‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’

தங்கள் அனுபவத்தில் இறைத்தன்மையை உணராதவர்கள்தான் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்வார்கள்.

உலகம் முழுவதும் தன் அனுபவத்தில் உணர்ந்து அவன் பெருமைகளை ஓத வேண்டும். அத்தகைய அருமைப்பாடு கொண்டவன் சிவபெருமான் என்கிறார் சேக்கிழார்.

“நிலவுலாவிய நீர்மலி வேணியன்”

ஒளியும் தண்ணீரும் எவ்வளவு முக்கியமோ, இறைவனும் அவ்வளவு முக்கியம்.

வெய்யில் காலங்களில் ஒரு மேசையும் இரண்டு பானையும் போட்டு தண்ணீர்ப்பந்தல் வைப்பவர்கள்கூட, அது யாரால் அமைக்கப்பட்டது என்பதைப் பலகைகள் வைத்துப் பிரபலப் படுத்துகிறார்கள். ஆனால் உலகம், வெளிச்சம், காற்று, தண்-ணீர் ஆகியவற்றை அனுபவிக்கும் போது அவற்றைப் படைத்த இறைவனின் நினைவு நம்மில் பலருக்கும் வருவதில்லை. அந்த நன்றியுணர்வை நமக்குள் கொண்டு வருவதற்கே,

“நிலவுலாவிய நீர்மலிவேணியன்” என்பதை நினைவூட்டலாகச் சொல்கிறார் சேக்கிழார்.

கடவுள், பாதுகாப்புணர்வின் அடையாளம், உயிருக்க-ஞ்சி அடைக்கலமாய் வந்தவன் சந்திரன் என்பது புராணச் செய்தி. அடைக்கலமாய் வந்தவன் உயிர்ப்பயம் சிறிதுமில்லாமல், கடவுளின் சடையாகிய கங்கைக் கரையில் உலவுகிறான் நிம்மதியாக…

இது முழுமையான பாதுகாப்புணர்வின் குறியீடு.

அழகில் சோதியன் என்பது, இறைவனின் எல்லையில்லாத தன்மையினையும், ஒளி பொருந்திய இயல்பையும் உணர்த்துகிறது. சோதி, கண்ணுக்குக் குளுமையானது. தீபத்தில் ஏற்றப்பட்ட சோதியை எத்தனை நேரம் வேண்டுமானாலும் கண்ணாரக் காணலாம். இறைவன் எல்லையில்லாத இயல்பினன் என்றாலும்கூட, அழகின் உச்சம் என்பதையும் காட்டுகிறார் சேக்கிழார்.

“அம்பலத்தாடுவான்” என்பதற்கு எத்தனையோ நுட்பமான விளக்கங்கள் உண்டு. இதயமாகிய அம்பலம், பொன்னம்பலம் என்று சொன்னாலும் நவீன யுகத்தில் றிமீக்ஷீயீஷீக்ஷீனீணீஸீநீமீ என்கிற பொருளில் அம்பலத்தாடுவான் என்ற சொல்லை உணர முடியும்.

அதே போல் வெளிப்படையானவற்றை இரகசியங்கள் அற்றவன் என்பதற்கும் இந்தச்சொல் பொருத்தமாகத் தோன்றுகிறது. சிவபெருமான் நடனமாடும் திருமன்றுக்கு “பொது” என்றொரு பெயரும் உண்டு.

பொதுவாழ்வில் இருப்பவர்கள் குறிப்பாக ஆன்மீகப் பாதையில் நடப்பவர்கள் ரகசியங்கள் அற்றவர்களாக இருக்க வேண்டும். ரமண மகரிஷி, இரவும் பகலும் பக்தர்கள் பார்வையில் படும் வண்ணமே இருப்பார். சித்பவானந்தர் எல்லோரும் காணக்கூடிய விதமாய் கண்ணாடிக் கதவு கொண்ட அறையிலேயே உறங்குவார்.

அத்தகைய இறைவனின் திருவடிகளைத் தொழுவோம் என்று தொடங்குகிறது பெரிய புராணம்.

 

மரபின் மைந்தன் ம.முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *