பட்டிமண்டபத் தலைப்பு என்று கருதி இதை அப்படியே சாலமன் பாப்பையாவுக்கு அனுப்பி விடாதீர்கள்! தேர்வுக் காலம் நெருங்க நெருங்க பிள்ளைகளை விடவும் பெற்றோர்கள்தான் பதற்றத்தோடு வலம் வருவார்கள். தேர்வெழுதப் போவதென்னவோ பிள்ளைகள்தான் என்றாலும் அக்கறை காரணமாய் பெற்றோர்களும் பாடம் படிக்கத் தொடங்குவது வழக்கமாகி வருகிறது. ஒருவேளை பெற்றோர்களும் டியூசன் கற்றுக் கொள்ளத் துவங்கலாம்.

இந்த அக்கறையை – ஆர்வத்தை இன்னும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தினால், உங்கள் பிள்ளைகள் தேர்வில் சிறந்து விளங்கப்போவது உறுதி. சிறுபிள்ளைகள் தொடங்கி, 10, 12 என்று படிக்கும் மாணவர்கள் உங்கள் இல்லங்களில் இருக்கக்கூடும்.

எனவே, பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமாக சேர்த்து சில விஷயங்களை இப்போது சிந்திப்போம்.

“அவசரத்தில் கையை விட்டால் அண்டாவிற்குள் போகாது” என்பது பழமொழி. நிதானமாக நடுக்கமில்லாமல் ஒன்றைச் செய்வதே, அதனை நன்றாகச் செய்வதற்கு நல்ல வழி. இந்த இலக்கணம் தேர்வுக்கு நிச்சயம் பொருந்தும். அதற்கு வீட்டில் அமைதி வேண்டும்.

குழந்தைகள் தேர்வுக்குத் தாயராகும்போது அந்த இல்லம் முழுவதும் பர வேண்டியவை ஆரோக்கிய அதிர்வுகள். நேர்மறை எண்ணங்களின் அலைகள். “எங்கள் பிள்ளை நன்கு தேர்வுகள் எழுதுவதும், நிறைய மதிப்பெண் பெறுவதும், நிச்சயம் – நிச்சயம் – நிச்சயம்” என்கிற வாசகத்தை மனதுக்குள் ஒரு மந்திரம் போல் ஒலிக்கவிட வேண்டும். அவை வெறும் வார்த்தைகளாக இல்லாமல் உறுதியான நம்பிக்கையாக உள்ளத்திற்குள் உருவெடுப்பது மிகமிக முக்கியம்.

அடுத்தது, உங்கள் பேச்சு. அலட்சியமாய் இருக்கும் பிள்ளையை அச்சுறுத்தியாவது படிக்க வைக்கும் ஆசையில் பல பெற்றோர்கள் அவநம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை சிலநேரம் சொல்லிவிடுவதுண்டு. அது பிள்ளைகளின் ஆழ்மனதில் தங்கி மெல்ல மெல்ல ஒரு தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தும்.

குழந்கைகளின் முதல் உலகம், பெற்றோர்கள்தான். அவர்களை நீங்கள் எப்படி விமர்ச்சிக்கிறீர்களோ, அது அப்படியே அவர்கள் மனதில் பதியும். எனவே, நீங்கள்தான் அவர்களுக்கு நிலைக்கண்ணாடி. அவர்கள் நிலையை உணர்த்தும் கண்ணாடி. உங்கள் பேச்சில் தெரியும் அவர்களின் பிம்பத்தை நிஜமென்று நம்புகிறார்கள். ஒருவேளை அவர்களிடம் குறைகள் இருந்தாலும் அவற்றை சரிசெய்யும் சக்தி உங்கள் எண்ணங்களிலும் பேச்சிலும் உண்டு.

முக்கியமாகத் தேர்வு நேரங்களில் பிள்ளைகளை ஊக்குப்படுத்துங்கள். அடுத்த வீட்டு மாணவன் படிப்பறையில் இரவு இரண்டு மணி வரை விளக்கெரிந்தால் அத்தனை நேரம் உங்கள் வீட்டுப் பிள்ளையும் படித்தே ஆக வேண்டுமென்று ஒப்பிடாதீர்கள். எவ்வளவு நேரம் படிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. எவ்வளவு கவனத்துடன் படிக்கிறார்கள் என்பதே முக்கியம்.

சில பெற்றோர்கள், குழந்தைகளை மனப்பாடம் செய்து கொள்ளத் தூண்டுகிறார்கள். பிள்ளைகள் கிளிப்பிள்ளைகளாகக் கூடாது. விஷயத்தைப் புரிந்துகொண்டு வெளிப்படுத்தும்போதுதான் அவர்களின் தனித்தன்மை வெளிப்படும். Understanding என்ற சொல்லுக்கு ஓஷோ விளக்கம் தருகிறபோது, “in that state, everything else stands under you’’ என்பார்.

பாடங்களைப் புரிந்து படிக்கும்போது அதன்மேல் அவர்களுக்கு ஆளுமை இருக்கும்.

கண்விழித்துப் படிக்கும்போது ஆளுயர பிளாஸ்க்கில் காபி – டீ கலந்து வைத்துக்கொண்டு, அம்மாவும் பிள்ளையும் அநேக வீடுகளில் அமர்ந்திருப்பார்கள். இது தவறு. தேர்வு காலங்களில் முடிந்தவரை பிள்ளைகளுக்கு காபி – டீ கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

கூட்டுப்படிப்பு என்கிற கம்பைண்ட் ஸ்டடி தற்போது பிரபலமாகிவருகிறது. உங்கள் பிள்ளையுடன் சேர்ந்து படிக்கும் மாணவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டு பிறகு அனுமதியுங்கள். நல்ல பழக்கமுள்ள மாணவர்களுடன் சேர்ந்து படிப்பது தேர்வு காலங்களில் மிக உதவியாக இருக்கும்.

தேர்வுக்குக் குழந்தைகளைத் தயார்ப்படுத்தும் பெற்றோர்களே! மிகுந்த நம்பிக்கையோடும், நேர்மறையான உணர்வுகளோடும் உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளையின் வெற்றி நிச்சயம்!

மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *