அதேபோல சிவஞானம் கைவரப்பெற்று திருஞானசம்பந்தர் தேவாரம் பாடத் தொடங்கி இறைநெறியில் ஈடுபட்ட கால கட்டம் அவருடைய மூன்றாவது வயதிலிருந்து துவங்குகிறது. அப்போதே தன் துணைவியார் மதங்கசூளாமணியோடு பங்குபெற்று திருஞானசம்பந்தரின் பதிகங்களை யாழிலிட்டு வாசித்து பாடுகிற தொண்டிலே ஈடுபட்டவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். அதற்கு துணையாக இருந்தவர் அவர் துணைவியார் மதங்க சூளாமணியார்.

திருச்சாத்த மங்கை என்கிற திருத்தலத்தில் அந்தணர் குலத்திலே தோன்றி ஒருவராகிய திருநீல நக்கர் இல்லத்திற்கு திருஞானசம்பந்தர் எழுந்தருளினார். அவரோடு திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மதங்க சூளாமணியும் வந்திருந்தனர். அவர்களைத் தங்க வைக்க, தான் தினமும் வேள்வியேற்றுகிற வேள்விச்சாலையினை ஒதுக்கித் தந்தார் திருநீலநக்கர். தாழ்த்தப்பட்ட இனத்தவர் என்று கருதப்பட்ட திருநீலகண்ட யாழ்ப்பாணரை வேள்விச் சாலையில் தங்க வைத்ததன் காரணம், அடியவர்கள் சாதி பேதம் பாராட்டியவர்கள் அல்லர் என்பதனை சேக்கிழார் நிறுவுகிறார்.

அதே போல திருப்புகலூரில் இறைவனுக்கு மலர் தொடுக்கிற பணியிலிருந்த முருக நாயனார் திருமடத்திலேயும் திருஞானசம்பந்தர் தங்கியிருக்கிறார். அவர் அந்த நாயன்மார்களின் திருப்பெயரை பதிகத்திலே வைத்து பாடுகிறார். திருச்செங்காட்டங்குடிக்கு தன் ஐந்தாம் யாத்திரையின் போது வந்த திருஞானசம்பந்தரை சிறுத்தொண்டர் வரவேற்கிறார்.

தன்னுடைய பதிகத்தில் சிறுத்தொண்டர் பெயரை மட்டுமல்லாது அவருடைய புதல்வர் சீராளரின் பெயரையும் வைத்து பதிகம் பாடினார்.

அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றான திருக்கடவூரில் குங்குலியக்கலய நாயனாரின் இல்லத்தில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் சேர்ந்து தங்கியிருந்திருக்கிறார்கள். மதுரை யாத்திரையின் போது மங்கையர்க்கரசியரோடும் குலச்சிறையாரோடும் சேர்ந்து சைவத்தொண்டு செய்த திருஞானசம்பந்தர் கூன்பாண்டியனை கூன் நிமிரச்செய்து கூன்பாண்டியன் எனும் நின்ற சீர் நெடுமாறன் என்ற பெயர் கொண்டு ஒரு நாயன்மாராகப் பரிமளிக்கிற அளவுக்கு அவருக்கு துணை செய்திருக்கிறார்.

அதேபோல் காலத்தால் இவர்களுக்கு சற்றே பிற்பட்ட சுந்தரமூர்த்தி நாயனாரும் தான் வாழுகிற காலத்தில் அடியார்களோடு நெருங்கிப் பழகியிருக்கிறார். சிவபெருமானையே தன் காதலுக்கு தூதாக அனுப்பியவர் சுந்தரர் என்ற செய்தி கேட்டு ஏயர்கோன்கலிக்காமர் இதயத்தில் சுந்தரர் மீது வெறுப்பு தோன்றியது.

இருவரும் நண்பர்களாக ஆவதற்கு சிவபெருமானே சில சூழல்களை ஏற்படுத்தித் தந்தாக பெரியபுராணம் சொல்கிறது. அவர்கள் நண்பர்களாகினர். அதே போல கழறிற்றறிவார் என்று பேசப்பட்ட சேரமான் பெருமான் நாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரோடு மிக நெருக்கமான தொடர்பு கொண்டு அவரோடு சேர்ந்து கைலாயம் செல்கின்ற அரிய பேற்றினைப் பெற்றார்.

திருநாவுக்கரசையே தன் குருவாகக் கொண்டு அவரையே வழிபட்டு வந்து காணாத நிலையிலேயும் அவர் மேல் கரைகாணாத காதல் கொண்ட அப்பூதியடிகள் வரலாற்றையும் நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். எனவே சிவனடியார்கள் என்பவர்கள் தங்களுக்குள் எவ்வித பேதமும் பாராட்டாதவர்கள் என்பதும் அவர்களுடைய மனமுழுதும் தொண்டு பக்திமை போன்ற பண்பாடுகளிலேயும் நிலை கொண்டிருந்ததே தவிர யான், எனது என்ற தன் முனைப்பிற்கும் துளியளவும் இடம் தராதவர்கள் என்பதைப் பார்க்கின்றோம்.

 

மரபின் மைந்தன் ம.முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *