ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார். அவரது வெற்றிக்கெல்லாம் யார் வழிகாட்டி என்று நிருபர்கள் கேட்டார்கள். “இவர்தான்” என்று சுட்டிக்காட்டினார். அவர் காட்டிய திசையில், தங்க ஃபிரேம் போட்டு ஒரு பென்சில் புகைப்படம்! நிருபர்கள் திகைத்தார்கள். அவர் சொன்னார், “இந்தப் பென்சில் எனக்கு 5 விஷயங்களைக் கற்றுத் தந்தது.”

– பல விஷயங்களை எழுதுவதற்கும், வரைவதற்கும் தன்னை முழுமையாக நாம் கைகளில் ஒப்படைக்கிறது.

– அவ்வவ்போது நாம் அதை சீவுகிறோம். சீவும் போதெல்லாம் கூர்மையடைகிறது.

– தவறுகள் செய்தாலும், அவற்றை அழிப்பதற்கு இடம் கொடுக்கிறது.

– வெளியே எப்படியிருந்தாலும் உள்ளே உடையாமல் ஒரு சீராய் இருக்கிறது.

– சின்னஞ்சிறு பென்சிலாகும் அளவு சீவப்பட்டாலும் எழுதிக் கொண்டிருக்கிறது. கடைசிவரை தன் சுவட்டினைக் காகிதத்தில் பதிக்கிறது.

இதைப் பார்த்துதான் என் வாழ்க்கையை நான் சீரமைத்துக் கொண்டேன்.

– பல அரிய விஷயங்களை நிகழ்த்த நான் ஒரு கருவிதான் என்கிற அடக்க உணர்வோடு என்னைக் கடவுளின் கைகளில் ஒப்படைத்திருக்கிறேன்.

– சோதனைகள் வரும்போதெல்லாம், மேலும் மேலும் கூர்மையாக்கிக் கொள்கிறேன்.

– தவறுகள் செய்திருப்பதாகத் தெரிந்தாலும் உடனே திருத்திக் கொள்கிறேன்.

– வெளிச்சூழலில் புகழ் வந்தாலும் பழிச்சொல் வந்தாலும் உள்ளே உடையாமல் உறுதியாக இருக்கிறேன்.

– கடைசிவரையில் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் & காலத்தில் நம் சுவட்டைப் பதித்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு, பெரிய பெரிய விஷயங்கள் பென்சிலில் இருப்பது புரிந்தது!

மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *