வெற்றியா? விளையாட்டா?

எல்லோரையும் எல்லா விதங்களிலும் வெற்றி கண்டதாகத்தான் கண்ணனின் வாழ்க்கை இருந்திருக்கிறது. உரலோடு கட்டப்பட்ட குழந்தை உரலை இழுத்துக் கொண்டே அரக்கர்களைக் கொல்கிறது. பால் கொடுத்துக் கொல்ல வந்த பூதகியைக் கொல்கிறது. வளர்ந்த பிறகும் இந்த வெற்றி வரலாறு தொடர்கிறது. காளிங்க நர்த்தனம், கோவர்த்தன கிரியைக் குடையாக்கிய சம்பவம் என்று பட்டியல் நீள்கிறது.

பாரதப் போர்வரையில் வந்து நிற்கிற கண்ணனின் வெற்றிகள் பற்றி ஓஷோவிடம் கேட்கிறார்கள். சிசுபாலனைக் கொல்வதற்கு முன் தன் மேல் ஏவப்பட்ட 999 வசைமொழிகளைக் கண்ணன் பொறுத்திருந்தது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.

மகாபாரத யுத்தத்துக்குத் துணை போனவன் என்றும், அந்த யுத்தத்துக்கே காரணமானவன் என்றும் கண்ணன் மீது சொல்லப்படுகிற விமர்சனங்களையும் ஓஷோ எதிர்கொள்கிறார்.

கண்ணனைப் பற்றிய ஓஷாவின் புரிதல் வித்தியாசமானது. களத்தில் நிற்கிற கண்ணன், வன்முறையை ஆதரிப்பவன் அல்லன் என்பதை எப்படி உணர்த்துவது? இது ஓஷோவால் முடிகிறது. இதற்கு பதில் சொல்லும் போது காந்தியை உதாரணம் காட்டுகிறார் ஓஷோ. கீதையைத் தன்னுடைய தாய் என்று சொல்கிற காந்தியால் குருஷேத்திர யுத்தம் நிகழ்ந்தது என்பதை ஒப்புக் கொள்ள முடியவில்லை. எனவே, குருஷேத்திர யுத்தமே மனித மனதுக்குள் நடக்கிற போராட்டத்தின் உருவகம்தான் என்று கருதுகிறார்.

இதை ஓஷோவால் ஏற்க முடியவில்லை. என்ன நடந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல் தள்ளி நின்று பார்க்கத் தெரிந்த கண்ணன், போருக்கு ஆதரவாளனும் இல்லை, எதிரானவனும் இல்லை என்கிறார். “கொலை செய்கிறவன் என்றும் சொல்லப்படுபவன் என்றும் யாருமில்லை” என்ற பார்வை உள்ள கண்ணனுக்கு, இரவு–பகல், அமைதி-யுத்தம், அன்பு-வன்முறை, பிறப்பு-இறப்பு எல்லாமே சமம்தான்” என்கிறார் ஓஷோ.(8-12)

“இருவேறு துருவங்களுக்கு நடுவில் தேர்ந்தெடுத்தே பழகியவன் மனிதன். சொர்க்கம் வேண்டும். நரகம் வேண்டாம். வெளிச்சம் வேண்டும். இருட்டு வேண்டாம். மகிழ்ச்சி வேண்டும். வலி வேண்டாம். வாழ்வின் இருவேறு இயற்கைகளுக்கு நடுவில் ஊசலாடும் மனித மனம், இரு வேறு எல்லைகளையும் ஒன்று போல் கருதி ஏற்கிற ஏற்கிற கண்ணனைப் புரிந்து கொள்ளாமல் ‘வன்முறையாளன்’ என்று- குற்றம் சாட்டுகிறது” என்கிறார் ஓஷோ.

கண்ணனின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த வெற்றிகளெல்லாம், வெல்ல வேண்டும் என்கிற வேகத்திலோ, வெறியிலோ நிகழ்ந்ததல்ல. அதற்கான எந்த முயற்சியையும் கண்ணன் மேற்கொண்டதாகவும் தெரியவில்லை. மிக இயல்பான பிள்ளை விளையாட்டின் பக்க விளைவுகள் போல் அந்த சம்பவங்கள் நடந்து முடிந்தன என்கிறார் ஓஷோ.

999 வசைமொழிகளைக் கேட்கும் வரைதான் கண்ணனுக்குப் பொறுமை இருந்தது என்று பொருளல்ல. ஓர் எல்லைக்குப் பிறகு அநீதியை வளர நீண்ட நேரம் பொறுத்திருந்த பிறகு சிசுபாலனைக் கொன்றான் கண்ணன் என்பது ஓஷோ தருகிற விளக்கம். (357)

ஆவேசமான தாக்குதலைத் தூண்டுவது பழியுணர்ச்சி. அந்தத் தாக்குதலை நிகழ்த்துவது வெறியுணர்ச்சி. இந்த உணர்ச்சிகள் மனிதனை ஆத்திரத்தின் உச்சிக்குக் கொண்டு சென்று அவனை நிலைகுலையைச் செய்கின்றன.

ஆனால், கண்ணன் ஸ்திதப்பிரக்ஞன். இசையும் வசையும் ஒன்றுதான் அவனுக்கு. பழியுணர்ச்சி-பகையுணர்ச்சி-வெறியுணர்ச்சி ஏதுமில்லாமல் நிற்கும் கண்ணன், பகைவர்களை அழிப்பதில்லை. தீமையை அகற்றுகிறான். அதனால், தாக்குதல் நிகழ்த்திய பலருக்கும் வருகிற குற்றவுணர்ச்சி கண்ணனுக்கு வருவதில்லை. புல்லாங்குழல் இசைப்பது போலவும், நடனமாடுவது போலவும் மிக இயல்பாக நடந்தேறுகிறது.

பகை முற்றி முதிர்வதை, பதட்டமானவனால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் நிபந்தனையில்லாமல் ஏற்கிற கண்ணன், தனக்கெதிராக முற்றி முதிர்கிற பகைக்கும் ஒரு மவுன சாட்சியாகவே திகழ்கிறான்.

கண்ணனை எதிரிகளால் பொறுமையிழக்கச் செய்ய முடியாது. அவன் முடிவு செய்தால் மறுகணம் தீமையை அழிப்பதோடு அதன் எவ்விதத் தாக்கமும் தன் மேல் படியாமல் சமநிலையில் இருக்க முடியும் என்பதைச் சொல்ல வருகிற ஓஷோ, ஜப்பானிய தாக்குதல் கலையிலிருந்தும் பொருத்தமான ஒப்பீட்டைத் தருகிறார்.

“ஜப்பான் நாட்டில் ஜூடோ என்கிற தாக்குதல் கலையும் ஜூ-ஜிட்சு என்கிற தாக்குதல் கலையும் உண்டு. இக்கலைகளில், முதலில் தாக்குபவனே தோற்பான் என்பது அதன் விதி. எனவே ஆவேசமான தாக்குதலை அமைதியாக எதிர்கொள்வதும், தாக்குதலை முதலில் முழு மனதோடு வாங்கிக் கொள்வதும் வெற்றிக்கு வழி” என்று சொல்கிற ஓஷோ, “ஒரு குடிகாரனோ குழந்தையோ கீழே விழுகிறபோது காயமின்றி எழுவதற்குக் காரணம், அவர்கள் உடலில் எதிர்ப்புணர்ச்சி இல்லாததுதான்” என்கிறார்.

கண்ணனைக் குறித்து ஓஷோவின் இந்த விளக்கங்களை உள்வாங்கிக் கொண்டு கண்ணன் பாட்டுக்கு வருகிறோம். ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.

 

மரபின் மைந்தன் ம.முத்தையா

(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *