திருப்பிவிட்டு, உடலை&உள்ளத்தை&உயிரை உறுதிப்படுத்தச் செய்வதுதான். இதனை, எவ்வித பேதமுமில்லாமல் ஒவ்வொரு தனிமனிதனும் மேற்கொள்ள வேண்டும் என்று கருதுகிற பாரதி, அப்படி செய்கிற மனிதன், மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுள் அனுபவத்தைப் பெறுவான் என்று கருதுகிறான்.

அதனாலேயே மத எல்லைகள் கடந்த அந்தக் கடவுள் அனுபவத்தை விவரித்து, அதையே பரம்பொருள் வாழ்த்தாகப் பாடுகிறான்.

ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து
மோனத்து இருக்கும் முழுவெண் மேனியான்,
கருநிறம் கொண்டு, பாற்கடல்மிசைக் கிடப்போன்,
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்,
ஏசுவின் தந்தை, எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்து, உணராது
பல வகையாகப் பரவிடும் பரம் பொருள்
ஒன்றே; அதன் இயல் ஒளியுறும் அறிவாம்;
அதன் நிலை கண்டார்; அல்லலை அகற்றினார்;

அதன் அருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவாம்; என்பது புதிய ஆத்திசூடியின் பரம்பொருள் வாழ்த்து. இதுதான் எல்லையின்மையின் முகம். இது புரியாதவர்களே புராண எல்லைகளுக்குள் கண்ணனை நிறுத்துவார்கள் என்று கருதுகிற பாரதி,

“மூவகைப் பெயர்புனைந்தே – அவன்
முகம் அறியாதவர் சண்டைகள் செய்வார்
தேவர் குலத்தவன் என்றே – அவன்
செய்தி தெரியாதவர் சிலர் உரைப்பார்”
என்று குறிப்பிடுகிறார்.

மரபின் மைந்தன் ம.முத்தையா

(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *